Writer4                          

                                  நூவாசிரியர் பேனாவிலிருந்து…

கதைகள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒரு விதம். பாட்டி சொன்ன கதைகள் , உண்மைக் கதைகள் , காதல் கதைகள், உருவகக் கதைகள் , நாட்டுப்புறக் கதைகள் . மரபுவழிவந்த கதைகள் , பேய்க்கதைகள் , துப்பறியும் மர்மக் கதைகள் , விஞ்ஞானக் கதைகள் . தத்துவக் கதைகள் , இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். காலத்தோடு கதைகள் சொல்லும் விதம் மாறுகிறது. சமூகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனையைக் கருவாக வைத்து பல கதைகள் எழுதினாலும் யாதார்த்தமாக, உண்மையாக வாழ்க்கையில் நடப்பதை எழுதுவது குறைவு. அப்படி ஒரு யதார்த்தமான கதையை எழுதினால் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழும்புகிறது. திருமணத்திற்கு முன்னர் ஒரு தமிழ் பெண் ஆடவனுடன் உடலுறவு வைத்து கொள்ளலாமா என்ற கேள்விக்கு ஒரு சினிமா நடிகை பதில் அளித்தது தமிழ் நாட்டில் ஒரு புரட்சியையே உருவாக்கிவிட்டது என்பது பலருக்கு தெரியும். அக்கருத்தைப் பின்னனியாக வைத்து ஒரு சிறகதை கூட எழுதலாம்.

மகாபாரதத்தின் முக்கிய கதாப் பாத்திரங்களில் பாண்டவரின் தாய்  குந்தியும் ஒருவள். குந்தி திருமணமாகமுன் கர்ணனை ஈன்றெடுத்தவள். பாண்டவர்களின், மனைவி திரொளபதி ஐவருக்கு மனைவியானாலும் அவளைத் தெய்வமாக மதிக்கிரார்கள். எக்காரணத்தால் ஒரு சினிமா நடிகை சொன்ன தனிப்பட்ட கருத்திற்கு கண்டனங்கள் தெரிவித்தார்கள் என்பது புரியாத புதிர். குந்தியும் பாஞ்சாலியும் புராணக்கதை பாத்திரங்கள் என்பதாலா? அகலிகை என்ற சிறுகதையை எழுதி புதுமைப் பித்தன் புதுமை படைத்தான்.

என் கதைகள் பெரும்பாலும் நான் அறிநத சம்பவங்களை கருவாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஒவ்வொரு கதைக்கும் உயிருண்டு. தனிச் சுவையுண்டு. அதற்கு உயிரூட்டுவது கதையை எடுத்துச் சொல்லும் விதம். ஆரம்பத்தில், இரண்டொரு அத்தியாயங்களை வாசித்தவுடன் கதையை தொடர்ந்து வாசிக்கலாமா விடவா என்ற தீர்மானத்தை வாசகர் எடுத்துவிடுகிறார். கதையைத் தொடர்ந்து வாசிக்கும் போது முடிவு என்னவாக இருக்கும் என்ற சிந்தனையை எழுத்தாளன், வாசகனிடம் தோற்றுவிக்க வேண்டும்.

பார்வை ” என்ற தலைப்பில் வெளியாகும் இந்த சிறு கதைத் தொகுப்பை உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்.. முதலாம் கதையான பார்வை ஒரு பகைப்படயாளரின் பல கோணப் பார்வைகள் பற்றியது. இக்கதையை நான் எழுதும் போது என்மனதில் நின்றவர் பிரபல இயக்குனரும் புகைப்பிடிப்பாளருமான காலம்சென்ற பாலு மகேந்திரா. இத்தொகுப்பில் உள்ள 21 கதைகள் பெரும்பாலும் உண்மை சம்பவங்களைக் கருவாக வைத்து கற்பனை கலந்து பின்னப்பட்டவை. ஒரு சிறுகதை எழுத்தாளனுக்கு கதையின் கரு, மின்னல் போலத் தோன்றும். ஒரே விடயத்தை திருப்பித் திருப்பி வாசிக்கும் போது வாசகர்களுக்கு அலுப்புத் தட்டிவிடும் என்பது என் கருத்து.

