Condo3

எதிர்பாராதது

ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களின் இளம் சந்ததிகளிடையே திருமணம் என்பது இருவர் மனங்கள் ஒத்துப்போகும் தேர்வாக இருக்கிறது. சிலர் அத்தேர்வை எவ்வளவு கவனமாக நடத்தினாலும் சிலசமயங்களில் தோல்வியடைந்து விடுகிறார்கள். அவர்கள் நினைப்பது ஒன்று சில சமயம் நடப்பது வேறொன்று. பல்லினங்கள் வாழும் கனடாவில் பெண்களையோ அல்லது  ஆண்களையோ இல்லறவாழ்வுக்குத் தேர்ந்தெடுப்பதில் எமது இளம் சந்ததி எவ்வளவு கவனமாக செயல்படுகிறார்கள் தெரியுமா? தீர்மானங்கள் எடுப்பதற்கு பெரிதும் தயங்குகிறார்கள். வயது ஏறுகிறதே என்ற கவலை தாயகத்தில் வாழும் பெண்களைப் போல் இங்குள்ள பெண்களுக்கு இல்லை. ஊரில கலியாணம் பேசிப் போகும் போது பெண்ணின் வயது என்ன என்பது முக்கிய கேள்வி. நீண்ட காலம் திருமணமாகாமல் இருந்தால் காரணம் சொல்லியாக வேண்டும். அதற்கு பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் பொருத்தமான சாதகம் வந்து சேரவில்லை என்பதைச் சாட்டாகத் தரகர் சொல்லி தப்பித்துவிடுவார்.

தங்கள் வாழ்க்கையில் சிறு தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக. எமது கலாச்சாரத்தை மதிக்கும் தன்மை, பிற இனங்களின் குடும்ப வாழக்கை முறைகள், பெற்றோர்களின் விருப்பு வெறுப்புக்கு மதிப்பு போன்றவையில் தேர்வு தங்கியுள்ளது. பல்கலைக்கழகங்களில் படித்து வெளியேறும் போதே நான்காண்டுகள் தம்மோடு கூடிப் பழகி படித்த ஆணையோ அல்லது பெண்ணையோ தனது இல்லற வாழ்க்கைக்கு தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது இன்று வழக்கமாய் இருந்து வருகிறது. இதற்குப் பல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. காரணம் அவர்கள் கருத்து பிள்ளைகலால் மதிக்கப்படுவதில்லை.

“அவர்கள்தானே வாழப் போகிறவர்கள். நாம் பொருத்தம், சாதி, குடும்பம் பார்த்துச் செய்து வைத்து பிழையேதும் நடந்துவிட்டால் பிறகு பழி எம்மீது தான் விழும” என்ற பயம் பெற்றோருக்கு வேறு. வேலை செய்யும் ஒரு ஸ்தாபனத்தில் ஒன்றாகப் பல காலம் பழகி, மனங்கள் இரண்டும்; ஒத்துப்போய்., காதலித்து திருமணம் செய்தவர்களும் இருக்கிறார்கள். நம் மனதுக்குப் பிடித்த          பொதுவாக ஒரு நல்ல குடும்பத்தில் ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ தேர்ந்தெடுத்து, பல காலம் பழகி அதன் பின்னர் திருமணம் செய்வது என்பது சிலருக்கு கிட்டும் அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். அப்படி கிட்டிய அதிர்ஷ்டத்திற்கும் சில சமயங்களில், சில ஆண்டுகளில், சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் சில ஆண்கள், பெண்களைத் தெரிந்தெடுப்பதில் மிகக் கவனமாக செயல்படுகிறார்கள். அதே போன்றே தான் பெண்களும்”.

“கனடாவில் வளர்ந்த பெண்கள் வேண்டவே வேண்டாம்;. அவையள் வரப்போகும் கணவனோடு கூடிப் பழகி பல மாதங்களுக்கு பின்னர்தானாம் பழகி கெமிஸ்டிரி பொருந்தினால் தான் பழகியவனை கணவனாக ஏற்பதா இல்லையா என்று தீர்மானிப்பார்களாம். வரப் போகும் கணவனின் குணத்தைப் பற்றி நல்லாக அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமாம். தம் விருப்பங்களுக்கு ஒத்துப்போகக் கூடிய ஒருவனோடுபேசிப் பழகி அவன் மனதில் உள்ளதை அறிந்த பின்னர் தான் திருமணமாம். இது ஒரு மாத காலம் எடுக்கலாம். ஏன் சில சமயம் பல மாதங்கள் கூட எடுக்கலாம்.; ஜாதகம் , சாதி, அந்தஸத்து பார்ப்பதெல்லாம் சுத்த ஹம்பக். தன் உழைப்பையும் படிப்பையும் மட்டும் நம்பி அவன் வாழக்கூடாதாம்.  தமக்கு கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாதாம்.” இந்த கோட்பாடுகளை பல பெண்கள்; சொல்ல அறிந்த எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. அதனால் தான் கனடாவில் பெண் எடுப்பதில்லை எனத் தீர்மானித்தேன். தாயகத்தில் தான் எனக்குப் பெண் வேண்டும் என்ற போக்கை கொண்டவனாக மாறினேன் நான். தமிழ் கலாச்சாரம் , பண்பு, ஒழுக்கம், அடக்கம், குனிந்த தலை நிமிராத போக்கு. இப்படி எனக்குள் பல எதிர்பார்ப்புப்கள்.  என் நண்பர்கள் எனது போக்கைப் பார்த்து என்னைக் கேலி செய்தார்கள்..

