Vaarisu 3download                              

 வாரிசு

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், 1955ல் , யாழ்ப்பாணக் கச்சேரியில் அரசாங்க அதிபர் முதல் கொண்டு பியூன் வரை கிளாக்கர் கணபதிப்பிள்ளையை  தெரியாதவர்கள் இல்லை. கிளரிக்கல் சேர்விசில் இருபத்திரண்டு வயதில சேர்ந்த அவர் சீனியர் கிலாஸ் டூ கிளார்க் மட்டுமல்ல  ஒரு அதிசயமான பிறவி கூட. அவரது  அபாரமான ஞாபகசக்திக்கு அவர் எங்கையோ உயர் பதவியில் இருக்க வேண்டியவர். எதையும் மனதில் கணக்கு போட்டு சொல்வதிலும் அப்படித் தான். இலங்கை சரித்திரத்தில் விஜயன் கள்ளத் தோணியில் இலங்கைக்கு தனது கூட்டாளிமாரோடு வந்து இறங்கிய காலம் தொட்டு முக்கிய திகதிகளில் நடந்த சம்பவங்கள் எல்லாம் அவருக்கு மனப்பாடம். மகாவம்சத்தையும் சூலவம்சத்தையும் எழுதியதில் அவருக்கு ஓரு பங்குண்டோ என்று பலர் வியந்ததுண்டு. அரசியல்வாதிகளின் பிறந்த திகதிகளைக் கேட்டால் அவர் சொன்ன திகதிக்கும் அவர்கள் பிறந்த அத்தாட்சி பத்திரத்தில் உள்ள திகதிக்கும் எவ்வித வித்தியாசமும் இருக்காது. அதோடு மட்டுமல்ல கச்சேரியில் வேலை செய்தவர்களினது மாதாந்த சம்பளம் எவ்வளவு என்பதும் தெரியும். காஷியராக சில காலம் வேலை செய்த அனுபவமது.

இருபது வருடங்களுக்கு முன்னர் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறுசம்பவத்தையும் துல்லியமாக நனைவில் வைத்திருப்பது என்பது பலரால் முடியாத காரியம். ஆனால் எமது கதாநாயகன் கணபதிப்பிள்ளை அப்படி வாழவில்லை ஒருகாலத்தில் யாழ்ப்பாணக் கச்சேரியில கிளாக்கர் கணபதியை தெரியாதவர்கள் இல்லை. அவரது அமைதியான குணம், எதையும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல், ஏன் தொலை பேசி எண்களைக் கூட அவர் எழுதி வைத்தருப்பதில்லை. அவர் ஒரு நடமாடும் டெலிபோன் டிரக்டரி. எந்தக் பைலில் என்ன குறிப்பு இருக்கிறது. எந்த வருடம்,; எந்ந அரசாங்க அதிபரால் எழுதப்பட்டது என்பது போன்ற விபரங்களை கேட்டறியவேண்டும் என்றால் கிளாக்கர் கணபதியைத்தான் நாடுவார்கள். மேலிடத்தில் இருந்து வரும் சுற்றறிக்கையில் உள்ள விஷயங்கள் எல்லாம் மனப்பாடம். அவர் தான் செய்யும் உதவிக்கு உபகாரமாய் வாங்குவது கோடா போட்ட வைத்திலிங்கம் சுருட்டு ஒன்று தான். அவருடன் பேசவேண்டும் என்றால் இரண்டடி தள்ளி நின்று பேசவேண்டும் அவ்வளவுக்கு சுருட்டின் வாடை.  அதோடு வாயுக்குள் சுண்ணாம்பு, பாக்கு, புகையிலை போட்டு குதப்பும் வெற்றிலை வேறு. பற்கள் காவி படர்ந்து போயிருக்கும். அவர் சிரித்தால் சிவப்பு பல்லழகா என்று பலர் விமர்சனம் செய்வதுண்டு. அதை அவர் சீரியசாக எடுப்பது கிடையாது. நானோ திருமணமானவன். இனி ஆர் எனக்கு பெண்தரப்போகிறார்கள் என்பார். என்ன பாவம் செய்தாரோ அவர் மனைவி அவரிடம் இருந்து வரும் சுருட்டு வாடையை பொறுத்துக்கொள்ள.

