Benz2                                                                    

அதிகாரம்

ஆறு மாடிக் கட்டிடத்தில், நாலாவது மாடியில். முப்பது அடி நீளமும், இருபத்தைந்து அடி அகலப்; பரிமாணங்களைக் கொண்ட அறை அது. அறைக்கு வெளியே அமைச்சர் பாலசூரியரின் பெயர் பதித்து, அமைச்சின் பெயர் பித்தளை தகட்டில் பிரகாசித்தது. வெளிநாட்டிலிருந்து பிரத்தியோகமாக இறக்குமதி செய்யப்பட்ட, பர்மா தேக்கினால் செய்யப்பட்ட மேசையும், கதிரைகளும். அமைச்சரைச் சந்திக்க வருபவர்கள் அமர்வதற்கு ஒரு விலையுயர்ந்த சோபா செட்டும் அறையை அலங்கரித்தன.  அமைச்சரின் அரசியல் கட்சியின் நிறமான நீல நிறத்தில் அறைச்சுவர்கள்  தொற்றமளித்தன. அவர் அமைச்சராக முன்னர் ஆட்சி செய்த கட்சியின் நிறம் பச்சை. ஆட்சி மாறி பாலசூரியர் அமைச்சாரனதும் அவர் செய்த முதற் சாதனை, தனது ஒபீஸ் அறைச் சுவர்களின் நிறத்தைப் பச்சை நிறத்திலிருந்து நீல நிறத்துக்கு மாற்றியது.  அதுமட்டுமல்ல அமைச்சரினது அரசியல் கட்சியின் நிறமான நீல நிறத்தில் அறை ஜன்னலின் திரைச்சீலைகள்  கூட நீல நிறத்துக்கு மாற்றப்பட்டது.

அறையின் ஓரத்தில் இருந்த சிறு மேசையில் சில பழைய டைம், நியூஸ் வீக், ரீடேர்ஸ் டைஜஸ்ட், ஆங்கில சஞ்சிகைகளும், சில சிங்களப் பத்திரிகைகளும் இருந்தன.  அமைச்சர் பாலசூரியர் ஒரு தமிழரானாலும், மேசையில ஒரு தமிழ் பத்திரிகை கூட இருக்கவில்லை. அறையை அலங்கரிக்க  குரோட்டன், பாம் செடிகள் இருந்தன. அரசியல் மேடைகளில் தேசீயம் பேசி தான் பொதுமக்களின் நண்பன் என்று சொன்னாலும், அமைச்சருக்கு வெளிநாட்டுப் பொருட்களிலேயே விருப்பம் அதிகம். அது மட்டுமல்ல எவரும் அவரைப் பார்ப்தற்கு பலத்த கட்டுப்பாடு. அவரது மேசைக்குப் பின்னால் உள்ள சுவரில் ஜனாதிபதியின் படம காட்சியளித்தது. மேசையின், ஓரத்தில் அமைச்சரின் குடும்பத்தின் படம் இருந்தது.  எயர்கொண்டிசனர் அறைக்குக் குளிரூட்டிக் கொண்டிருந்தது.

அமைச்சர் லிப்டில் தன் பாதுகாவலரோடு நாலாவது மாடிக்குப் போய் வரும்போது, பாதுகாப்பு கருதி, வேறு எவரும் லிப்டில் ஏறுவதற்கு அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . அரசியல் மேடைகளில் சோசலிசம் கதைத்தாலும் அவர் போக்கில்  முதாளிதத்துவமே பிரதிபலித்தது. அவர் பேச்சில் தான் ஒரு அமைச்சர், நினைத்ததைச் செய்யலாம் என்ற அகங்காரமும், அதிகாரத்தன்மையும் தெரிந்தது

பாலசூரியர் தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. செல்வம் படைத்தவர் என்பதால் அரசியல் கட்சிக்கு நிதி உதவி செய்த காரணத்தால் நியமன எம்பியாகி அமைச்சுப் பதவி பாலசூரியருக்கு கிடைத்தது. அரசாங்கத்தின மந்திரிசபையில் அவர் ஒருவரே தமிழர். ஆனால் அவரது பெயர் சிங்களப் பெயர் போல் இருந்ததினால் அவர் ஒரு சிங்களவர் என்றே பலர் நினைத்தனர்.  மந்திரி சபையில் ஒரு தமிழரும் இருக்கிறார் என்று காட்டவதற்காக அவரை அரசாங்கம் கைப்பொம்மையாக வைத்திருந்தது.

அமைச்சரின் அகலமான மேசையில் கொம்பியூட்டரும், சிவப்பு. நீலம், வெள்ளை ஆகிய நிறங்களில் மூன்று டெலிபோன்களும் அலங்கரித்தன. விலை உயர்ந்த சுழலும் கறுப்பு நிறக் கதிரை அமைச்சரின் ஆசனமாக இருந்தது.