“என்னடா உனக்கு பயித்தியமா? கையில் வெண்ணெய் இருக்க ஊரெல்லாம் ஏன் அலைவான்?,  நீ இலங்கையில் வேலை செய்வதாய் இருந்தால் உனது கொள்கை சரியானது தான். ஆனால் நீ கனடாவுக்கு அகதியாய் வந்து இப்போது சிட்டிசனாகி நல்ல வேலையில் வேறு இருக்கிறாய். இந்த எட்டு வருட கனடா வாழக்கை உன்னை புது மனிதனாக மாற்றவில்லையா? கனடாவிலை படித்த தமிழ் பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதில் எல்லோரும் நீ நினைத்தது போல்; ஒரு வழிப் போக்குள்ளவர்கள் அல்ல. பல ஆண்களுடன் சரளமாக பழகும் சுபாவம் கொண்டவர்கள் அல்ல. அவர்களில் ஒருத்தியை பார்த்துக் கலியாணம் செய்யாமல் ஊருக்குப் போய் பெண் பார்த்து முடிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாயே. காலத்தோடு ஒத்துப் போகிறாயில்லையே. ஊரில் என்றால் பெண்ணைப்பற்றி , குடும்பத்தைப் பற்றி நாலுபேரிடம் விசாரிக்கலாம். ஒளித்திருந்து கூட பெண்ணைப் பார்க்கலாம். அதோடு தமிழ் கலாச்சாரத்தை நன்கு அறிந்தவளாக இருப்பாள். ஊரிலை இப்ப இருக்கிற நிலமையிலை என்ன செய்யப்போகிறாயோ தெரியாது. கிராமத்தில் கிணற்றுத் தவளையைப் போல வாழ்ந்த பெண் உனக்கு ஒத்துவராது. தினமும் கோயில் குளம். பிடிக்காத விரதங்கள் இல்லை. பெற்றோர் கீறிய கோட்டைத் தாண்டாதவர்கள். உனக்கோ மீன் இறைச்சி இல்லாமல் சாப்பாடு இறங்காது.  வீட்டைவிட்டு வெளியே வந்து அவர்கள் பலரோடு பேசி பழகுவது கிடையாது. அவர்களில் ஒருத்தியை திருமணம் செய்ய வேண்டும் என்று கனடா வாழக்கையில் வாழ்ந்த நீ நினைப்பது மடைத்தனம். நீ கலியாணம் முடித்தபிறகு உடனடியாக உன் மனைவியை உன்னோடு கனடாவுக்கு கூட்டி வரமுடியாது அது தெரியுமே உனக்கு? அப்படி வந்தாலும் ஒரு நல்ல வேலைக்கு அவளை அனுப்ப பல மாதங்கள் எடுக்கும். அதுவரை அவள் வீட்டுக்குள் சிறைப்பட்டு இருக்க வேண்டிவரும். ஒரு வருஷத்துக்கு மேல் எடுக்கும் அவளுக்கு விசா கிடைக்க”, என்று நண்பர்கள் என்னை எச்சரித்தார்கள்.

”இருக்கட்டுமே. இங்கை பெண் எடுத்து ஒரு சில வருடங்களில் விவாகரத்தில் போய் முடிந்த பலரைப் பார்த்திருக்கிறன். கனடாவிலை மேற்கத்திய ஸ்டைலிலை நம்மமுடைய ஆக்கள். வாழ நினைக்கினம். உடுப்பை மாற்றுவது போல் கணவனை மாத்துகினம். எனக்கு அது சரிப்பட்டு வராது மச்சான்” என்று எனது கருத்தைத் அவனுக்குத் தெரிவித்தேன்.

என்னோடு வேலை செய்த சாந்தா என்ற தமிழ்ப் பெண் எங்கள் கொம்பெனியில் வேலை செய்த வரதனைக் காதலித்து திருமணம் செய்தவள். அவர்கள் திருமணம் நான்கு வருடங்கள் தான் நிலைத்தது. இப்போது கையில் ஒரு குழந்தையோடு தனியாக தாயுடன் வாழ்கிறாள். அவளுக்கும் விவாகரத்து செய்து தனியாக வாழும் ஒரு கயனாகாரன் ஒருவனுக்கும் தொடர்பாம். அவனுக்குப் பிள்ளைகள் இல்லை. அது அவளுக்கு வசதியாயிற்று. விரைவில் அவள் திரும்பவும்; திருமணம் செய்யப் போகிறாளாம். பிள்ளையோடு அவளை அவன் ஏற்றுக்கொள்ள ரெடியாம். அவனோடு வாழ்ந்து அவனைப் பிடிக்காவிட்டால் திரும்பவும் விவாகரத்தா? வரதன் சாந்தாவை எதோ ஒரு காரணத்தை காட்டி விவாகரத்து செய்து அவனும் மறு திருமணம் செய்து கொண்டான். இங்கை மணவாழ்க்கை ஏதோ கார் மாற்றுவது போலாகிவிட்டது. இது போன்ற நிலையை நான் வரவேற்கத் தயாராயில்லை. எனது மனதுக்கு விரும்பிய பெண்ணை ஊரில் எடுத்தால், அங்கு வளரும் பெண்கள் பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் நல்ல சுற்றாடலில் வளர்பவர்கள். இங்கு போன்று மற்றைய இனத்தவர்களின் தாம்பத்திய வாழ்க்கை முறைகளை கண்டு, கேட்டு அறியாதவர்கள். ஆகவே எனக்குப் பிரச்சனை ஏற்படாது. கனடா மாப்பிள்ளை என்ற பட்டத்திற்காக எனக்கு எத்தனையோ பெண்களை ஊரில் பேசி வந்தனர் என் பெற்றோர். பல படங்களைப் பார்த்து விட்டு தள்ளி வைத்துவிட்டேன். ஆனால் சுபத்திராவின் படத்தை கண்டவுடன நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. காரணம் ஊரில் நான் படித்த கல்லூரியில் அவள் எனக்கு மூன்று வகுப்புகள் குறைவாக படித்தது உடனே என் ஞாபகத்துக்கு வந்தது.