அவர் மேசையில் வெள்ளியால் செய்த மூக்குப்பொடி டப்பா. இந்தியா போய்வந்த அவர் நண்பர் ஒருவர் தனது பென்சன் வேலையை சரிசெய்து கொடுத்ததற்காக பரிசாகக் கொணடு வந்து கொடுத்தது.  மனுஷன் கை நீட்டி லஞ்சமாக காசு வாங்காத சத்தியவான். பொய் சொல்லாத அரிச்சந்திரன். சில சமயம் பதில் தெரிந்தாலும் மழுப்பி விடுவார் அதனால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்தால்.  சில கேள்விகளுக்கு சிந்தித்து பதில் அளிப்பதற்கு முன்னர் மூக்குத் தூளைக் கிள்ளி, மூக்கின் இரு துவாரங்களுக்குள் அமுக்கி, உரிஞ்சு இழுத்து தும்மி விட்டு விட்டுத்தான் பதிலைச் சொல்லுவார். அதில் அவருக்கு ஒரு தனி இன்பம். அது அவருடைய மூளைக்கு ஒரு உந்தலை வேறு கொடுக்கிறது போலும். கோப்பில் உள்ள மூக்குப் பொடி கறையில் இருந்து கணபதி கையூடாக அது சென்றிருக்கிறது என்பதை ஊகிக்கலாம்.

சரி கிளாக்கர் கணபதியைப் பற்றி அறிமுகம் போதும் கதைக்கு வருவோம். அவரது குடும்பத்தை அறிமுகப்படுத்தாமல் கணபதியைப்பற்றி சொன்னால் மட்டும் கதையில் சுவையிருக்காது.

கணபதிதனதுமாமிமகளைச்சொத்துக்காகதிருமணம்செய்தபோதுஅவருக்குவயது இருபத்தி எட்டு. அவருக்கும் மனைவிக்கும் பதின்ரெண்டு வயது வித்தியாசம்.. என்ன கணக்கு பார்க்கிறீர்களா? ஆமாம். அவரது மனைவி தேவிகாவுக்கு திருமணமான போது வயது பதினாறு. பதினாறு வயதான இளம் மொட்டு. தேவிகா ருதுவாகி நான்கு வருடங்கள்தான். தாம்பத்திய வாழ்வுபற்றிய அனுபவம் அறிவு இல்லாதவள். ஆக கஷ்டப்பட்டு எட்டாம் வகுப்பை அவள் எட்டியதும் “இனி படித்தது போதும் உனக்காக மச்சான் காத்துகொண்டு இருக்கிறான். அதுவும் கவர்மேந்திலை பெரிய உத்தியோகம். அவன் உழைத்து போடுவான், நீ வீட்டிலை அடுப்படியை கவனித்தால் போதும்” என்று கட்டளையிட்டாள் தாய் தங்கம்மா. அவளை குணத்தில் தங்கம் என்று சொல்லமுடியாது. அவள் சொன்னது தான் வீட்டில் சட்டம். அவள் இட்ட கட்டளையை கணவனே தாண்டியது கிடையாது. காரணம், அவரிடம் வரும் போது அவள் கொண்டு வந்த சொத்;துதான் அவளுக்கு அந்த திமிரைக் கொடுத்தது. ஆனால் தங்கம்மாவுக்கு தமையன் மேல் மட்டும் தனி அன்பு.

