Hair saloonசெய்யும் தொழிலே தெய்வம்

என் தலை மயிர் வளர்ந்து ஹிப்பியைப் போல் நான் தோற்றமளித்தேன். வருகிற சனிக்கிழமை சொந்தக்காரர் ஒருவரின் மகளுக்குத் திருமணம். “இந்த தோற்றத்தில் திருமணத்துக்குப் போனால் பலர் பார்த்து பலவிதமாக கதைப்பினம். போய் தலைமயிர் வெட்டாமல் வீட்டை வரவேண்டாம்” என்ற என் மனைவியின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் ஒரு நல்ல சிகையலங்கரம் செய்யும் கடையாகத் தேடிக்கொண்டு சென்றேன். பல முறை போன கடைக்குப் போய் தெரிந்த பெண்களின்  விரல்களின் தடவலை அனுபவித்த என் தலை. இந்த முறை ஒரு புது இடத்தை நாடியதில் தவறில்லை. துபாயில் வேலை செய்து கனடாவுக்கு வந்த ஒருவர் ஒரு சிகை அலங்காரக் கடை போட்டிருக்கிறாராம் என்று என் நண்பன் சதீஷ் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. செல் போனில் அவனிடம் விபரம் கேட்டு அவன் சொன்ன மோலுக்குப் போனேன்.  “ஹரிஜுலி ஹெயர் ஸ்டைல்ஸ் “ ( HariJulie Hair Styles) பெயர் பலகை என்னைக் கவர்ந்தது. உடனே உள்ளே நழைந்தேன். புன்முறுவலுடன் கடையின் உரிமையாளர் என்னை வரவேற்றார். அவரைக் கண்டதும் என் பழைய துபாய் நண்பன் ஹரிகர பாஸ்கரன் என்று அடையாளம் கண்டு கொள்ள எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. துபாயை விட்டு நான் கனடாவுக்கு வந்து பத்து வருடங்களாகி விட்டன. இந்த பத்து வருடங்களில் பாஸ்கரனின் தோற்றத்தில் மாற்றம் இருந்தது. கடையினுள்ளே கண்ணோட்டம் விட்டேன். மூன்று அழகிய யுவதிகளும்; இரண்டு இளைஞர்களும் சிகை அலங்காரம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

“என்னைத் தெரிகிறதா பாஸ்கர்?” என்றேன்.

சற்று என்னை உற்று நோக்கிய அவன் “ஓ! இப்போ நினைவுக்கு வருகிறது. நீர் துபாய் டெலிகொம்மில் வேலை செய்த ரமேஷ் அல்லவா”? என்றபடி என் கரங்களை கைப்பற்றி குலுக்கினான் பாஸ்கர்.

“ ஆமாம் நான் உன் பழைய நண்பன் ரமேஷ்தான். அது சரி நீ ஏன் இந்தத் தொழில் செய்கிறாய். நீ இந்த தொழில் செய்வது உன் அப்பாவுக்கு தெரியுமா?” என்றேன்

ஹரிகர பாஸ்கரனை எனக்கு ஊரில் இருந்தே தெரியும். அவனின் அப்பா, தான் ஒரு சாதிமான் என்றும், தனது பரம்பரை வேளாள பரம்பரை என்றும் அடிக்கடி பேசிக்கொள்பவர். உயர் குலம் என்று தம்பட்டம் அடித்த குடும்பத்தை சேர்ந்த பாஸ்கரன் எப்படி தந்தைக்குத் தெரியாமல் சவரம் செய்யும் தொழிலைச் செய்ய ஆரம்பித்திருக்கிறான் என்பது எனக்குப் புதிராக இருந்தது. துபாயில் கூட பாஸ்கரன் சாதி சனம் பார்த்துத்தான்  மற்றவர்களுடன் பழகியவன். ஒரு கொம்பனியில் மார்க்கட்டிங் மனேஜராக இருந்தவன். அப்படி தான் செய்யும் தொழில் தனது சாதிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று பார்த்து வாழ்ந்தவன். அவன், தனது நண்பர்களை, சாதியும் அவர்கள் செய்யும் தொழிலையும் பார்த்தே தேர்ந்தெடுத்து பழகினான்.  இப்போது கத்திரிக்கோலும் கையுமாக அவனை ஒரு சிகை அலங்காரக் கடைக்கு முதலாளியாகப் பார்த்த போது என் மனதில் அக்கேள்வி என்னையறியாமலே பீரிட்டு வந்தது.