”சுபி”, அப்படித்தான் அவளை அவளது சினேகிதிகள் அழைத்தார்கள். சுபி அப்படிப் பெரிய அழகியில்லாவிட்டாலும் படிக்கும் போது ஒழுக்கமான மாணவி என்று பெயர் பெற்றவள். சுமாரான பொது நிறம். ஆனால் என்னை விட நிறம் கூட. படிக்கும் போது  அவளோடு எனக்குப் பேசக் கிடைத்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. அவளது பார்வையில அப்போது ஒரு தனிக் கவர்ச்சி இருந்தது.. அதை மட்டும் கண்டேன். நீண்ட தலை மயிர். அவள் நடக்கும் போது நீண்ட பின்னலின் அசைவைக்கண்டு இரசிப்பேன். அவள் இலகுவில்  எவரையும் தலை நிமிர்ந்து பார்க்கமாட்டாள். சிரிக்கமாட்டாள். பார்த்தால் தன் கற்பு பறிபோய்விடும் என்ற எண்ணமோ என்னவோ. படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரி என்று சொல்லமுடியாது. கொஞ்சம் பாடக் கூடிய திறமையிருந்தது. அவளது தாயும் அந்த கல்லூரியில் படிப்பித்ததினால் தன்னை மற்றைய ஆசிரியர்கள் அவதானிக்கிறார்கள் என்ற பயத்தினால் மாணவர்களுடன் பேசுவதை தவிர்த்தாள். வீட்டிலும் கட்டுப்பாடு போலும். படிக்கும் போது அவளுக்கு ஒரு காதல் இருந்ததாக வதந்தி இருந்தாலும் நான் நேரடியாக காணவில்லை. அப்படி இருந்திருந்தால்தான் என்ன?. பள்ளிக கூட காதல் மலராத மொட்டு போன்றது.  சுபியின் ஓரே சகோதரி திருமணமாகி லண்டன் சென்று விட்டாள் என்பது மட்டும் எனக்குத் தெரியும். அவளுக்கும் இவளுக்கும் ஆறுவயது வித்தியாசம்.  சுபியோடு நான் பேசியது குறைவு.

ஒரே ஒரு தடவை டீச்சரை சந்திக்க வீட்டுக்குப் போனபோது கதவைத்திறந்து ”அம்மா கைவேலையாக இருக்கிறா உள்ளேவந்து இருங்கோ” என்று விறுக்கென்று சொல்லிவிட்டு அறைக்குள் சுபத்திரா ஓடிப் போனது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. தனது அறைக்குள் இருந்து ஜன்னல் ஊடாக என்னைக் கவனிக்கிறாளா என்று பார்த்தேன் ஆனால் அவளது கவர்ச்சியான கண்களைத்;தேடினேன். காணவில்லை. கல்லூரியில் அவளைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், நேரே என்னைப் பார்க்கமாட்டாள். அப்படி ஒரு நல்ல ஒழுக்கமான, கூச்சமுள்ள பெண் அவள். நல்ல குணமான பெண் கிடைக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்திருந்த போது தான் எனக்கு சுபத்திராவின் படம்; போஸ்ட்டில் ஊரிலிருந்து பெற்றோரிடமிருந்து வந்தது. பார்த்தவுடன் சுபத்திரா தான் நான் தேடிய பெண் என்று உடனே தீர்மானித்து விட்டேன். இப்படி ஒரு நல்ல குணமுள்ள, அடக்கம் ஓடுக்கமான பெண்ணைப் பார்த்து திருமணமான என் நண்பர்கள் பொறாமைப் பட வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அவர்களுடைய மனைவிமாருக்கும் அவளது நடத்தை ஒரு வழிகாட்டியாக இருக்கட்டுமே என நினைத்தேன். மறு கணம் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புதல் கொடுத்தேன். சுபியின் தாயுக்கு நான் அவளின் பழைய மாணவன் என்றபடியால் உடனே என்னைப் பிடித்துவிட்டதாம்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் ஊரில் போய் திருமணம் செய்து அவளோடு இருகிழமை வாழ்ந்துவிட்டு வந்தேன். வாழ்ந்துவிட்டு வந்தேன் என்பதை விட அவள் வீட்டில் இருந்துவிட்டு வந்தேன் என்றால் தான் பொருந்தும். புதுமணப்பெண் என்றபடியால் பயத்தாலோ அல்லது பெண்ணுக்குரிய கூச்சத்தாலோ, அல்லது மணமான பெண் எவ்வாறு கணவனின் ஆசைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்ற அறியாமையாலோ என்னவோ அவள் என் ஆசைகளை பூர்த்தி செய்யவில்லை. அதோடு தனக்கு மாதவிலக்கு என்று சாட்டு சொல்லி என்னை சில நாட்கள் ஒதுக்கி வைத்துவிட்டாள். என் தாகத்தை அவளால் தீhக்க முடியவில்லை. ஆரம்பத்தில் என்னிடமிருந்து ஒதுங்கி ஒதுங்கிப் போனாள். அதனால் அவள் மேல் நான் கோபப்படவில்லை அவளது வெகுளித்தனத்தையிட்டு பரிதாபப்பட்டேன். அப்படி ஒரு பெண்ணை நானே விரும்பி தேர்ந்தெடுத்ததால் இதையெல்லாம் நான் பொறுத்துக்கொள்ள வேண்டும் தானே.  முன்பின் தெரியாதவனை எப்படி அவளால் திடீரென்று ஏற்க முடியும் என்ற பயமோ தெரியாது. என்னுடன் நெருங்கிப் பழக சற்று தயங்கினாள்.