அண்ணன் மகன் கணபதிதான் தன் மகளுக்கு புருஷன் என்று தேவிகா பிறந்த நாள் முதல் கொண்டே சொல்லிக்கொண்டே வந்தாள். கணபதியின் தாயால் கூட படித்த தனது சகோதரன் மகளை மருமகளாக்க வேண்டும் என்ற ஆசையிருந்தும் அதை நிறைவேற்றமுடியவில்லை . தங்கத்திற்கு ;இருப்பதோ ஒரே மகள். பாட்டன் விட்டுப் போன வீடு வாசல்கள் காணி பூமி ஏராளம். எல்லாம் தங்களது செலவுக்கு அல்லது பிஸ்னசுக்க பணம் தேவைபட்டபோது ஊர் சனங்கள் ஈட்டுக்கு வைத்து மீட்க முடியாது போன  சொத்துக்கள் . அதோடு அடைவு மீட்க முடியாது போன நகை நட்டுகள், வீட்டுப் பாத்திரங்கள். அறாவட்டியில் சேர்த்தபணம். அச்சொத்துக்கள் தங்களுக்குள் இருக்கவேண்டும் வெளியே போக கூடாது என்ற எண்ணம். அதோடு சொந்தத்துக்குள்ளை முடித்தால் சாதி சனம் பார்க்கத் தேவையில்லை. அதுமட்டுமல்லாமல் மருமகனை வீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால் தன் தமையனின் சொத்தும் வந்து சேரும்;. அவளது திட்டத்துக்கு வீட்டில் எதிர்ப்பு இருக்கவில்லை.

தேவிகா ஒரு வாயில்லா பூச்சி. கணபதிக்கு தன் மாமன் மகள் மீது ஒரு கண். அவளுடைய முகம் தோற்றத்தில் சரியாக சினிமா நடிகை தேவிகா போல என்று தன் நண்பர்கள விமர்சிக்க, அதுவே அவனுக்கு அவள் மேல் பிரியத்தை வளர்த்துவிட்டது. தேவிகா அப்படி ஒரு பேரழகியல்ல. இடுப்பில் சற்று கூடுதலாக சதைபோட்டிருந்தது. அவள் உயரத்தில் கணபதியை விடக் குறைவு. ஆனால் அவளிடம் ஒரு தனி கவர்ச்சியைக் கணபதி கண்டான்.

பதினாறு வயது இளம் சிட்டின் கழுத்தில் தாலியைக் கட்டி இரு வருடத்துக்குள் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி விட்டான் கணபதி. மாமியாரின் வற்புறுத்தலின் பெயரில் அவளது காலம் சென்ற தாய் நினைவாக சிவகாமி என்று பெபர் சூட்டினான். குட்டுப்பாடில்லாமல் அடுத்தடுத்து ஐந்து பெண்குழந்தைகளை சில வருட இடைவெளிக்குள் உருவாக்கியது கணபதி புரிந்த சாதனை. மனைவி தேவிகாவை ஒரு பிள்ளை உற்பத்தி செய்யும் மெசினாகவே கணபதி பாவிக்கிறான் என்று பலர் கச்சேரியில் கதைத்தாலும் அவன் அதை காதில்ல போட்டுக்கொள்ளவில்லை. பிள்ளைகளை வளர்க்க மாமி இருக்கும் போது அவனுக்கு என்ன கவலை. கடவுளாகவே பார்த்து தந்தது என்பான். தன் சந்ததி தளைக்க தனக்கு ஒரு ஆண்குழந்தை சரி கிடைக்காதா என்ற ஏக்கத்தின் முயற்சியின் விளைவே அந்த ஐந்து பெண்குழந்தைகளும். எனக்கு வயது நாற்பதாகிவிட்டது. ஒரு வேளை தனக்கு கொள்ளி வைக்க ஆண்குழந்தை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கணபதி ஏறி இறங்காத சாத்திரிமார் கிடையாது. ஒரு சமையம் ஒரு ஆண் குழந்தையை எடுத்து வளர்ப்போமே என்ற அவன் யோசனைக்கு தஙகம் இடம் கொடுக்கவிலலை. முடமாவடி சாத்திரி மட்டும் அவருக்குச சொன்னது மன ஆறுதலை கொடுத்தது. “ உமக்கொரு மகன் பிறப்பான் அவன் உம்மைபோலவே இருப்பான்” என்றார் சாத்திரியார். அது போதும் கணபதிக்கு. எண்டை மனுசிக்கு இப்ப வயசு இருபத்தெட்டு தானே. இன்னும் அவள் எனக்கு ஒரு ஆண்குழந்தையை பெற்று தரவாய்ப்புண்டு என்று தனது முயற்சியை கைவிடாததால் ஆறாவதும் ஏழாவதுமாக மேலும் இரண்டு பெண்குழந்தைகளை தேவிகா பெற்றெடுத்தாள்.

