New House 2

                                                           

பணச்சடங்கு

வாசலில் கட்டப்பட்டிருந்து கதலி வாழை மரங்களின் இலைகள் காற்றில் ஆசைந்தாடின. அதோடு தொங்கிய தென்னங் குருத்து, மாவிலைத் தோரணங்கள் வேறு.  அம்மங்கள அலங்காரம் அந்த புதுவீட்டில் ஏதோ விசேஷம் நடக்கிறது என்பதை விளம்பரப்படுத்தியது. அப்போதிக்கரியாக 30 வருடங்கள் பல ஊர்களில் வேலை செய்து சம்பளமும் , கிம்பளமும் வாங்கி, இருபது பரப்புக் காணியில் அய்யாத்துரையர் கட்டிய வீடு. அதுவும் பிரதான வீதி வீடடுக்கு அருகே என்பதால் வீட்டின் மதிப்பு அதிகம். வாசலைத்தாண்டி உள்ளே போனால், முன் வளவில், வேப்பமரத்தின் நிழலில் வரிசையில் வாடகைக் கதிரைகளில் சிலர் அமர்ந்தவாறு போவோர் வருவோரைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் பாக்கு சீவல் , வெற்றிலை, சுண்ணாம்பு, சுருட்டு சிகரட் பெக்கட்டுகள் ஒரு தட்டத்தில் அவர்களுக்காகவே வைக்கப்பட்டிருந்தன. ஒரு பத்து வயது சிறுமியும், சிறுவனும் பால் கலந்த கோப்பியை வெள்ளிப் பாத்திரங்களில் பரிமாரிக்கொண்டிருந்தனர்.

“இரு கதலிக் குலைகளும் குறைந்தது அறுநூறு ரூபாய்  பெறுமதியிருக்கும் போல இருக்கு. குலை நிறைய பழங்கள். உது நிட்சயம் நீர்வேலி வாழைதான்  அம்பட்டன் அவினாசியும் , வண்ணான் அண்ணாமலையும் கொடுத்து வைத்தவர்கள் என்று மனதுக்குள் புழுங்கிய தம் கருத்தை வாயுக்குள் வெற்றிலையைக் குதைப்பியபடி ஒருவர் தெரிவித்தார். வெற்றிலைச் சாறு அவர் கடவாய் வழியே வழிந்தோடியது. கருத்து தெரிவித்தவர் புது வீடு கட்டியவரின் கிட்டத்து உறவினர்.

“இண்டைக்கு பின்னேரம் உந்த குலைகளிலை எத்தனை வாழைப்பழஙகள் மிஞ்சுமோ தெரியாது” இது இன்னொருவரின் அவதானம்.

“ வினாசியும் அண்ணாமலையும் மாறி மாறி வந்து குலைகள் பத்திரமாக இருக்கா என்று பார்த்திட்டு போறதை கவனிக்கவில்லையே?” முதல் கருத்து தெரிவித்தவர் பதில் சொன்னார்.

புது வீட்டுக்கு குடிபுகும் சடங்கு வீட்டுக்குப் போவோர் வருவோரை விமர்சித்தபடி முற்றத்தில் இருந்த வாடகைக் கதிரைகளுக்கு பாரமாக இருந்த அவர்கள்; பொழுது போக்கிற்காக சாப்பாடு நேரம் வரும்வரை விமர்சகர்களாக மாறிவிட்டார்கள். அதில் ஒருவர் ஒரு சிகரட் பக்கெட் ஒன்றை எடுத்து சிகரட்டை பற்றவைத்து பின்னர் மூன்று சிகரட்டுகளை எவரும் கவனியாத வாறு தனது சேர்ட் பையுக்குள் பதுக்கி விட்டார். சில நிமிடங்களில் தாம்பாளத்தில் இருந்த சுருட்டுகளும் சிகரட்டுகளும் மாயமாய் மறைந்துவிட்டன. அப்போத்திகரி அய்யாத்துரையின் நண்பர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள்.;

“என்ன அண்ணை அய்யாத்துரையருக்குக்கு இந்த நாலு சார வீட்டைக் கட்டி முடிக்க எவ்வளவு முடிந்திருக்கும் என நினைக்கிறியள்?” ஒருவர் தன் மனதில் குறண்டிக் கொண்டிருந்த சந்தேகத்தை அடக்கமுடியாமல் கக்கினார். தான் கட்டிய வீட்டிலும் பார்க்க கூட செலவு செய்திருப்பாரோ என்ற ஆதங்கம் அவருக்கு.

