Gram Seller                       

நூறு ரூபாய் நோட்டு

எனது அடுத்த சிறுகதைக்கு எதைக் கருவாக வைத்து எழுதுவது என்று சிந்தித்தவாறு, இதமானகடல் காற்றைச் சுவாசித்தபடி கடற்கரை மணலில் போய் அமர்ந்தேன்

கரையை வந்து அடிக்கடி முத்தமிட்டு சென்ற கடல் அலைகளைப் பார்த்து இரசித்தேன் . அவ்வலைகில்; விளையாடிய சிறுகுழந்தைகள் என் கவணத்தை ஈர்த்தது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி தோன்றிய சுனாமி என்ற பெரும் அலைகளினால் எத்தனை ஆயிரம் உயிர்கள் பழியாகி இருக்கும் என்று என் மனதில் கேள்வி எழும்பியது. கடற்கரை மண்ணில் பிள்ளைகள் விளையாடுவது போல் நண்டுகள் ஓடி திரிநது கோலங்கள் போட்டன. அதையும் இரசித்தேன். சற்று தூரத்தில் ஒரு காதல் ஜோடி அரவணைத்தவாறு இருந்தனர். அன்று கூட்டம் அதிகமாக இருக்கவில்லை.

“ஐயா,  வீட்டில் தயாரித்த நல்லதிறமான சுண்டல், வடை இருக்கிறது வாங்கல்லையோ”, ஒரு சிறுவன் குரல் கேட்டு திரும்பிப்பார்த்தேன்.

ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் சுண்டல், வடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.

அவனைப பார்த்து நான் “ஏய் பையா, இந்த வயதில் பாடசாலைக்குப் போகாமல் சுண்டல் விற்கிறாயே, ஏன் பாடசாலைக்குப் போய் படிக்க உனக்கு வசதியில்லையா”? என்று நான் அந்தச் சிறுவனைக் கேட்டேன்

“இல்லை சாமி. என் அப்பா இறந்துவிட்டார். என் அம்மா இட்டலி, தோசை விற்று என்னையும் என் தங்கைமார் இருவரையும்  கவனிக்கிறாள். அவள் சம்பாதிப்பது குடும்பத்துக்குப் போதாது. அதாலை படிப்பை  பாதியில் நிறுத்தி விட்டு சுண்டல் விற்கத் தொடங்கினேன்” என்றான்.

அவனது நிலையைக் கேட்டு அச்சிறுவனுக்கு உதவ வேண்டும் போல் எனக்கு இருந்தது. அவனைப் பார்த்து

“சரி எனக்கு மூன்று வடைகளும்,, சுண்டலும் தா” என்றேன்.

தான் வைத்திருந்த பழைய சஞ்சிகை ஒன்றிலிருந்து இரு பக்கங்களைக் கிழித்து, சுண்டலையும் மூன்று வடைகளையும் அதில் வைத்து,  சுற்றி எனக்குத் தந்து என்னிடம் “பத்து ரூபாய் தாருங்கள் சாமி” என்றான். என்னிடம் மாற்றினக் காசு இல்லாத படியால் ஒரு நூறு ரூபாய் நோட்டை பேர்சில் இருந்து எடுத்து அவனிடம் நீட்டினேன்.

அச்சிறுவன் நூறு ரூபாய் நோட்டை வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தான் ஏதோ  புதுமையைக் கண்டவன் போல். அந்த நூறு நோட்டை அவன் பார்த்த விதம் அதுவே முதல் தடவையாக அச்சிறுவன் அதைப் பார்த்திருப்பான் போல் எனக்குத் தோன்றியது.

“என்ன பையா நோட்டைத் திருப்பித் திரும்பி பார்க்கிறாய்?; அது கள்ள நூறு ரூபாய் நோட்டில்லை. நான் உனக்குத் தந்தது உண்மையான நூறு ரூபாய் நோட்டு. என்னிடம் மாற்றின காசு இல்லாத படியால் தந்தேன்” என்றேன் சிரித்தபடி.

“சாமி ,நான் தந்த சுண்டலுக்கும், வடை இரண்டுக்கும் எனக்கு பத்து ரூபாய் தந்தால் போதும்”.

“உன்னிடம் மாற்றின காசு இல்லாட்டால், அதோ உணவு வி;ற்கும் தள்ளு வண்டிக்காரனிடம் போய் காசை மாற்றிக் கொண்டு வா. அவனிடம் மாற்ற காசு இருக்கும்” என்றேன்.