ஊரில் இருந்தால் தானே பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறாய் உனக்கு டிரான்சவரும் புரமோசனும் கொடுத்து கொழும்புக்கு அனுப்பி வைக்கிறேன்.  அப்படியாவது உன் மனைவிக்கு ஓய்வு கொடு என்று கடவுள் சிந்தித்தாரோ என்னவோ கொழும்பு கச்சேரிக்கு தலமை கிளாக்கராக மாறுதல் கிடைத்து போனான் கணபதி.. தகப்பனும் மாமியும் அரசியல்வாதிகளைச் சந்தித்து எவ்வளவு முயற்சி செய்தும் கணபதியை ஊரோடை இருக்கச் செய்யமுடியவில்லை.

“ சரி மூன்று நாலு வருஷமாவது கொழும்பிலை இருந்து தனது கெட்டித்தனத்தை காட்டி அடுத்து புரமோஷன் எடுத்து யாழ்ப்பாணக் கச்சேரிக்கு ஓஏ ( OA) ஆக வரட்டும் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள் தங்கம். “ஏன் மாமி எதற்கு யோசிக்கிறியள். கொழும்புக்கு நான் மாறிப் போனால் என்ன. யாழ்ப்பாணம் மெயில் டிரெயின் இருக்கவே இருக்கு. வெள்ளி இரவு மெயில் எடுத்தால் சனி விடிய வீட்டிலை நிப்பன். அதோடை ஒரு நாள் சிக் லீவு போட்டால் சனி, ஞாயிறு திங்கள் வீட்டிலை. திங்கள் இரவு மெயில் டிரெயின் எடுத்தால் செவ்வாய் விடிய கொழும்பிலை நிற்பன்” என்று மாமிக்கு ஆறுதல் சொன்னான் கணபதி. அவன் சொன்னது தான தங்கத்தின் மகளையும் பிள்ளையும் விட்டு பிரியமனமில்லை என்பதை மறைமுகமாக தெரியப்படுத்தவோ என்னவோ தெரியாது. அவன் சொன்னவாக்கைத் தவறவிடாமல் கொழும்புக்குப் போய் சில மாதங்கள் வார இறுதி நாட்களுக்கு மனைவி பிள்ளைகளுடன் கழித்துச் செல்வது கணபதிக்கு வழக்கமாகிவிட்டது. கணபதிக்கு தேவிகாவை காணாமல் ஒரு நாளும் இருப்பது கவலையாக இருந்தது. அவனுக்கு என்ன தேவை என்பது தேவிகாவுக்கு மட்டுமல்ல தங்கத்துக்கும தெரியும்.. வாரநாட்களில் பிரிந்திருக்கும் தம்பதிகளுக்கிடையே எவ்வளவோ பேச இருக்கும். பிள்ளைகள் இருந்தால் ஓடி ஆடி தொந்தரவு செய்வார்கள் என்பது அவளுக்குத் தெரியாதா என்ன. அதுவும் ஏழு பெண்பிள்ளைகள் என்றால் வீட்டில் அமைதி என்பதில்லை. அப்பா கொழும்பில் இருந்துவந்துவிட்டால் அவரைத் தாயோடு சில நிமிடங்கள கூட தனியாகப் பேசி மகிழ விடமாட்டார்கள். ஊரில் கணபதி கொழும்பால் வந்திருக்கும் நாட்களில் இரவு நேரங்களில சாட்டு சொல்லி பிள்ளைகளைத் தன் சம்பந்தி வீட்டுக்கு அனுப்பிவிடுவாள் தங்கம். மருமகனின் தேவையறிந்த மாமி. எங்கே இன்னும் இரண்டு பெண்களை உற்பத்தி செய்து விடுவானோ மகன் என்ற பயம் கணபதியின் தாயுக்கு. ஏன் என்றால் பிள்ளைபேறு பார்த்து பிளளையை வளர்ப்பது அவளது பொறுப்பு.