“ நான் நினைக்கிறன் அவருடைய ஓவர்சியர் மாமனார் உதவி இருந்த படியால் கல்லும் மண்ணும் சும்மா கிடைத்திருக்கும். மாமனாரும் ரோடு போடுகிற சாட்டில் கொஞ்சத்தை இங்கை வீடு கட்டத் தள்ளியிருப்பார்”, ஏதோ நடந்ததை நேரில் கண்டவர் போல் ஒருவர் தன் கருத்தைத் தெரிவத்தார்.

“ சீ அப்படி  சொல்லாததையும் அந்த மனுசன் ஒரு சிவில் என்ஜனியரை பிடித்து பிளான் போட்டு கட்டினவராக்கும். கட்டி அரைவாசியிருக்கக்கை ஒரு; எழுபதாயிரம் முடிஞ்சிது எண்டவர் . இப்ப கட்டி முடிந்த பிறகு இரண்டு லட்சத்துக்கு மேலே  திண்டிருக்கும். கதவுகள் கூட வேப்பமரத்தால் செய்ததாம். கல் அரிஞ்சு கட்டினவர். கொழும்பிலை இருந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த லைட் பூட்டினவராம். அப்ப அவ்வளவு காசு போயிருக்கும் தானே”, விளக்கம் கொடுத்தார் இன்னொருவர்.

“அவருக்கென்ன காசுக்கு பஞ்சமே. பல நிறங்களில் மருத்து கலந்து கொடுத்து நல்லாய் காசு உழைத்துப்போட்டார். அதுவும் பல காலம் சிங்களப் பகுதிகளிலை அப்போதிக்கரியாக வேலை செய்து வாங்கிய சம்பளத்தை விட கிம்பளம் அதிகம் வாங்கினவர். அந்த மனுசன்டை கைராசி தொட்டவுடனை நோய் பறந்துபோகுது. அதாலை அவரிடம் வைத்தியம் பார்க்க வரும் சனங்கள் அதிகம்.   பொய் மேடிக்கல் சேர்ட்டிபிக்கட் எழுதி கொடுத்து சம்பாதித்தது சும்மாவே;. அப்ப இரண்டு இலட்சத்துக்கு மேல் செலவு செய்து வீடு கட்டுவது அவருக்கு கஷ்டமே” என்றார் பக்கத்தில் இருந்தவருக்கு  மட்டும் கேட்கும் விதத்தில் தான் எதையோ கண்டு பிடித்தவர் மாதிரி வேறொருவர்.

வாழை மரத்தில் கட்டியிருந்த “சுந்தரம் சவுண்ட் சேர்விசின்” இரு பெரிய ஊமத்தம் பூ போன்ற பெரிய குழாய்களில் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் கதை வசனம் போய்கொண்டிருந்தது.

“ஏன் உந்த தொண்டை கிழிய கத்திற வசனத்தைப் போடுறாங்களோ தெரியாது நிற்பாட்டிப் போட்டு ஒரு சுந்தராம்பாள் அல்லது ரமணியம்மாளின் பக்திபாடலைப் போடலாமே” என ஒருவர் கருத்து தெரிவித்தார். அவர் சொன்னதைக் கேட்டோ என்னவோ வசனம் ஓலிபரப்பு தீடிரென நிறுத்தப்பட்டது.

ஒருவர் கணைத்தபடி, மொய் எழுதியவாளின்  பெயர்களை வாசிக்கத் தொடங்கினார்:

விதானையார் விசுவலிங்கம் ஐந்நூற்றி ஒரு ரூபாய். தர்மலிங்கம் மாஸ்டர் நானூறு  ரூபாய் , பிரம்படி பேரம்பலம் முன்னூற்றி ஐம்பது, மணியகாரரர் மாணிக்கம் நூற்றி ஒன்று” மடத்தடி சிவராசா நூறு ரூபாய் “ பணச்சடங்கில் பணம் கொடுத்தவர்களினது பெயரும் தொகையும் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாஸ்டர் ஒருவர் “இதென்ன எதோ வகுப்பிலை பிள்ளையள் எடுத்த மார்க்சை சத்தம் போட்டு சொல்லுறது போலக் கிடக்கு. இதுவும் ஒரு விளம்பரமே”?