“அப்பாவுக்கு தெரியாது. அவர் ஊரிலை. நான் இங்கு கனடாவிலை இந்தத் தொழில் ஆரம்பித்திருக்கிறேன். அதோ வேலை செய்கிறாள் என்மனைவி “ஜுலி”. அவள் தான் இந்த பிஸ்னசுக்கு முக்கியகாரணம்” என்றான் சிரித்தபடி.

அவன் காட்டிய வேலை செய்து கொண்டிருக்கும் பெண்ணை நோக்கினேன். பார்ப்பதற்கு உயரமாக அழகாக இருந்தாள். அவளது நீண்ட விரல்கள், எங்கள் இருவரையும் கவனியாது வேகமாக வேலை செய்து கொண்டிருந்தது.

“பிழையில்லை. வடிவான பெண்தான். என்ன பிலிப்பினோவா?” என்றேன் மெல்லிய குரலில் .

“ஆமாம்” என்று தலையாட்டினான் அவன். இங்கு கனடாவில் தான் ஒரு சிகை அலங்கார கடையில் முடி வெட்டும் போது அவளைச் சந்தித்தனான். அவளும் துபாயில் ஒரு ஐந்து நட்சத்திர  ஹோட்டலில் உள்ள சலூன் ஒன்றில் வேலை செய்தவள். கனடா வந்து வேலை தேடி நான் களைத்துப் போயிருந்தேன். என்ன தொழில் செய்யலாம் என்று பல தொழில்களை பற்றி யோசித்தேன். உனக்கு தெரியும் எங்கள் பழைய நண்பன் சதீஷை. அவன் தன்னோடு சேர்ந்து இன்ஷியூரன்ஸ் வேலை செய்யத் தூண்டினான். அது எனக்கு அவ்வளவுக்கு உகந்ததாய் தெரியவில்லை. ஜுலியின் சந்திப்பு காதலாக மாறி பின்னர் திருமணத்தில் முடிந்தது. அவள் ஒரு கத்தோலிக்கப் பெண். நான் சரியான சைவம் என்று உனக்குத் தெரியும் தானே.? ”

“ இப்போ நீ கத்தோலிக்கனாக மாறிவிட்டாயா?”

“இல்லை. அவளை மாற்றிவிட்டேன். அவளும் சைவம். சரியான திறமை சாலி. அவளிடம் சிகை அலங்காரம் செய்வதறகாகவே பெரிய இடத்துப் பெண்கள் பலர் வருவார்கள். அவள் தான் நான் இந்தத் தொழிலுக்கு வரக் காரணமாகயிருந்தவள். அவளது ஆலோசனைப்படி சிகை அலங்கார இன்ஸ்டிடியூட்டுக்குச் சென்று இக்கலையைக் கற்றேன். எனக்குப் பிடித்துக் கொண்டது. சிரமமில்லாமல் எனக்கு இக்கலை வந்தது. பின் துபாயில் நான் உழைத்து சேமித்த பணத்தோடு நாம் இருவரும் ஒரு சிறு ஹெயர் சலூனை மூன்று வருடங்களுக்கு முன் ஸ்காபரோவில் ஆரம்பித்தோம். அது வளர்ந்து இப்போ நான்கு யுவதிகளும் இரண்டு இளைஞர்களும் எங்கள் ஸ்தாபனத்தில் வேலை செய்யும் அளவுக்கு பெரிதாகிவிட்டது. விரைவில் மிசிசாகாவிலும் ஒரு கடையை தொடங்க இருக்கிறோம்.” என்றான் பெருமையாக.

“ நல்லது இப்போ எனக்கு நீ முடி வெட்டப்போகிறாயா அல்லது உன்மனைவி வெட்டப்போகிறாளா?” என்றேன்.

“நானே வெட்டிவிடுகிறேன். ஏன் என்றால் அவள் வெட்டினால் நீ தேவையில்லாம் என் அப்பாவைப்பற்றி கதைத்து அவளது மனதை கலக்கிவிடுவாய். அவளுக்கு என் ஊர்க் கதை தெரியாது”

“சரி வா வா. எங்கே உன் கை வண்ணத்தை என் முடியில் காட்டு. அது மட்டுமல்ல எனக்குச் சவரமும் செய்து விட வேண்டும்.” என்று கதிரையில் போய் உட்கார்ந்தேன். சில நிமிடங்களில் அவனின் கையில் உள்ள கத்திரிக்கோல் என் முடியை கத்திரிக்கத் தொடங்கியது. செய்யும் தொழிலே தெய்வம். இதில் சாதி என்ன வேண்டியிருக்கு?. என்றது என் மனம்.