கொழும்பு வாழ்க்கை கணபதிக்கு சூடு பிடிக்கத்தொடங்கிவிட்டது. அதுவும் அவனோடு சேர்ந்து ஐந்து தமிழ் நண்பர்கள் அவனைப் போல் குடும்பத்தை யாழ்ப்பாணத்தில் விட்டு விட்டு கொழும்பில் பம்பலபிட்டியில் சமரி வாழ்க்கை நடத்துபவர்கள். சனி ஞாயிறு என்றால் சமரியில் குடியும் கும்மாளமும் தான். சமைக்க மாதவன் நாயர் என்ற கேரளக்காரன். நாயர் இரண்டு மூன்று சமhளுக்கு சமைப்பவன். ஓவ்வொரு சனிக்கிழமைகளிலும் உயிரோடு ஒரு இளசான ஊர்க் கோழியை வாங்கிவந்து சுவையாக மூன்று கறிகளோடு சமைத்து வைப்பான் நாயர். நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக பின்னேரம் சினிமாவுக்கு போவார்கள். இந்த வித்தியாசமான வாழ்க்கை கணபதிக்கு ஆரம்பத்தில் ருசிபடவில்லை. அவனுக்குத் தேவை தேவகியின் அணைப்பு. ஆனால் காலப்போக்கில் தேர்தல் வேலை காரணமாக ஒரு சனி ஞாயிறு கொழும்பில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது தான் ஊர் வாழ்க்கைக்கும், கேளிக்கைகள் நிறைந்த கொழும்பு வாழ்க்கைக்கும் அவனுக்கு வித்தியாசம் தெரிந்தது. அப்போதுதான் அவனது நண்பர்களின வற்புறுத்தலின் பெயரில் வெள்ளை சாராயத்தின சுவையை அனுபவிக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் இரண்டு கிலாஸ் உள்ளே போனதும் தனது மனதில் புதைந்திருந்த ஆசைகளை, அனுபவங்களை கணபதி வெளிக்கொண்டு வந்தான். பாவம் எவ்வளவு காலம் ஒருத்தியின் அணைப்பில் சுகத்தை அனுபவிப்பது?  தன் நண்பர்களைப் போல் புதிய உறவை அவன் மனம் தேடியது. அவனோடு சமரியில் வாழ்ந்த மகாலிங்கத்திற்கும் தியாகனுக்கும் அவர்களோடு ஓபிசில வேலைபார்த்த டைபிஸட்டுகளுடன் உறவு இருப்பது கணபதிக்கு தெரியும்.  அவர்களிடையே உறவு என்றால் அடிக்கடி கோல் பேசுக்கும் சினிமாவுக்கும் ஹோட்டலுக்கும் போய் வருமளவுக்கு வளர்ந்திருந்தது. அதில் ஒருத்தி நீர்கொழும்பைச் சேர்ந்த கத்தோலிக்கப் பெண. பெயர் ரீட்டா பெர்னாந்தோபுள்ளை. பெற்றோரின் பூர்வீகம் தமிழர்கள். பரவர் சாதி என்று மகாலிங்கம் சொல்லித்தான் அந்த சாதியைபற்றி முதல் தடவை கணபதி கேள்விப்பட்டான். மற்றவள் தெகிவளையைச் சேர்ந்தவள். எல்லோருடனும் கூச்சமின்றி பழகுவாள். தனக்கு வேண்டியது கிடைத்தால்; மற்றவர்களைப் பற்றி அவளுக்கு கவலை இல்லை. கண்டியில் வேலை செய்து விட்டு மாறுதலாகி கொழும்புக்கு வந்தவள். மல்லிகா அவள் பெயர். தாய் கம்பளையை பிறப்பிடமாகக்க கொண்ட சிங்களத்தி, தந்தை ஒரு மலைநாட்டுத் தமிழர் என்று தியாகன் தனக்கும் அவளுக்கு உள்ள தொடர்பை விளக்கினான்.