ஒவ்வொரு கதைக்குப் பின்னால் ஒரு அனுபவமும், தத்துவமும் அடங்கியள்ளது, சில கதைகளில் யதார்த்தமும் மறைந்திருக்கிறது. நான் எழுதும் போது அந்தக் காட்சி திரைப்படம் போல் என் கண் முன் வந்து காட்சியளிக்கும். ஒரே முழு மூச்சாக நான் எழுதி முடிக்கும் மட்டும் அந்த கதாப்பாத்திரஙக்ள் என்னோடு உறவாடும். எழுதி முடிந்தபின்னரே என் மனதை விட்டு பிரியமனமில்லாமல் பிரியும்.

“செய்யும் தொழிலே தெய்வம்” எமது பழைய மரபு வழி வந்த தொழில் ரீதியான கொள்கைக்கு எதிரானது. சாதி வழிவந்த தொழிலையே நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில்லை. இக் கருவினை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை தான் செய்யும் தொழிலே தெய்வம்.

“வடு” என்ற கதை யதாhத்தமான கதை. எமக்குள் இருக்கும் பாலுணர்ச்சி என்ற உணர்வு எப்போது மிருகமாக மாறுகிறது என்பது எவருக்கும் தெரியாது. அதனை கருவாக வைத்து அக்கதை எழுதப்பட்டது.

உறவுகள் பல விதம். ஆண் பெண் உறவு சட்டப் பூர்வமானது. பெண்ணுக்கும். பெண்ணுக்கும் இடையிலான உறவும (Lesbianism), ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலான உறவும்  (Gay) வாயில் விரல் வைத்து சிந்திக்க வைக்கிறது. பல நாடுகளில் இந்த உறவு சட்டப்படி தடைச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த உறவினை எந்த நோக்கத்தோடு பார்க்கிறேம் என்பது ஒரு தனிமனிதனைப் பொறுத்தது

“சுமை” என்று கதை என் மனதில் தோன்றியதே ஒரு தனிக்கதை. யாழ்ப்பாணத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தில், போக்குவரத்துக்கு சைக்கிள் எவ்வளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மீன் விற்பனை செய்பவன் முதல், டியூசனுக்குப் போகும் மாணவ மாணவிகள், தொழிலாளிகள், குடும்பங்கள் எல்லோரையும் சுமந்து செல்கிறது. அப்படத்தைப் பார்த்து விட்டு என் நண்பர் அதற்கு சுமை என்ற சுருக்கமான தலையங்கத்தை கொடுத்து கதை எழுதச் சொன்னார். படத்தை உற்று நோக்கினேன் உடனே பிறந்தது கதை.

சிறீலங்காவில் மட்டுமல்ல இந்தியாவில் கூட குடைக்கு இருக்கும் மதிப்பை பலர் அறிந்ததே. கொழும்பு கால் பேஸ் மைதானத்திலும் , விகாரமாதேவி பூங்காவிலும் குடைக்கு பின்னால் காதலர்கள் பேசும் கதைகள் பல, ஆனால் இந்த குடை என்ற தலைப்பினைக் கொண்ட சிறுகதை மனிதாபிமானத்தோடு தொடர்புள்ளது.

விதவைத் திருமணத்தை கருவாகக் கொண்ட கதை “விதவை”. இவை போன்று ஒவ்வொரு கதையினது பார்வை வேறுபட்டது.

சரி என் கதைகளைப் பற்றி நான் கதை அளக்காமல் உங்களை வாசிக்க விடுவது தான் முறை. கதைகளை வாசித்து, இரசித்து, அலசி ஆராய்ந்து உங்கள் விமர்சனங்களை நல்லதோ கெட்டதோ எனக்குத் தந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். இவற்றில் சில கதைகள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த அனுபவங்கள் , அறிந்த கதைகளுடன் கூடப் பொருந்தலாம்.
நன்றி

பொன் குலேந்திரன்
மிசிசாகா – ஒன்றாரியோ
கனடா

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book