”ஏன் சுபி உனக்கு என்னை கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து தெரியும் தானே. இப்ப நான் உனக்கு தாலி கட்டிய கணவன். உன்னைப் போல் நல்ல குணம் உள்ள பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பதற்காகத்தான்  நான் கனடாவில் பெண் எடுக்காமல் இவ்வளவு தூரம் வந்து ஊரிலை  உன்னைக் கலியாணம் செய்தனான். இங்கை உள்ள பெண்களுக்கு கனடா மாப்பிள்ளை, அதுவும் நல்ல உத்தியோகத்தோடு கிடைப்பது அதிர்ஷ்டம். நான் கனடாவுக்குப் போனவுடன் வெகு சீக்கிரம் உனக்கு விசாவுக்கு ஆயத்தம் செய்கிறன். உன்னைப் பிரிந்து வெகுகாலம் என்னால் இருக்கமுடியாது சுபி”.

சுபத்திரா ஒன்றும் பேசாது தலைகுனிந்தபடி இருந்தாள். அவள் முகம் வெயர்த்து இருந்தது. அவள் கைளை நான் பற்றிய போது அதில் நடுக்கத்தைக கண்டேன்.

“ஏன் சுபி உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா? சொல்லு. அல்லது கனடாவுக்கு வர பயமா? சொல்லு சுபி”.

“அதொன்றுமில்லை. இது எனக்கு ஒரு புது அனுபவம்.” என்றாள் உதட்டுக்குள.

“பயப்படாதே நான் உன்னைப் பூப்போல பார்ப்பேன். நான்  உனக்கு விருப்பமில்லாமல் உன்னை திருமணம் செய்யமாட்டேன்”, என்று அவளுக்கு மனத்தைரியத்தை கொடுத்தேன்.

ஒரு கிழமையில் நான் அவளைப் பிரிந்து கனடா புறப்பட்டபோது அவளது முகத்தில் ஏக்கம் தொனித்ததை என்னால் உணரமுடிந்தது. பிரிய மனம் இல்லாமல் திருமணமாகியும் கணவனின் கடமையைப் பூர்த்தி செய்யமுடியாது, தாகத்துடன் தாம்பத்திய உறவு வைக்காமல் அவளைப் பிரிந்தேன். அவளது மனதில் என்ன இருந்ததோ எனக்குத் தெரியாது. ஆனால் கண்களில் கண்ணிர் வழிந்ததைக் கண்டேன். கலியாணம் செய்தும் பிரம்மச்சாரி என்ற நிலை. என் நிலையை நண்பர்களுக்குச் சொன்னால் அவர்கள் சிரிப்பார்கள். இதுக்குத்தான் ஊரிலை போய் பெண் எடுத்தாயா என்று என்னைப் பகிடி பண்ணுவார்கள்.

                                                        ♣♣♣♣♣

என் திருமணம் நடந்து ஒரு ஏழு மாதங்கள் உருண்டோடியது ஒரு கனவு போலிருந்தது. மனைவிக்கு விசாவர தாமதமாயிற்று. அடிக்கடி கோல் எடுத்து அவளோடு பேசுவேன். அவளது அழுகை மட்டும் தான் மறுபக்கத்தில் கேட்கும். ஏதோ அவள் சொல்ல நினைப்பாள் ஆனால் வார்த்தைகள் வெளிவராதது போல் எனக்கிருந்தது. நான் தொடர்ந்து நிறையப் பேசுவேன். அதற்கு அவள் ஒரு சில பதில்கள் மாத்திரமே சொல்லுவாள். அவளுக்கு ஏதும் வீட்டில் பிரச்சனையோ.  திரும்பவும் ஒருமாதம் லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குப் போய் வருவோமா என்று கூட யோசித்தேன்.

நான் பாவி. அந்த நேரம் பார்த்து எனக்கு மனேஜராக புரமோஷன் தந்து ஒரு செக்சனுக்கு பொறுப்பாக விட்டுவிட்டார்கள். லீவ் ஒரு வருடத்துக்கு தர மறுத்துவிட்டார்கள். என்ன செய்ய? உத்தியோகமா மனைவியா என்ற நிலை. கனேடிய இமிகிரேசனைத் திட்டித் தீர்த்தேன். கணவன் மனைவியை இவ்வளவு காலம் பிரித்து வைத்த பாவம் உங்களை சும்மா விடாது என்று வாயுக்குள் வந்தபடி திட்டினேன்.

“உனக்கு இஷ்டமிருந்தால் சொல்லு எனக்குத் தெரிந்த ஏஜன்சிகாரன் ஒருவன் இருக்கிறான் அவன் மூலம் அவளை இரண்டு கிழமைகளில் கனடாவுக்கு கூப்பிடலாம். ஆக செலவு 12 லட்சம ரூபாய் “, என்றான் என் நண்பன். அவன் சொன்னது தனது கொமிஷனையும் சேர்த்தோ என்னேவோ தெரியாது. எனக்கு அவன் சொன்ன குறுக்கு வழியில் போக விருப்பமில்லை. அவள் சட்டப்படி வர வேண்டும் என்பது தான் எனக்குச் சரியெனப்பட்டது.