“நீங்கள் செய்வது பிழை என்று உங்களுக்குப் படவில்லையா?. ஊரிலைல் மனைவியும் பிள்ளைகளும் உங்களை நம்பி இருக்கிறபோது. இந்தச் சினேகிதம் அவசியமா? அவர்களுக்கு நீங்கள் இந்த உறவால் துரோகம் செய்யவில்லையா”?  கணபதி அவர்களுக்கு உபதேசம் செய்தான்..

“இது ஒரு பொழுது போக்கு மச்சான். மனைவிமாரை எப்பவும் பார்த்து வாழும் நாங்களும் உணர்ச்சிகளுக்கு அடிமைகள் தான். ஒரு மாற்றத்தை விரும்புவதில் என்ன பிழை? மாதம் மாதம் சம்பளம் எடுத்தவுடன் அவையளுக்கு பணம் மணியோடரிலை அனுப்புகிறோம் தானே. இனி என்ன வேண்டும்? எப்போதும் ஒரே சோறையும் கறியையும்; சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அலுப்புத் தட்டிவிடும். நாமாகவே அவர்களைத் தேடிப் போகவில்லை. அவர்களாகவே எங்கள் உறவை விரும்பி தேடி வரும்;போது நாம் என்ன செய்யமுடியும். உனக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நீ விட்டுவிடுவாயா”?, நண்பன் ஒருவன் கணபதியைக் கேட்டான்.

கணபதியால் பதில் சொல்லமுடியவில்லை. காரணம் வேறு டிப்பார்ட்மெண்டிலிருந்து மாறுதலாகி அவனது பகுதிக்கு வந்த ராஜேஸ்வரி தான். ராஜேஸ்வரியின் வருகை கணபதியின் போக்கில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. வெற்றிலை போடுவதை கணபதி நிறுத்திவிட்டான். அது மட்டுமன்றி அவனது மூக்குத் தூள் டப்பா மாயமாய் மறைந்து விட்டது. பற்கள் பளிச் என்று மின்னின. தினமும் இரு தடவை பல்லை மினுக்கி வெற்றிலைக் காவியை போக்கிவிட்டான். சுருட்டு வாடை எங்கு போய் ஒளிந்ததோ தெரியாது அதற்கு பதிலாக அவரிடம் 777 ஓடிக்கொலோன்வாசைனை தான் வீசியது. ராஜேஸ்வரியின் வருகை அவனைப் புது படிப்படியாக மனிதானாக்கிவிட்டது. தேவிகாவுக்கு தான் துரோகம் செய்வதாக அவன் நினைக்கவில்லை.

“என்ன கணபதி இப்படி மாறிவிட்டீர்”? என்று நண்பர்கள் கேட்டதற்கு.

“எல்லாம் எனது மனநிலை கருதிதான். காலத்தோடை நாமும் மாறத்தானே வேண்டும்”என்று; சுருக்கமான பதில் அவனிடமிருந்து வந்தது.

“ராஜேஸ் இதை ஒருக்கா டைப் செய்து தாரும” என்று கணபதி ராஜேஸ்வரியின் பெயரை உச்சரிப்பதில் அவர்களிடையே ஒரு தனி உறவு தொனித்தது. ஆனால் பலருக்கு அதன் இரகசியம் புரியாத புதிராக இருந்தது. அது காதலா அல்லது நட்பா?  கொழும்பு வாழ்க்கை சூடுபிடித்தபோது அவனது ஊர்வருகையில் அடிக்கடி தடங்கல்கள் ஏற்பட்டது. வேலையை சாட்டாக வைத்துக் கொண்டான். மருமகனில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு தங்கமே ஆச்சரியப்பட்டாள். தேவகி பெருமை பட்டாள். சுருட்டு, புகையிலை, வெற்றிலை பழக்கங்கள் அவனிடம் இல்லாமல் போனதால் தன் கணவன் திருந்திவிட்டான் என்று நினைத்தாள். பாவம் அவளுக்கு தெரியாது கொழும்பில் நடப்பவை. ஓவ்வொரு கிழமையும் தவறாது இருந்து வந்த அவனது வருகை மாதம் ஒரு முறையாகி. அதன் பின்னர் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாகக் குறைந்தது.  சரி நான்கு வருஷம் கொழும்பில் வாழ்ந்தது போதும் மருமகனை திரும்பவும் ஊருக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்த தங்கம் தனது அரசியல் செல்வாக்கைப் பாவித்து கணபதிக்கு திரும்பவும் யாழ்ப்பாணக் கச்சேரிக்கு மாறுதல் எடுத்துக் கொடுத்தாள். அவனுக்கோ கொழும்பை விட்டு பிரிய விருப்பமில்லை. பிரிய மனமில்லாமல் தனது நண்பர்களையும், கொழும்பு உறவுகளையும் விட்டு பிரிந்தான் கணபதி. யாழ்ப்பாணம் வந்தும் அடிக்கடி கொழும்பு கச்சேரியில் சில வேலைகள் செய்து முடிக்கவில்லை என்ற சாட்டில் கணபதி; அடிக்கடி போய் வந்த உண்மையான காரணம் ஊரில் எவருக்கும் தெரியாது. அவனால் கொழும்பில் தான் வாழ்ந்த நான்கு வருடம் எட்டு மாத வாழ்க்கையை மறக்க முடியவில்லை.

