Bypass surgery1

         சின்ன வீடு

ஆதவன் அழகன். உயரமானவன். சூரியனைப்போல் பிரகாசமான கண்கள். தோற்றத்தில் ஒரு கம்பீரம். நடையில் தனி மிடுக்கு. பேச்சில் ஒரு துடுக்கு. சிரிப்பில் ஓரு கவர்ச்சி. ஆதவன் அழகாக ஆடை அணிந்து வந்தால் அவைனை பார்த்தவர்கள் ஒரு சினிமா நடிகன் என்றே நினைப்பார்கள். யாராவது இயக்குனர்கள் அவனைப் பார்த்து விட்டால் தாங்கள் எடுக்கும் படத்துக்கு; கதாநாயகனாக தேரிவு செய்ய சற்றும் தயங்கமாட்டார்கள். காதல் மன்னன் ஜெமினி கணேசனைப் போல் “அழகரசன் ஆதவன்” என்று பட்டப்யெர் வைக்க இரசிகர்கள் தயங்க மாட்டார்கள்.  அவனது தோற்றத்துக்கு ஏற்ற ஒரு அழகியை பெண்ணை கதாநாயகியாக தேர்ந்தெடுப்பது சற்று கடினம்.

வாழ்க்கையில் பொறுப்பற்றவனாக வாழ்பவன் ஆதவன். சிறுவயதில தாயை இழந்தவன். பாட்டியாரின் பராமரிப்பில் வளர்ந்தவன். தந்தை மகேசன் ஒரு பரிபல்யமான கிரிமினல லோயர். பல குற்றவாளிகளுக்கு தண்டணை கிடைக்காமல் வாதாடி வென்றவர்.  அவருககு மகனைப் பற்றி கவலை இல்லை. தன் தொழில தான் அவருக்கு முக்கியம். மகனின் போக்கைப் பற்றி அவருக்கு பல புகார்கள் வந்ததால் ஆதவனோடு பேசுவதைத் தவிர்த்தார்.

“பிளேய் போய்” (Play Boy) என்று பலரால் அழைக்கப்பட்ட ஆதவனுக்கு கல்லூரியில்   படிக்கும் போது “கேர்ல் பிரண்ட்ஸ்” அனேகர். அவனுடைய நட்புக்காக பெண்கள் ஏங்கித்தவித்தவர்கள் பலர். அவனை காதலித்து பின்னர் கைவிடப்பட்ட பெண்களில் ஒருத்தி; தற்கொலைசெய்தது பலருக்கு தெரிந்த கதை.  ஆதவன் பிலேய் போய் என்று பெயர் வாங்கினாலும் படிப்பில் மட்டும் கவனம். படித்து இருபத்தைந்து வயதில் என்ஜனியாரனவன். ஆதவனின் அதிர்ஷ்டம் படித்துப் பட்டம் பெற்ற சில மாதங்களுக்குள் ஒரு அமெரிக்கன் கொம்பெனியில் பெரிய சம்பளத்தில் பல சலுகைகளோடு அவனுக்கு வேலை கிடைத்தது.

நெலும்” என்ற பெயரில்  இருபது வயது சிங்களப்பெண் ஒருத்தி ஆதவனுக்கு ஸ்டெனோ கிராபராகவும் செக்கரட்டரியாகவும் நியமிக்கப்பட்டாள். சிங்களத்தில் “நெலும்” என்றால்  அழகிய தாமரை என்பது அர்த்தம். பெயருக்கு ஏற்ற அழகி அவள். கண்டியில் பிறந்து வளர்ந்தவள். தனது பரம்பரை, கண்டியை ஒரு காலத்தில் ஆண்ட நாயக்கர் வம்சத்தினர் என்று பெருமையாக நெலும் அடிக்கடி ஆதவனுக்கு சொல்லிக்கொள்வாள். “ அப்போ உன்னில் தமிழ் ரத்தம் ஓடுது என்று சொல்” என்பான் வேடிக்கையாக ஆதவன்.