கடிதமும் டெலிபோன் கோல்களும் தான் எனக்கு உதவின. ஆனால் எனக்கு அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருநத்து. நான் எம்.பியின் ஒபீஸ் படிகளில் ஏறி இறங்காத நாட்கள் இல்லை. அதோடை இந்த பாழாய்ப் போன சுனாமி வந்து எனது மனைவியின் விசாவை மேலும் தாமதிக்க வைத்து விட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசா கொடுப்பதை முதலில் கவனித்தார்கள் கனேடிய ஹைகொமிசன். அவர்களுக்கு எனது பரதவிப்பு தெரியவாப் போகிறது. என் நண்பர்கள் எனக்கு தாம் முன்பு எச்சரிக்கை செய்ததை நினைவூட்டி என் ஆத்திரத்தைக்  தூண்டினார்கள்.

எனது திட்டுகள் கனடா அரசின் காதில் கேட்டதோ என்னவோ கடைசியாக எனது மேல் கருணைகொண்ட கொழும்பு கனேடிய ஹைகொமிசன் அவளை மருத்துவ பரிசோதனைக்கு போய் வரும்படி அறிவித்திருக்கிறார்கள் என அறிந்ததும் , இனி குறைந்தது இரண்டொரு மாதங்களில் சுபத்திரா கனடா வந்துவிடுவாள் என்ற சந்தோஷம். அவள் வரமுன் நல்ல இரண்டு ரூம் கொண்டோவாக பார்த்து செல்ல வேண்டும். தேவையான கிங் சைஸ் கட்டில், வீட்டுக்கு தேவயான  சாமான்கள் வாங்கவேண்டும்.  நான் வேலைக்குப் போனால் அவள் பொழுது போகாமல் வீட்டில் தனியாக இருப்பாளே என்பதற்காக 27 அங்குள டிவியும், விசிஆரும்  வாங்கினேன். ஊர் புதினங்களை அசல் யாழ்ப்பாணத்து தமிழில் கேட்கட்டும் என்பதற்காக தமிழ் வானொலிகளை ஒலிபரப்பும் ரேடியோ ஒன்றையும் வாங்கினேன். அதில் போகும் கலந்துரையாடல்களை கேட்டாவது ஊர் நினைவுகளால் அவள் கவலைப்படாமல் இ.ருக்கட்டுமே என்பதற்காக.

நான் புது கொண்டோவுக்குப் போன போது ஒன்றைமட்டும் முக்கியமாக கவனித்தேன். ஒரு ஈழத் தமிழ் குடும்பமாவது நான் வசிக்கும் மாடியில் வசிக்கக் கூடாது என்பது எனது விருப்பம். பிறகு என்னையும் மனைவிiயும் கண்டு விட்டு, ”நீங்கள் எந்த ஊர் ? ஊரில் அவரைத் தெரியுமா? இவரைத் தெரியுமா? என்று சொந்தம் தேடியபிறகு  எனக்கு என்ன வேலை என்ன சம்பளம் என்று எனது பயோ டேட்டாவை கேட்கும் அளவுக்கு போய்விடுவார்கள். வசதியிருந்தால் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு மனைவியோடு வாருங்களேன் என்பார்கள். மேலும் எங்கள் குடும்பத்தைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ளவோ என்னவோ தெரியாது.. இது எனது நண்பன ஒருவனுக்கு ஏற்பட்ட அனுபவம். இதற்கு முன்னர் நான் இருந்த  அப்பார்ட்மெண்ட கட்டிடத்தில வசித்தவர்களில அறுபது விகிதம் தமிழ் குடும்பங்கள். கட்டிடத்துக்குள் நுழைந்ததும் மீன் பொரியலும் , இறைச்சி, மீன் கறி மணமும், தாளித்த வெந்தயக் குளம்பு வாசனையும தான் மூக்கைத் துளைக்கும். அதோடு மட்டுமல்ல ஒரு அப்பாhட்மெண்டில் கோயில் நடத்தி ஒரு பெண் சம்பாதிப்பதாக சிலர் சொல்லி கேள்விபட்டிருக்கிறன். உருவந்து நடக்கப் போவதை சொல்வாளாம். அதுவும் பூஜைக்கு பின். வெகு விரைவில் அவள் தனி வீடு வாங்கி ரிச்மெண்ட் ஹில்லுக்கு போகப் போவதாக சொன்னார்கள். கனடாவில் கடவுள் பெயர் சொல்லி மக்களை ஏமாற்றி பிழைக்கத் தெரிந்தவர்கள் அவளைப் போல் பலபேர். அந்தப் பிரச்சனைகள் உள்ள கட்டிடத்தில் எனக்கு அப்பார்ட்மெண்ட வேண்டவே வேண்டாம்.  எல்லாவீடுகளிலும் இருந்து வரும் வாசனைகள் ஒரு புதுவித கலவையாகி வயிற்றைக் குமட்டும் விதத்தில் கட்டிடத்தை தழுவும். அதனால் தான் அந்த மணமில்லாத பத்து மாடிக் கொண்டோவாக தேடிப் பிடித்து ஏழாவது மாடியில உள்ள அப்பார்ட்மெண்ட இலக்கம் 700 க்கு என் மனைவியோடு வாழ தீர்மானித்தேன.