“அதில்லை ஒவ்வொருத்தரிண்டை அந்தஸ்தை விளம்பரப்படுத்தும் முறையாகும். ரிசிட் கொடுக்க தேவையில்லை. கொப்பியிலை எழுதிவைச்சால் போதும். விதானையார் விசுவலிங்கத்திற்கு ஐந்து பெட்டையள். அவையளிண்டை கலியாணத்துக்கு போய் ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தவர் அய்யாத்துரையர். அதுதான் கொடுத்த காசை திருப்பி ஒரு ரூபாயோடு சேர்த்து கொடுத்துவிட்டார்”, வந்திருநத ஒருவரின் விமர்சனம்.

“நீர் உதெல்லாம் கணக்கு வைத்திருக்கிறீர் போல. ஆரோ சொல்லிச்சினம் அய்யாத்துரையின்டை மனுசியிண்டை தம்பி கனாடவிலை ரெஸ்டொரண்ட் வைத்து நல்லச் சம்பாதிக்கிறானாம். அவன் பெடியன்; ஐம்பதானியரம் அனுப்பியிருக்கிறாரானாம். அதையேன் அவன் பெயரை மைக்கிலை முதலிலை சொல்லவில்லை”? தன் சந்தேகத்தைக் கேட்டார் குத்தகைக்காரர் பொன்னையர்.

“நல்லாய் இருக்கு உம்முடைய கேள்வி. உதை இயக்கப் பெடியன்கள் கேட்டுவிட்டு தங்களுக்கு அதிலை வரி தரச் சொல்லிக் கேட்டால் பிரச்சனை கண்டீரோ. அது தான் விஷயத்தை அப்படியே வெளியிலை சொல்லாமல் அமுக்கிப்போட்டார்”.

”அது சரி யூனிவர்சிட்டியிலை என்ஜனியரிங் படிக்கிற அய்யாத்தரையிண்டை மூத்த மகனுக்கு அந்தக் கனடா மச்சான்டை மகளுக்கு கொடுக்கத் திட்டமாமே? அது தான் முதற் பணமாக அனுப்பியிருக்கிறாரோ என்னவோ?

“நான் கேள்விபட்டது அந்த பெடியனும் எங்கடை ஸ்டேசன் மாஸ்டர் மகளுக்கும் இங்கை பள்ளிக் கூடத்திலை படிக்கிற நாளிலை இருந்து தொடர்பாம். இப்ப இரண்டு பேரும் யூனிவர்சிட்டியிலை எண்ட படியால் மேலே பேசத் தேவயில்லை”

“உமக்கேன் அந்த சிறுசுகளிண்டை கதை. உம்முடை மகளும் யூனிவர்சிட்டியிலை காதலித்து தானே கலியாணம் செய்தவள். அதுவும் உம்முடைய மருமகனுக்குத் திருகோணமலை சொந்த ஊர்”

அய்யாத்துரையின் மகனின் காதலைப் பற்றி விமர்சித்தவர் பேசாமல் எழுந்து மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

ஒலிபரப்பில் தொடர்ந்து பெயர்கள் வாசிக்கப்பட்டன. சிலர் கடித உறைகளில் பணத்தை வைத்து அய்யாத்துரையின் மனைவி செல்லம்மாவிடம் கொடுத்தனர். அய்யாதுரையர் வந்தவர்களை கவனித்த படியிருந்தார். அய்யாத்துரையரின்டை வீட்டு கணக்கு வழக்குகளைக் பார்ப்பது செல்லாம்மாள் தான் என்பது ஊரில் எல்லோருக்கும் தெரியும். அவளுக்கு தான் அய்யாத்துரையரின் வரும்படி எவ்வளவு என்று தெரியும். ஒரு மெடிக்கல் சேர்டடிப்பிக்கட கொடுக்க அவர் ஆட்களின் வரும்படிக்குத்  தக்கவாறு வாங்குவதை செல்லம்மாள் தான் தீர்மானிப்பாள்.