வேலை கிடைத்த சில மாதங்களில் பணக்கார இடத்தில். உர்மிளாவை நல்ல சீதனத்தோடு திருமணம் செய்து கொண்டான் ஆதவன். தனி பங்களா, வெளிநாட்டுக் கார் , பாங் சேமிப்பில் ஐம்பதாயிரம். ஆதவன் உர்மிளாவின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இரண்டு வருடங்கள் கழிந்தன. “ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” என்பது போல் ஆதவனுக்கு உர்மிளாவோடு வாழ்ந்து அலுப்பு தட்டிவிட்டது. எத்தனை நாளைக்குத்தான் ஒரே உணவைத்தான் உண்பது? பல பெண்களோடு தொடர்பு வைத்திருந்த ஆதவனுக்கு நெலும் மேல் ஒரு தனிப்பட்ட ப்ரியம் ஏற்பட்டது. அவர்களிடையே உறவு நட்பாக ஆரம்பித்து காதலில் முற்றுப்பெற்றது. வேலை முடிந்தபின்னர் நெலுமோடு சினிமாவுக்கும், ரெஸ்டொரண்டுகளுக்கு போய் வரத் தொடங்கினான் ஆதவன். அவன் வேலை சம்பந்தமாக பல இடங்களுக்குப் போகும் போது நெலுமையும் அழைத்து செல்வான். ஹோட்டலில் ஒரே அறையிலேயே இருவரும் தங்குவார்கள்.

ஆதவன் திருமணமானவன் என்பது நெலுமுக்கு தெரிந்திருந்தும் அவன மேல் அவளுக்கு இருந்த காதல் எல்லை மீறி தன்னை திருமணம் செயது கொள்ளம்படி ஆதவனை கேட்கும் அளவுக்குப் போய்விட்டது.

“நெலும், நான் ஏற்கனவே திருமணமானவான். எனது இரு வருட தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கவில்லை. எனக்கும் என் மனைவிக்கும் இடையே எப்பவும் வாக்குவாதங்கள். அவள் சிக்கனக்காரி. அவளது தகப்பனும், சகோதரனும் எதைச் சொன்னாலும் மீறமாட்டாள். எனக்கு ஏன் அவளைத் திருமணம் செய்தோம் என்றாகிவிட்டது. அப்படி இருந்தும், உன்னைத் திருமணம் செய்வது என்றால் என்மனைவி உர்மிளாவை விவாகரத்து செய்யவேண்டும். அவள் கொண்டு வநத சொத்து எவ்லாவற்றையும் நான் இழக்க வேண்டி வரும். அது அவ்வளவுக்கு உசிதமான காரியமாக எனக்குத் தெரியவில்லை. நாமிருவரும் தொடர்ந்தும் திருமணமாகாவிட்டாலும் கணவன் மனைவி போல் வாழ்வோம். என்ன சொல்லுகிறாய்”? ஆதவன் நெலுமைக் கேட்டான்.

“ நான் உமக்கு சின்ன வீடாக இருப்பதா? சமுதாயம்   எங்களைப் பற்றி என்ன பேசும்”?, நெலும் ஆதவனைக் கேட்டாள்.

“ஏன் கண்டியின் கடைசி நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீ விக்கிரமராஜசிங்காவுக்கு நான்கு மனைவிகள் இருந்ததில்லையா? கேள்விபட்டிருப்பியே”

“ நல்லாக இருக்கிறது உமது நியாயம். அவன் ஒரு அரசன். அவன் தான் நினைத்ததை செய்யலாம். நீர் சாதாரண குடிமகன். சட்டம் என்று ஒன்று இருக்கிறதே, ஆதவன் உமக்கு நான் சின்ன வீடாக இருப்பதற்கு உமது மனைவிக்கும்; அவளது பெற்றோருக்கும் சம்மதமே?”

“அவர்கள் சம்மதம்  எனக்குத் தேவையில்லை. என்போக்கை அவர்களால் மாற்றமுடியாது. நீர் தொடர்ந்து எனக்கு சின்னவீடாகவே இரும். உமக்கு வேண்டியதை கனவன்போல் கவனித்துக் கொள்வேன்.”

நெலும் சிந்தித்தாள். அவளுக்கு ஆதவனோடு உறவைத் துண்டிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. கணவன் மனைவி போல் இருவருடங்கள் வாழந்துவிட்டாள்.

“இதற்கு ஒரே வழிதான உண்டு.  எங்கள் உறவினால் குழந்தையொன்று எஙகளுக்கு கிடைக்காமல் நடந்துகொள்வது  தான் சரியான வழி என எனக்குப் படுகிறது” என்ன சொல்லுகிறீர் ஆதவன்”. நெலும் கேட்டாள்.

“ எது உன் விருப்பமோ நெலும் அதன் படி நடக்கிறன். உன்னை என்னால் மறக்கமுடியாது.” ஆதவன் நெலுமின் யோசனைக்கு கட்டுப்பட்டான். தொடர்ந்து நெலும் ஆதவனின் சின்ன வீடாகவே இருந்தாள்.