கொண்டோ கட்டிடம் எனக்கு பிடித்துவிட்டது. அண்டர்கிரவுண்ட் கார் பார்க். வாடகை மாதம் 1400 நூறு டொலர்கள். நான் பிறந்த திகதியும் ஏழு, ஆகவே அப்பார்ட்மெண்ட எண்ணும் என் மனதுக்கு பொருந்திவிட்டது. அப்பார்ட்மெண்டில் இரண்டு அறைகள் அதில் ஒன்று பெரிய படுக்கை அறை. மற்றது அளவில் அதைவிட சற்று சிறியது. அதை எனது கணனி அறையாக வைத்திருக்க தீர்மானித்தேன். சுபி வந்ததும் அவளுக்கு நானே கணினி பயிற்சி கொடுக்க டெல் (Dellட)  கணினி ஒன்றை வாங்கினேன். ஊர் செய்திகளை சுடச்சுட அறியட்டுமே என்பதற்காக இண்டர்நெட் வசதியும் ஒழுங்கு செய்திருந்தேன். அவள் ஊரில் ஒருவனுக்கு வாழக்கைப்பட்டிருந்தால், இந்த வசதிகள் அவளுக்கு கிடைக்காமல போயிருக்கும் என்று எனக்குத் தெரியும். அவளை படிப்படியாக கனேடிய வாழ்க்கை முறையோடு ஒத்துப் போகக் கூடிய ஆயித்தங்கள் செய்திருந்தேன். ஊரில்  ஆர்மிக்கு பயந்து வாழவேண்டிய நிலை.

அப்பாhட்மெண்டில் ஒரு பெரிய ஹால். வசதியான பல்கனி. அதில் நின்று பார்த்தால் சீஎன் டவர் தெளிவாகத் தெரியும். இரவு நேரத்தில் டவுன் டவுன் ( Down Town) கார்த்திகை விளக்கீடு போல் காட்சி அளிக்கும்;. ஹாலுக்குப் பக்கத்தில் சமைப்பதற்கு எல்லா வசதிகளோடு சமையல் அறை. ஊரைப் போல் விறகு வைத்து கண் எரிய அடுப்பு மூட்டத் தேவையில்லை. அரை மணித்தியாலத்தில் சமையலை செய்;துவிடலாம். நாலு அடுப்புகளைக் கொண்ட சமையல் அடுப்பு. படுக்கை அறையோடு சேர்ந்து வசதியாக ஒரு குளியல் அறை;. படுக்கை அறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஊரில இருந்து திருமணமாகி விசா கிடைத்து, கிட்டத்தட்ட ஒரு ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் வர இருக்கும் என்மனைவிக்காக நான் வாங்கிய, இருவர் வசதியாக உருண்டு படுக்கக் கூடிய கிங் சைஸ் கட்டில். அதற்கு பொருத்தமான தலையணைகள்.  கட்டிலுக்கு அருகே ஒரு பெரிய ஜன்னல். அதனால் அறைக்குள் நல்ல வெளிச்சம். அங்கிருந்து பார்த்தால் பக்கத்தில் உள்ள கொண்டோவில் நடப்பதை அவதானிக்கலாம்.

பக்கத்து வீட்டு ஜன்னலைப் பார்க்கும் சந்தாப்பம் கிடைக்கும் போது பல சிந்தனைகள் என் மனதில் மோதிச் செல்கிறது. காதல் , பரிதாபம், மனித அபிமானம், நட்பு, இப்பபடி பல தோன்ற அந்த ஜன்னல் துணைபோகிறது. ”அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா””என்ற எதிர் நீச்சல் படத்தில் வரும் நகைச்;சுவை பாடல் என் மனக்கண்முன் அப்படியே ஜன்னலைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்து அவளுக்கும் கணவனுக்கும் இடையே ஏற்படும் ஊடல்களை எப்படி இரசிக்க முடிகிறதோ அதே போன்று ஜன்னலூடாக பக்கத்து வீட்டில் நடப்பதை பார்ப்பதில் தான் என்ன சிலுசிலிர்ப்பு? சுபியும் சௌகார் ஜானகியைப் போல் பாடத் தொடங்கிவிடுவாளோ. பெரும்பாலும் குடும்பங்களுக்கு பக்கத்து வீட்டில் நடப்பதைப் பற்ற்p அறிவது என்றால் அதில் தனிச் சுகம். காரணம் தமது வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து திருப்திபடுவதற்காகவோ அல்லது அவர்களது குடும்பவாழ்க்கையை தங்களது தாம்பத்திய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கவோ, அல்லது அவர்கள் நல்ல வசதியுள்ளவாகளாக அவர்கள் இருந்தால் உறவாடி பண உதவி பெறுவதற்காகவோ இருக்கலாம். பக்கத்துவீட்டில் காப்பி, சர்க்கரை, அரிசி, மிளகாய் வாங்குவதில் கூட பலருக்கு தனிச்சுகம் காண்பார்கள். இரவல் வாங்கியது திரும்பவும் கொடுக்கப்படுமா என்பது சந்தேகம். தாயகத்தில் வீட்டு ஜன்னலை விட வேலியில் அடுத்த வீட்டில் நடப்பதை விடுப்பு பார்பதற்கென உருவாக்கப்படும் ஓட்டை ஒரு வித ஜன்னலாகப் பயன்படுகிறது. வதந்திகளை உருவாக்க அவை துணைபோகிறது. பக்கத்து வீட்டுக்கு யார் வந்து போகிறார்கள், குளிக்கும் போது நிர்வாணமாக குளிக்கிறார்களா இல்லையா?. அதுவும் பக்கத்து வீ;ட்டில் ஒரு பருவப் பெண் இருந்தால் அங்கு வரும் ஆடவர்களைக் கணக்கெடுக்க அந்த வேலியில் போட்ட ஜன்னல் பெரிதும் துணை போகிறது. கனடாவில் பக்கத்து அப்பார்ட்மெண்டுகளில் நடப்பதை பைனகுலொர்ஸ் பாவித்து ரசிக்கும் ஜீவின்களுமுண்டு.