அமைச்சரின் நிரந்தரச் செயலாளர் வீரசிங்கா, பரிபாலன சேவையில் பல வருடங்கள் வேலை செய்தவர். அதிகம் பேசமாட்டார். அமைதியானவர். பரிபாலன. நிதி ஒழுங்குவிதிகளை மீறி நடக்காதவர். நேர்மையைக் கடைப்பிடிப்பவர். பரிபாலன சேவையில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று  அமைச்சின் நிரந்தரச் செயலாளராக நியமனம் பெற்று வந்து மூன்று வருடங்களாகின. அவர் வேலை செய்யும் அமைச்சர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் வீரசிங்கா, தன் சாதுர்யத்தை பாவித்து  கடைமையாற்பவர். அமைச்சரின் மனம் நோகாமல் செயலாற்றக் கூடிய திறமை உள்ளவர்.

அன்று காலை பத்துமணிக்கு அமைச்சின் செயலாளர் வீரசிங்கா, கையில் இரு பைல்களோடு அமைச்சரின் அறைக்குள் பரவேசிக்க அறை வாசலில் காத்து நிறார். ஒருமுக்கிய விஷயம் பேசவேண்டும் என்று தொலைபேசியல் அமைச்சர் தன்னை அழைத்தனினால் அவரைக் காண வநதிருப்பதாக அமைச்சரின பிரத்தியேக செயலாhளர் மூலம் அமைச்சருக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். பதினைந்து நிமடஙகளாகியும் உள்ளை வரலாம் என்று வீரசிஙகாவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. பாலசூரியருக்குத் தமக்குக் கீழ் வேலை செய்பவர்களை அலட்சியமாக நடத்துவதில் ஒரு தற்பெருமை.

கொம்பியூட்டரை வாங்க முன்பாக அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த தன் மகனோடு கலந்து பேசிய பிறகே அவனது பரிந்துரையின் படி விலை உயர்ந்த கொம்பியூட்டர் இரண்டை அமைச்சின் பட்ஜட்டில் வாங்குவாவற்கு அமைச்சின் நிரந்தர செயலாளர் வீரசிங்காவை அழைத்து கட்டளையிட்டார். எக்காரணத்தால் அமைச்சருக்கு இரு கொம்பியூட்டர்கள தேவைப் படுகிறது என்பது செயலாளருக்கு புரியவில்லை. அமைச்சர் தனது வீட்டு பாவனைக்கு ஒரு லப்டொப்பும் மற்றது தன் ஒபீஸ்பாவனைக்கு மேசையில் வைக்கும் கொம்பியூட்டர் ஒன்று, அதோடு தேவைபட்ட தரமான பிரின்டர் , ஸ்கானர், மென்பொருள்கள் ஆகியவை  வாங்குவதற்கு ஓடர் கொடுக்கும் படி சொன்னார். லப்டொப் தனது வீட்டில் பாவனைக்கு என்று அவர் காட்டிய காரணத்தை செயலாளர் நம்பிவிட்டார். உண்மையில் லப்டொப் அமைச்சரி;ன் மகள் பாவிப்பதுக்கு என்பது செயலாளருக்குத் தெரியாது.

இரு கிழமைக்குள் அழகான டெல் கொம்பியூட்டர் அவர் மேசையை அலங்கரித்து. அதை எப்படி பாவிப்பது என்பது அமைச்சருக்குத் தெரியாது. தன்னிடம் காண வந்தவர்கள், தன்னைக் கவனிக்கும் விதத்தில் கீ போர்ட்டைத் தட்டுவார். அவரைச் சந்திக்க வந்திருப்பவர்கள் அமைச்சருக்கு கொம்பியூட்டர் பாவிக்கத் தெரியுமென அறியட்டும் என்பதைக காட்ட அவரது நடிப்பு அது. அரசியலில் அவர் முதலில் கற்றது சந்தர்ப்பத்துக்கு ஏற்ற நடிப்பு.

அன்று அமைச்சர் பாலசூரியர் படு கோபத்தில் இருநதார். காரணம் பல அமைச்சாகள் விலையுயர்ந்த வெளிநாட்டு கார்களை அரசு செலவில்; வாங்கி பாவிக்கிறார்கள், தனக்கு அந்தச் சந்தர்ப்பம் கிட்டவில்லையே என மனம் புழுஙகிளார்.

“என் அமைச்சுக்கு என் பாவனைக்கு  ஓரு 2015 ஆம் ஆண்டு மொடல்; மேர்சிடீஸ் பென்ஸ் E250  காரை நான் ஏன் வாங்கக் கூடாது”? வீரசிங்காவைப் பார்தது  அமைச்சர் பாலசூரியர் கேட்டார்.