                                                                                       ♣♣♣♣♣

எவர் வாயை அடைத்தாலும் ஊர் வாயை அடைக்க முடியாது என்பார்களே அதே போல் ஆதவன்- நெலும் உறவு உர்மிளாவுக்கும் அவளின் பெற்றோருக்கும் விரைவில் தெரியவந்தது, ஆதவன் தன் உறவை மறுக்கவில்லை. தன்னால் நெலுமை மறக்க முடியாது என்று திட்டவட்டமாக மனைவிக்கும் அவளின் பெற்றோருக்கும் சொல்லிவிட்டான். ஆதவன் வெலை நிமித்தம்; அடிக்கடி வெளியிடங்களுக்குப் போய் வருவதாக அவனோடு வேலைசெய்பவர்கள் உர்மிளாவுக்கு, ஆதவன் நெலும் உறவைப்பற்றி பல விதமான வதந்திகளைப் பரப்பினார்கள். உர்மிளா படிப்படியாக ஆதவனை வெறுக்கத் தொடங்கினாள். அவர்களுக்கிடையேலான தாம்பத்திய உறவு பாதிக்கபட்டது. அவர்களுக்கு குழந்தையிலாததும் அவர்களின் உறவுக்கான பாலமாக அமையவில்லை.

காலப்போக்கில். ஆதவனின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. முதலில் இருதய நோய் என்று ஆதவன் நினைத்தான். பல பரிசோதனைகளுக்கு பின் அவனது இரு நீரகங்களும்  வெகுவாக பாதிப்படைந்திருப்பதாக டொக்டர்கள் கண்டுபடித்தனர். டயாலிசிஸ் (Dialysis) செய்வது அவ்வளவுக்கு உசிதமல்ல. இதற்கு மாற்று வழி ஒரு நீரகமாவது ஆரோக்கியமான மாற்று நீரக ஒப்பிரேஷன் செய்தாக வேண்டும் என்று டொக்டர்களின் ஆலோசனை ஆதவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. உர்மிளாவுக்க தன கணவனுடைய இரு நீரகங்களும் பாதிபடைந்திருப்பதைப் பற்றி கேள்விபட்டதும் அவளது போக்கில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. ஆதவனோடு பேசுவதைக் குறைத்துக்கொண்டாள். எங்கே தனது இரு நீரகங்களில் ஒன்றை தனக்குத் தானம் செய்ய ஆதவன் கேட்டுவிவானோ என்ற பயம் வேறு அவளுககுத்க தோன்றியது.

தனது பிரச்சனையை நெலுமுக்கு ஆதவன் எடுத்தச்சொன்னாhன். ஆதவனின் தேகநலம் இப்படி இளம் வயதில் பாதிபடையும் என்று நெலும் எதிர்பார்க்கவில்லை. ஆதவனின் பிரச்சனைக்குத் தீர்வு காண சில தினங்களாக தனக்குள் நெலும் போராடினாள். முடிவில் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். மனைவியும், உறவினர்களும் ஆதவனுக்கு உதவ முன் வராததைச் சிந்தித்து கவலைப்பட்டாள். முடிவில் ஒரு நாள் ஆதவனிடம்.

“டார்லிங் உங்களோடு ஒரு முக்கிய விஷயம் பேசவேண்டும்; என்று பீடிகையோடு பேச்சை ஆரம்பித்தாள் நெலும்.

“ என்ன விஷயம் சொல்லேன் நெலும்”.

“ உங்களது கிட்னி டிரான்ஸ்பிளான்டைப் பற்றியது. பொருத்தமான நீரகம் ஒன்றை விலை கொடுத்து வாங்க உங்களிடம் போதிய பணம் இல்லை. உங்கள் மனைவியும் மாமனாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை என்று சொன்னீர்கள். அதோடு உங்கள் சுயமரியாதை அவர்களிடம் நிதி உதவி கேட்க விடாது. உங்கடை பிரச்சனைக்கு ஒரே வழி மட்டும் தான் உண்டு ஆதவன். நான் நன்றாக யோசித்தப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறன்” என்றாள் கரிசனையோடு நெலும்”

“ என்ன முடிவு எடுத்திருக்கிறாய் நெலும்?”

“ அமைதியாக நான் சொல்வதைக் கேளுங்கள். எனது இரு சீறுநீரகங்களில் ஒன்றை உங்களுக்கு நான் தானம் செய்யத் தீர்மானித்திருக்கிறன். என் நீரகம் உங்களுக்குப் பொருந்தினால் நான் உங்களது சின்ன வீடு என்ற உரிமையில் உங்கள் சம்மதத்தை கேட்கிறேன்” என்றாள் அமைதியாக நெலும்.

ஆதவனுக்கு அவள் சொன்னது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த வயதில் இப்படியொரு தியாக மனப்பான்மை உள்ள ஒரு பெண்ணா நெலும் என்றது அவன் மனம். அவளைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தான் ஆதவன்

 

♣♣♣♣♣ ♣♣♣♣♣♣

 

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book