இந்த ஜன்னலூடாக என் வீட்டில் நடப்பதை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக தடித்த கரு நீல நிறத்தில்  கேர்ட்டனஸ் போட்டிருந்தேன். வெளியில் இருந்து பார்பபவர்களுக்கு அறைக்குள் நடப்பது தெரியாது. ஹாலில்  உள்ள ஜன்னலுக்கும் அதே மாதிரி கேர்டன்ஸ போட்டிருந்தேன். எல்லாம் என மனைவி வரமுன் நான் செய்த ஏற்பாடுகள். அவள் வந்ததும் என் நண்பர்களுக்கு ஒரு விருந்து கொடுக்க வேண்டும். சுபியை அறிமுகப்படுத்த வேண்டும். அவள் எனது நல்ல நண்பர்களின் குடும்பத்துடன் மட்டுமே. பழக வேண்டும். இங்கு இருக்கும் அவளது தூரத்துச் சொந்தக்காரர்களுக்கு அவள் வருவது தெரியக் கூடாது. தெரிந்துவிட்டால் ஊரில் இருந்து வரும் போது  அந்தச் சாமான் கொண்டுவா, இந்தச் சாமான் கொண்டு வா என்று பட்டியல் போட்டு; சுபியை பாரம் தூக்க வைத்து விடுவார்கள். என் பெற்றோருக்கு அறிவித்து விட்டேன அவள் இங்கு வரும் விஷயம், பிரயாணம் செய்யும் திகதி பற்றி ஊரில் ஒருத்தருக்கும் மூச்சு விடக் கூடாது என்று.

                                                         ♣♣♣♣♣

ஓரு பாடாக கனடாவுக்கு தேர் அசைவது போல் சுபத்திரா வந்து சேர்ந்தாள். எயர் போர்ட்டில் அவளை நானும் என்னோடு வேலை செய்யும் என் நண்பன் மகேசும்; அவனின் மனைவியும் வரவேற்பதற்காகப் போயிருந்தோம். சுபி ஜீன்சில் வருவாள் என்று எதிர்பார்த்த எனக்கு சேலை உடுத்து வந்ததிகால் அவளை என்னால் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. சற்று தோற்றத்தில் மாறியிருந்தாள். வெயிட் போட்டிருந்தாள் போல் எனக்குத் தெரிந்தது..

”என்ன சுபி கொஞ்சம் வெயிட் போட்டிட்டீர் போலத் தெரிகிறது? வரமுன்பு மாமியின் சமையலை ஒரு பிடிபிடித்திருக்கிறீர் போல தெரிகிறது” என்றேன் நான் அவள் வந்ததும் வராததுமாய்.  எனது மனைவி மெலிந்தருப்பதை விரும்புகிறவன் நான்.

”அப்படி  ஒன்றுமில்லை. நீங்கள் தான் கலியாணத்தின் போது இருந்ததிலும் பார்க்க மெலிந்திருக்கிறீர்கள் ” என்றாள்  சுபி.

”ஒவ்வொரு நாளும் அவருக்கு உங்கள் நினைவு தான் சுபி;.பாவம் பல இரவுகள் உங்கடை அவருக்கு நித்திரை இல்லை. நல்லாக சாப்பிடுவது கூடக் கிடையாது. நீர் இனி சுவையாக ஊர் சாப்பாடு சமைத்துப் போடும்” என்று பதில் அளித்தாள்  மகேசின் மனைவி.

சுபி வந்து இரண்டு நாட்களாகிவிட்டது. நாட்கள் போனது தெரியாது. அந்த இரண்டு நாட்களும் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். பாவம் நீண்ட பயணத்தால் சுபி களைத்திருப்பாள் என்று அவளை நான் தொந்தரவு செய்யவில்லை. நான் என்ன மிருகமா? இவ்வளவு காலம் பொறுத்தது இன்னும் சிலநாட்கள் பொறுக்க முடியாதா என்னால்.?  அந்த கிழமை முழுவதும் நான் லீவு போட்டிருந்தேன் சுபிக்கு சியர்சில் ( Sears)  நல்ல உடுப்புகள் வாங்க அழைத்து சென்றேன். ஒன்றாகப் போய் எனக்கு தெரிந்த ஒரு தமிழ் குரொசரி கடையில் மீன், மரக்கறி, பழங்கள், சரக்குத் தூள் வாங்கிவந்தோம். கடைக்காரார் என் மனைவியைக் கண்டதும் துருவித் துருவி கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். எனக்கு அவர் கேள்விகள் பிடிக்கவில்லை. அவசரம் அவசரமாக சொப்பிங்கை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம். வருகிற சனிக்கிழமை இரவு நான்கு குடும்பங்களுக்கு என் விட்டில் விருந்து. உம்மை அவர்களுக்கு அறிமுகப்படுத்தத்தான் இந்த ஏற்பாடு. நீர் சமைக்க தேவையிலலை. இங்கை ஓடர் கொடுத்தால நல்ல சாப்பாடு தயாராக இருக்கும். எங்களோடை சேர்த்து பதினாலு பேருக்குப்  பன்னிரெண்டு சாப்பாடு நல்லாய் போதும். நீரே சாப்பாட்டை தேர்ந்தெடும். நீர் ஒன்றும் சமைக்கத் தேவையில்லை. களைத்துப் போய் வந்திருக்கிறீh என்று அவளின தேகநலத்தின் மேல் அக்கறை கொண்டவன் போல் சொன்னேன்.

சாப்பாட்டைப் பற்றி நான் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தவள் திடீரென்று தன் வாயை இரு கையாலும் பொத்திக் கொண்டு வோஷ் ரூமுக்குள் ஓடிப்போனாள். அடுத்த நிமிடம் அவள் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. நான் பயந்து போனேன்.

”என்ன சுபி என்ன செய்கிறது. மத்தியானம் வெளியில் சாப்பிட்ட கடைச் சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லையா. அல்லது எயர் கனடா சாப்பாடு புட் பொயிச் (Blood Poisson) ஆக்கிவிட்டதா”? விசனத்தோடு அவளைக் கேட்டேன்.