அய்யாத்துரையர் ரிட்டையராக இன்னும் ஆற மாதங்கள் இருந்தன. உத்தியோகத்தில் இருக்கும் போது வீடு கட்டி குடி புக வேண்டும் என்பது அவர் திட்டம். அதுவும் ஊரொடை வேலை மாறி வந்ததால் பலரை அவருக்குத் தெரியவந்தது. அதற்குப்பிறகு வீடடில் டிஸ்பென்சரி வைத்து வைத்தியம் பார்க்க வசதியாக ஒரு பகுதியை ஒதுக்கி வைத்தார் தனது புது வீட்டில். அய்யாத்துரையரின் பிள்ளைகளில் மூத்தவன் மகன். இரண்டாவது மகள். அவளுடைய கலியாணத்தையும் முற்றாக்கி அவளை கரை சேர்த்துவிட்டால் தானும் மனைவியும் அந்த சீவிய உருத்து வைத்து மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கும் வீட்டிலை வாழலாம் என்பது தான் அவர் திட்டம். அந்த புது வீட கட்டியதில் அவருக்கு இலாபம் என்ற தான் சொல்லலாம். பணச்சடங்கில் செல்லம்மாவின் கணக்குப் படி முதல் நாளே முப்புதாயிரம் சேர்ந்து விட்டது. இன்னும் இரண்டு நாள் கொணட்டாட்டம். கொழும்பில் இருந்து சொந்தக்காரர்களும்  நண்பர்களும் வரவேண்டும். அதோடு அவர் அப்போத்திகரியாக வேலை செய்த சிங்களப் பகுதிகளில் இருந்து சிங்கள முதலாளிமார் வரவேண்டும். அவர்கள் அய்யாதுரையரோடு ஒட்டென்றால் ஒட்டு. “ லொகு அய்யா “ என்ற தான் அவரை செல்லமாக அழைப்பர்கள். காரணம் அவர் ஆறடி உயரம். அதோடு அவர் வேலை செய்த இடங்களில் அவர் முக்கிய புள்ளியாக கணிக்கப்பட்டார். காய்ச்சல் என்றால் மறு நிமிடமே சிங்கள முதலாளிமார் வீட்டை போய் நின்று மருந்து கொடுத்தவர் அய்யாத்துரை. அதை அவர்கள் மறக்க முடியுமா? அவர்களுக்கென கிடாய் வெட்டி , போத்தல்களோடை முன்றாம் நாள் பெரும் கொண்டாட்டம் வைக்க திட்டம் போட்டிருந்தார் அய்யாத்துரையர். மூன்றாம் நாள் குறைந்தது ஒரு இலட்சம் கிட்டும் என்பது அவர் கணிப்பு. வீடு கட்டிய செலவு போக குறைந்தது ஒரு இலட்சம்  பணச்சடங்கு மூலம் மிஞ்சும்.

ஒலிபரப்பி தொடர்ந்து பெயர்களைக் கதறிக் கொண்டிருந்தது. முருகேசு எழுபது ரூபாய் , செல்வராசா ஐம்பது ரூபாய்.. என்றவுடன் யாரொ பின்னனியில் முணு முணுத்தது தெளிவாகக் கேட்டது. அது செல்லம்மாளின் குரல்.

“உவன் செல்வத்தின் மகளுடைய சாமத்திய சடங்கிற்கு நூற ரூபாய் நோட் ஒன்றை சுலையாக நான் கொடுத்தது நான் இங்கை கொப்பியிலை எழுதி வைத்திருக்கிறன். அவன் அதை மறந்து ஐம்பது கொடுத்து போறான்”  என்றாள் கோபத்தோடு செல்லம்மாள்..  அவள் காசு கொத்துவிட்டு போனவர்களின் தொகையை தான் கொடுத்த தொகையுடன் கொப்பி ஒன்றில் இருநதது கணக்கோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்;.

“அதைக் கேட்ட முன்வளவில் சிகரட் குடித்துக் கொண்டு இருந்த ஒருவர் “ செல்லம்மாளோடை சேட்டை விட முடியாது. எல்லாத்துக்கும் கணக்கு வைத்திருக்கிறாள்” என்றார்.