“வாங்கலாம் சேர், அது வாங்க குறைந்தது பதினைந்து மில்லியன் ரூபாய்கள் மட்டில் தேவைப்படும். இவ்வளவு  பணம் கார் வாங்க பட்ஜட்டில் ஒதுக்கப்படவில்லையே. தபால் சேவைக்காக  ஆறு வான்கள் வாங்க மட்டுமே பட்ஜட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது இருக்கிறது” என்று பதில் சொன்னார் வீரசிங்கா. அவர் நிதி ஒழுங்கு விதிகளை மதிப்பவர். அதை மீறினால் திறைச்சேரி பல கேள்விகளைக் கேட்கும். அதனால் வரும் விளைவுகள் என்ன என்பது அவருக்கு அனுபவாயிலாகத் தெரியும்.

“எனக்கு முன்பு இருந்த அமைச்சர் பாவித்த கார் பழமையான டொயோட்டா மொடல். அது அடிக்கடி பிரச்சனை கொடுப்பதாக டிரைவர் என்னிடம் முறைப்பாடிட்டான். அமைச்சரின் பாவிப்புக்கு நல்ல தரம் உயர்ந்த, பென்ஸ் கார் ஒன்று அவசியம் வாங்கவேண்டும். என்ன சொல்லுகிறீ? ஆப்போது தான் அநத காரில நான் போய் இறஙகு போது எனக்கு ஒரு மதிப்பு இருக்கும்”? அமைச்சர் சொன்னார்.

“படஜட்டில் பென்ஸ்கார்  வாங்குவதற்குபோதிய பணம் இல்லையே சேர். அந்த மொடல்  கார் வாங்கப்; பெரும் தொகையன பணம் தேவை”, செயலாளர் விளக்கம் கொடுத்தார்.

“அதற்கென்ன? தபால் சேவைக்காக வாங்க இருக்கும் ஆறு வான்களின் எண்ணிக்கையை  மூன்றாகக் குறைத்து அதில் மிஞ்சும் பணத்தை பென்ஸ் கார்  வாங்கப் பாவிக்கலாமே. என்ன சொல்லுகிறீர்?” அமைச்சர் செயலாளரைக் கெட்டார்.

“அப்படி செய்வதற்கு நீங்கள் அனுமதி எழுத்தில் எனக்குத் தந்தால் நீங்கள் விரும்பும் காரை வாங்கலாம்”, செயலாளர் கார் வாங்குவதற்கு தேவையான நிதியை அவர் சொன்னபடி செய்யும் பொறுப்பை அவரிடம் கொடுத்தார்.

“அப்படியானால் நான் சொன்னபடி செய்வதற்கான அறிக்கையை தயார் செய்து என்னிடம் அனுமதி கேட்டு சமர்ப்பியும்.  அதை அனுமதித்து கையொப்பம் இடுகிறேன்” என்றார் அமைச்சர். தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறோமே என்பதைப் பற்றி அவருக்கு  சிறிதும் கவலையிருக்கவில்லை.

இருநாட்களில்அறிக்கையை தயார்செய்து அமைச்சரிடம்வீரசிங்கா போனார்

“நீங்கள் சொன்னபடி கார் வாங்குவதற்கு  உங்களுடைய அனுமதி வேண்டி, அறிக்கை ஒன்றை தயார் செய்கிறேன்  சேர் “ என்றார் செயலாளர்.

“இன்னும் இரு மாதத்தில் சர்வதேச தபால் சேவைக்கான மீட்டிங் இங்கு நடக்க விருக்கிறது. அந்த மீட்ங்கிற்கு பல வெளிநாட்டவர்கள் கலந்துகொளள் வருவார்கள். அநத மீட்டிங்கிற்கு நான் புது பென்ஸ் காரில் போய் இறங்கினால் தானே எங்கள் அமைச்சின் மதிப்பு உயரும். என்ன சொல்லுகிறீர்?” பாலசூரியர் செயலாளரைக் கெட்டார்.

“நிங்கள் சொன்னபடி செய்யலாம் என்றார் செயலாளர். அவருக்குத் தெரியும் அமைச்சருக்கு முடியாது என்ற வார்த்தை பிடியாது என்று.

“மிஸ்டர் வீரசிங்கா. ஓன்று சொல்லமறந்து விட்டேன். வாங்கும் கார் நீல நிறத்தில் இருக்கவேண்டும். பென்ஸ் கார் கொம்பெனி ஜெனரல் மனேஜர் பந்துசேனாவை எனக்குத் தெரியும். அவரோடு அதைப் பற்றி பேசுகிறேன்” என்றார் அமைச்சர் பாலசூரியர்.