“சாமி இந்த பெட்டியையும் சுண்டலையும் பார்த்துக்கொள்ளுங்கள் நான் நூறு ரூபாய் நோட்டை மாத்திக் கொண்டு வரும்வரை“ என்று என்னிடம் வேண்டினான்;.

அவன் கொண்டு வந்த சுண்டலும் வடையும் இருந்த கண்ணாடிப் பெட்டியை என்னருகே வைத்துவிட்டு தள்ளுவண்டிக்காரனிடம் இச்சிறுவன் நூறு ரூபாய் நோட்டை மாற்றி வரப்; போனான்.

நான் அவன் தந்த சுண்டல் பொட்டலத்தை பிரித்தேன். சுண்டலும் வடையையும் அவன் சுற்தித் தந்த பேப்பரைப் பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி. அது ஒரு பழைய தமிழ் சஞ்சிகையில் இருந்து கிழிக்கப்பட்ட பக்கங்கள்; என்று ஊகிக்க எனக்கு அதிகநேரம் எடுக்கவில்லை. நான் நூல்களை தெய்வமாக மதிக்கும் எழுத்தாளன்.  அந்தப் பக்கத்தில் இருந்ததை வாசித்தேன். உடனே எனக்கு எனது இளமைக் காலத்தில் நான் இரசித்து வாசித்த  கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் தான் என் நினைவுக்கு வந்தது. உடனே அவன பெட்டி மேல் வைத்துச் சென்ற பழைய சஞ்சிகையை எடுத்துப் பார்த்தேன் அது ஒரு பழைய பல வருடங்களுக்கு முன் வெளிவந்த கல்கி சஞ்சிகை. யாரோ ஒருவர் பழைய பேப்பர்கள், போத்தல்கள் வாங்குபவனுக்கு இந்த கல்கி சஞ்சிகையை பேப்பர்களோடு விலைக்குப் போட்டிருக்கலாம். இந்த பழைய கல்கி சஞ்சிகை கை மாறி பழைய பேப்பர் போத்தல் வாங்குபவனிடமிருந்து சிறுவன கையுக்கு வந்திருக்கலாம். தமிழ் இலக்கியம், சுண்டல் விற்கவும் உதவுகிறதே என்று நான் கவலைப்பட்டேன்.

“கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?” என்பது போல் வாசிக்கும் அளவுக்கு கல்வி அறிவு இல்லாத சுண்டல்கார சிறுவனுக்கு கல்கியின் “பொன்னியின் செல்வன்” சரித்திர நாவலைப் பற்றி என்ன தெரியும்? நான் என்னைத் தேற்றிக் கொண்டேன்

வண்டில்காரனிடம் இருந்து நூறு ருபாய் நோட்டை மாற்pக் கொண்டு வநத அச்சிறுவன்

“இந்தாருங்கோ சாமி உங்கள் மிகுதிக் காசு” என்று மிகுதிப் பணமாகிய தொன்னூறு ரூபாய்களை என்னிடம் நீட்டினான்.

“பையா எனக்கு மிகுதி பணம் வேண்டாம். நீயே முழுப் பணத்தையும் வைத்துக்கொள். இதோ நீ தந்த சுண்டலும் வடையும்”, நான் சொன்னேன்.

”என்ன சாமி சொல்லுகிறாய்” சிறுவன் திகைத்துப் போய் என்னைக் கேட்டான்.

“நான் தந்த காசுக்கு நீ கிழித்து சுண்டல் சுற்றித்தந்த பழைய கல்கி சஞ்சிகையை மட்டும் எனக்குத் தந்தால் போதும். இனி சுண்டல் சுற்றி விற்பதானால் சஞ்சிகைகளிலோ அல்லது பழைய நூல்களிலோ இருந்து பக்கங்களை கிழித்து, சுண்டலை  சுற்றி விற்காதே. அது நீ தமிழ் இலக்கியத்துக்கு செய்த பெரும் தொண்டாகும்” என்று சொல்லி சுண்டலுக்குப் பதிலாக பழைய கல்கி சஞ்சிகையை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு, எனக்கு எனது அடுத்த சிறுகதைக்கு கரு கிடைத்து விட்டது என்ற திருப்தியில் கடற்கரையில் இருந்து எழும்பிச் சென்றேன். அச்சிறுவன் என் செயலைப்பார்த்து வாயடைத்துப் போய் நின்றான். அவன் அன்று முழுவதும் சுண்டல் வி;யாபாரம் செய்தாலும் அவனுக்கு நூறு ரூபாய்க்கள் கிடைத்திருக்குமா என்பது எனக்குச் சந்தேகம்.

                                                                             ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book