“என்ன ரமேஷ் பேசாமல் இருக்கிறாய். பார் எப்படி காலம் மாறிப் போய்விட்டது என்று. ஒரு மார்க்கட்டிங் மனேஜர் கத்திரிக்கோல் பிடித்து தலை முடி வெட்டுவதை. பிஸ்னஸ் என்று வந்தவுடன் எதில் மக்கள் தேவை அதிகமோ அதில் கவனம் செலுத்த வேண்டும். மாதம் ஒரு முறையாவது தலைமுடி வெட்டியாக வேண்டும். அதாலை இந்த பிஸ்னசுக்கு நல்ல டிமான்ட் உண்டு.”

“ நீ வெட்டும் போது ஊரிலை உனக்கும் எனக்கும் தலை முடி வெட்டிய பாபர் வினாசியின் நினைவுதான் எனக்கு  ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் ஒரு வித்தியாசம். அவன் வெட்டும் போது வாயில் வெற்றிலையை வைத்து குதப்புவான். என்மேல் இருந்த வெள்ளைத் துணி மேல் ஒரே சிவப்பு நிறத்தில் வெற்றிலைச் சாறு தெறித்து கோலம் போடும். ஆனால் நீ வெட்டும் போது சுவிங்கத்தை வாயில் வைத்து சுவைக்கிறாய்”.

“ அது போகட்டும் நீ இப்போ எங்கை வேலை”?

“நான் வேலை இழந்து பலமாதங்களாகிவிட்டது. எவ்வளவு தேடியும் வேலை கிடைக்வில்லை. ஒரு பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம் என்ற யோசனை எனக்கு” என்றேன்..

“கவலைப்படாதே ரமேஷ். நீ எனது மிசிசாகா கடையில் வேலைக்குச் சேரலாம். ஒரு நம்பிக்கையான ஆள் அங்கு எனக்குத் தேவை. அதோடு நீயும் சிகை அலங்கார இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் இக்கலையைப் படி. மேற்கத்திய நாடுகளில் சாப்பிடச் செலவு செய்யாவிட்டாலும் சிகை அலங்காரம் செய்ய எவ்வளவு பணம் வேண்டுமானாலும் விரயம் செய்ய ஆக்கள் தயார். அதோ பார் அந்த 75 வயதுக் கிழவியை. யாரும் அவளின வயதை சரியாக கணிக்க முடியுமா சொல்?. மாதம் இரண்டு முறை இங்கு வந்து ஹெயர் ஸ்டைலும் முக அலங்காரமும் செய்யத் தவறமாட்டாள். அவளைப் போல் எத்தனையோ வயது வந்த பெண்கள் இங்கே வருகிறார்கள். இந்த பிஸ்னஸ் ஒரு நல்ல வருவாய் உள்ள பிஸ்னஸ். நீ ஊரிலை இருந்த உன் அந்தஸ்த்தைப் பற்றி யோசிக்காதே. ” என்றான் பாஸ்கர்.

“ சரி பாஸ்கர் நான் போகும் போது உனது பிஸ்னஸ் கார்டை தா. நான் யோசித்து உன்னுடன் தொடர்பு கொள்கிறேன’ “ என்றேன்.

“இங்கை பார் ரமேஷ் நீ செய்யும் தொழிலைப் பார்த்து உனது ஊர் அந்தஸ்துடன் ஒப்பிட்டு ஆக்கள் ஒவ்வொன்று சொல்லுவினம். அதைப்பற்றி யோசியாதே. கனடாவுக்குப் புலம் பெயாந்து வந்த பலர் ஊரில் உயர் பதவியில இருந்தவர்கள். இங்கை கனடாவிலை எனக்குத் தெரிந்த என்ஜினியர் ஒருவர் பியூனரல் ஹோமிலை (Funeral Home) வேலை செய்கிறார். ஊரிலை. ஆரசாங்கத்திலை உயர் பதவி வகித்த என்ஜினியர் அவர். ஆனால் இங்கு வந்து வருமானத்துக்காக பல தொழில்கள் செய்கிறார்கள். படும்குளிரில் வீடுவீடாகப் போய் பேப்பர் கூடப் போடுகிறார்கள். நீ பிஸ்னஸ் செய்து முன்னேற வேண்டும் மென்றால் இதையெல்லாவற்றையும் பார்க்க முடியாது.”

நான் அவனின் பிஸினஸ் கார்ட்டை வாங்கிக் கொண்டு. முடிவெட்டிய செலவான பதினைந்து டொலரை நீட்டினேன். அவன் வாங்க மறுத்தான். பேசாமல் மேசையில் பணத்தை வைத்து விட்டு கடையைவிட்டு வெளியேறினேன்.

                                                                           ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book