சிரித்தபடி “ நல்லது சேர்” என்றார் வீரசிங்கா.

                                    *******

ஒரு மாதம் சென்றது. அமைச்சர் பாலசூரியர் அவரது பிரத்தியேக செயலாளராக வேலை செய்பவர் அமைச்சரின் அண்ணன் இராமசூரியரின் மகன் தேவராஜா. அவர்;சொன்ன செய்தியைக் கேட்டு அன்று என்றுமில்லாத சந்தோஷத்தில் அமைச்சர் இருந்தார். காரணம் அமைச்சருக்காக இறக்குமதி செய்யப்பட்ட நீல நிற பென்ஸ் கார் வந்துவிட்டதாக கார் கொம்பெனி சேல்ஸ் மனேஜர் தனக்க அறிவித்தாக தேவராஜா சொன்ன செய்தியே.

சேர் நீங்கள் விரும்பியபடி  வந்த மூன்று கார்களில் உங்களுடைய கட்சியின் நீல நிறத்தில் ஒரு கார் இருந்தது. அதை மனேஜர் உங்களுக்காக டெஸ்ட் ரன் செய்ய ஒழுங்கு செய்திருக்கிறார். இன்னும் இரு நாட்களில் கார் அமைச்சுக்கு வந்துவிடும்” என்றார் அமைச்சரின. பிரத்தியேக செயலாளா தேவராஜா.

அச்செய்தியைக் கேட்டவுடன் அமைச்சர் உடனே தன் மனைவிக்கு போன் செய்து புதுக் கார் வந்துவிட்டதாகவும் . அதில் தான்  மந்திரி சபைக் கூட்டத்துக்கு போகமுன்பு காலமும் நேரமும் நல்லதா என்று கோவில் ஐயரிடம் கேட்டுத் தனக்குச் சொல்லும்படி அமைச்சர் சொன்னார்.

அமைச்சரின் கார் டிரைவர் பியதாசாவை  அமைசர் அழைத்து புதுக் கார் வந்துவிட்டது. அக்காரை கவனமாகப் பராமரிப்பது உன் கடமை. உன்னைத் தவிர வேறு ஒருவரும், க்காரை ஓட்டக் கூடாது. அக்காரை நிறுத்துவதற்கு கராஜ் ஒன்றை அமைச்சுக்கு அருகில் வீரசிங்கா ஒழுங்கு செய்வார்”, என்றார் அமைச்சர். பிரேமதாசா அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான டிரைவர். சில வருடங்களுக்கு முன்னர் அமைச்சர் வீட்டில்அவன்  வேலை செய்தவன்.

அன்று காலை பத்தரைமணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்க இருந்தது . அமைச்சர் தனது புது நீல நிறப் பென்ஸ் காரில் மந்திரிசபை கூட்டத்துக்கு காலை ஒன்பதரை மணிக்கே புறப்பட்டார். அன்றைய  கூட்டத்துக்கு வரும் அமைச்சர்களுக்கு தன் புதுக்காரை விளம்பரப் படுத்துவது தான் அவரது முக்கிய நோக்கம். செயலாளர் வீரசிங்கா கட்டிட வாசல் வரை வந்து அமைச்சரை வழியனுப்பி வைத்தார்.

                                                                       ♣♣♣♣♣

நேரம் சரியாக பத்துமணி இருக்கும். செயலாளர் வீரசிங்காவுக்கு, கல்வி அமைச்சின் செயலாளராக இருக்கும் அவரது நண்பர் சேனரத்தினாவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

“மிஸ்டர் வீரசிங்கா. ஒரு முக்கிய செய்தி டிவியிலும் ரேடியோவிலும் போகுது உமக்குத் தெரியமா”? சேனரத்தினா கேட்டார்.

“நீர்; செய்தியைச் சொன்னால் தானே எனக்குத் தெரியும்”, வீரசிங்கா பதில் அளித்தார்.

“ஒரு துயரமான செய்தி. உம்முடைய அமைசர் பாலசூரியர் குண்டு வெடிப்பில் இறந்திட்டார். குண்டு வெடித்து அவர் பயணம் செய்த புது பென்ஸ் கார் முற்றாக நாசமாம். அவரும், அவரது டிரைவரும் அந்த இடத்திலேயே அடையாளம் காணமுடியாமல் இறந்திட்டார்களாம்”, என்றார் சேனரத்தினா தொலைபேசியில்.

வீரசிங்கா அதிர்ச்சியில் பேசாமல் இருந்தார். ரேடியொவில் செய்தியைக் கேட்டு அமைச்சில்  வேலை செய்பவர்கள், செயலாளரின் அறைக்குள் கூடிவிட்டனர் அனுதாபம் தெரிவிக்க.

                                                              ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book