”அப்படியில்லை. எனக்கு ஒன்று மில்லை. கொஞ்ச நேரம் என்னை நிம்மதியாகப் படுக்க விடுங்கள்” என்றாள் பதட்டத்துடன்.

அவளை அணைத்தபடி படுக்கைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தேன். திரும்பவும் அரைமைணி நேரத்தில ஓடிப்;போய் வாந்தி எடுத்தாள். அவள் அடுத்து அடுத்து வாந்தி எடுத்ததினால்  எனக்கு பயம் வந்துவிட்டது.

”வா சுபி இனி இதை டொக்டரிடம் காட்டாமல் விடமுடியாது. ஹெல்த் கார்ட்” கிடைக்காட்டாலும் பரவாயில்லை. நீர் லாண்டட் இமிகிரணட். எனது தமிழ் டொக்டரிடம் சொன்னால் அவர் உடனடியாக கவனிப்பாh” என்றேன்.. தன்னால் டாக்டரிடம்  வரமுடியாது என்று அடம் பிடித்த அவளை வற்புறுத்தி எனது குடும்ப டாக்டரிம் அழைத்துச் சென்றேன்.

டாக்டர் பரிசோதித்து விட்டு ஒரு வேளை வயிற்றுக் குழப்பமோ என்று தீர்மானிக்க இரத்தம், யூரின் பரிசோதனைகளை உடனடியாக செய்யச் சொன்னார். பக்கத்தில இருந்து பரிசோதனை நிலையத்தில் உடனடியாக அதைச் செய்தோம். சுபி அன்று முழவதும் பேயறைந்தவள் போல் இருந்தாள்.

அடுத்தநாள்டாக்டரின கிளினிக்கில் எங்கள் இருவரையும் வரும்படி; டாக்டரிடம் இருந்து கோலவந்தது. என்ன பிரச்சனையோஎன்று பயந்தபடி இருவரும்; சென்றோம். டாக்டரின அறைக்குள்போனதும் டாக்டர் உடனே

”கொன்கிராஜிலேஜன்ஸ்”  என்று தன் கையை நீட்டினார், டாக்டர் என்னை பாராட்ட.

”என்ன டாக்டர் எதற்காக என்னை பாராட்டுகிறீர்;கள்”?

”நீர் தந்தை ஆகப் போகிறீர். அதற்குத்தான் ” என்றார் டாக்டர்

எனக்குப் பாறாங்கல் ஒன்று என் தலையில் தூக்கிப் போடுவது போல் இருந்தது. திரும்பி பார்த்தேன் சுபியை. அவள் மௌனமாக ஏதும் தெரியாதவள் போல் கீழே பார்த்தபடி இருந்தாள்.

”என்ன டாக்டர் சொல்லுகிறீhகள்”?

”உமது மனைவி கரு தரித்திருக்கிறாள். இப்போ அவள் வயிற்றில மூன்றுமாதச் சிசு வளர்கிறது”.

வன்னால் டாக்டர் சொன்னதை நம்பமுடியவிலிலை, அந்த அறையில உள்ள பொருட்கள் எல்லாம் சுழலுவது போன்ற ஒரு உணர்வு  எனக்கு.

”உண்மையாகவா டாக்டர்? எதைக் கொண்டு சொல்லுகிறீர்கள்?

”நேற்று அவளைப் பரிசோதித்து நான் கண்ட அறிகுறிகளை வைத்து எனக்கு ஒரு சந்தேகம். அவளிடம் சில கேள்விகள் கேட்டேன் உமது மனைவி தந்த பதில்கள் எனக்கு சந்தேகத்தை தோற்றுவித்தது. பிளட், யூரின் பரிசோதனைகள் அவள் கற்பிணி எபதை உர்;ஜிதம் செய்துவிட்டது. இனி உமது மனைவியை கவனமாகப் பார்த்துக் கொள்வது உமது பொறுப்பு. உம்மை நம்பி ஊரிலை இருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறா. முதலில் அவவுக்கு ஹெல்த் இன்சுரள்ஸ் கார்ட்டை விரைவாக எடும்”, டாக்டர் சொன்னார்.

நான் நடுக்கத்தோடு பக்கத்தில் இருந்த சுபியை திரும்பவும் நோக்கினேன். அவள் ஒன்றும் தெரியாதவள் போல் தரையைப் பார்த்தபடி இருந்தாள். என்னால் நம்பமுடியவில்லை.

”கள்ளி. சாதுவாக இருந்து என்னை நீ ஏமாற்றி விட்டாயா? இதற்காகவா அவ்வளவு தூரம் வந்து உன்னைத் திருமணம் செய்தேன்? இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சையா”?  மனதுக்குள் நான் பொருமினேன். நான் தாலிகட்டினாலும் அவள் இன்னும் உடல் ரீதியாக எனக்கு சொந்தமாகவில்iயே!

(பி.கு.இது ஒரு உண்மைக்கதையை அடிப்படபடையாக வைத்து கற்பனை கலந்து எழுதப்பட்டது.  பெயர்கள் எவரையும் குறிப்பிடவில்லை. இக்கதையின் முடிவை வாசகர்கள் கையில்; விட்டுவிட்டேன். கதாநாயகன் சுபியை ஏற்றுக் கொண்டானா?. சுபி.அவனைக் கணவனாக ஏற்றுக் கொண்டாளா? விசா>கிடைத்து கனடா வரமுன் ஊரில் சுபிக்குநடந்ததுஎன்ன?.கணவனுக்கு நடந்ததைச் சொவ்லுவாளா ?)

                                                                       ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book