“ஏன் உந்த மனுசிக்கு உவ்வளவு பண ஆசையோ தெரியாது.” இது அங்கிருநத இன்னொருவரின் விமர்சனம்.

அந்த சமயம் இருவர் டையுடன் வாசலைத் தாண்டி வளவுக்குள் வந்தார்கள். வந்தவர்கள் ஊருக்கு அறிமுகமானவர்களாக இல்லாத படியால் அவர்கள் இருவரையும் எலலோருடைய கண்களும் நோக்கின.

“ ஆர் உந்த இரண்டு பேர். அதுவும் குடிபுகுற வீட்டுக்கு டையோடை வருகினம்?

வந்தவர்களில் ஒருவர் ஆஙகிலத்தில் “ Is this Appothecary Ayyathurai’s house?” என்று கேட்டார். ஆங்கிலத்தில் பதில் சொல்லி ஏன் சிக்கல்படுவான் என்று ஒருத்தரும் பதில் சொல்லாமல் இருந்தனர். அதே கேள்வியை வந்தவரில் மற்றவர் சற்று அதிகாரத் தொனியுடன் திரும்பவும்கேட்டார். அந்தக் கூட்டத்தில் இருந்த ஆங்கிலம் பேசத் தெரிந்த தம்பையா மாஸ்டரை எல்லோரும் பார்த்தர்கள்,பதிலை எதிர்பார்த்து.

“ Yes Yes. This is his house. May I know who both of you are?”

“We both are from Bribery Commissioner’s office. There is a complaint against Mr Ayyathurai. We would like to speak to him”

பதிலைக்கேட்டு மாஸ்டர் அதிர்ச்சி அடைந்தார்.

“OK OK. He is very busy inside. Come I will take you both to him” என்று ஆங்கிலத்தில் பதில் சொல்லியபடி இருவரையும் வீட்டுக்குள் மாஸ்டர்;கூட்டிச்சென்றார்.

அரை குறையாக ஆங்கிலம் தெரிந்த ஒருவர் “நாங்கள் கதைச்ச மாதிரி நடக்கப் போகுது போல இருக்குது..ஆரே அய்யாத்துரையருக்கு எதிராகப் பெட்டிசன் போட்டிட்டான்” என்றார் மனதுக்குள் சந்தோஷத்தோடு ஒருவர்.

எல்லோரும் மொளனமாக நடக்கப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரை குறையாக ஆங்கிலம் தெரிந்த ஒருவர் “நாங்கள் கதைச்ச மாதரி நடக்கப் போகுது போலத் தெரியுது. ஆரோ ஒருவன் அய்யாத்துரையருக்கு எதிராக எரிச்சலிலை பெட்டிசன் போட்டிட்டான் போல இருக்கு. வந்த ஆக்கள் ஊழல்; ஒழிப்பு இலாக்காவை சோச்நத ஆக்கள்” என்றார் ஆங்கிலம் அரைகுறையாக தெரிந்த ஒருவர்..

வீட்டுக்குள் ஒரே வாக்குவாதம் ஆங்கிலத்திலும் தமிழிலும் நடந்தது. படிப்படியாக அய்யாத்துரையரின் குரல் ஓய்ந்தது.

எல்லோரும் மொளனமாக நடக்கப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சில நேரத்துக்கு முன்னர் வீட்டுக்கு வந்த “டை” கட்டிய இருவரும் அய்யாததுரையரோடு வெளியே வந்தனர். அய்யாத்துரையர் தொங்கிய முகத்தோடு நடந்தார். ஒருத்தரோடும் அவர் முகம்கொடுத்துப் பேசவில்லை. இந்த குடிபுகுற நாளண்டு அய்யாத்துரையருக்கு என்ன நடந்தது என்று விபரம் தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர்.

“அய்யாத்துரையர் வீடு குடி புகுவதுக்கு வைத்த முகர்த்தம் சரியல்லை போல கிடக்கு “என்றார் சாஸ்திரியார் சாம்பசிவம்.

“உங்களை அய்யாத்துரையர் கேட்டிருந்தால் ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் வராத ஒரு நல்ல நாளைக் குறித்துக் கொடுத்திருப்பியல் என்ன சாத்திரியார்? என்றது ஒரு குரல் நக்கலாக.

                                                                       ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book