                                                                                              *********

திடீரென்று கணபதிக்கு ஐம்பத்திரண்டு வயதில் ஹார்ட் அட்டாக வரும் என்று எவரும் ஊரில் எதிர்பார்க்க வில்லை. அவருக்கு இப்படிநடக்க தான் காரணமோ என்று தேவகி கவலைப்பட்டாள். வேலை பழு அதிகம். அது உடலை பாதித்துவிட்டது என்றார்கள் கச்சேரி நண்பர்கள். எந்தப் பழுவை அவர்கள் குறிப்பிட்டார்களோ அவளுக்குத் தெரியவில்லை  இல்லை இல்லை கொழும்பு வாழக்கையில அவன் சாப்பிட்ட கடைச் சாப்பாடு; தான் காரணம. நேர காலத்துக்கு சனிக்கிழமையிலை எண்ணைய் தேய்த்து முழுகியிருந்தால் இப்படி நடந்திருக்காது என்றார்கள் உறவினர்கள்.

“இனி உவன் வேலை செய்தது போதும் ரிட்டையர் செய்து விட்டு வீட்டோடை இருக்கட்டும். இருக்கிற சொத்தைக் கவனிக்க ஆள் இல்லை” என்றாள் கணபதியின் தாய். தங்கத்திற்கு தன் மருமகன் இன்னும் வேலை செய்து பெரிய புரோமஷன் எடுக்க வேண்டும் என்று ஆசை. மாமியாரின் ஆசைக்காக பூரண சுகமடைய முன் ஒரு மாதத்தில் திரும்பவும் வேலைக்கு போனான் கணபதி. திரும்பவும் வேலையைச் சாட்டாக வைத்து கொழும்புக்கு, அடிக்கடி போய வரலாம்; என்று அவனுக்குத் தெரியும். கொழும்பு வாழ்க்கையை, அங்கு ஏறபட்ட இனிமையான அனுபவங்களை அவனால் மறக்க முடியவில்லை. ஒரு கிழமை கொழும்புக்கு தேர்தல்  வேலை என்று போய் வந்த கணபதி நெஞ்சுக்குள் வலிக்கிறது என்று படுத்தவன்தான் பாரிசவாதத்தால் பேசமுடியாது படுத்த படுக்கையாகிவிட்டான். வைத்தியர்களும்; சில நாட்கள் தான் அவன் வாழ்வான் என்று நாளும் குறித்துவிட்டார்கள். கணபதியியின் நிலை  எல்லோருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. தேவகி ஓவென்று வாய்விட்டு அழுதாள். அவரோடு வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து நினைத்து ஓப்பாரி வைத்தாள். கணபதியின் ஏழு பெண்களும் கணபதி படுத்திருந்த கட்டிலைச் சுற்றி கதறியபடி இருந்தார்கள். தங்கத்திறகுக என்ன செய்வது என்று தெரியவில்லை. மருமகனை திரும்பவும் தான் வேலைக்கு அனுப்பி இருந்திருக்கக்; கூடாது என்று தன்னைத் திட்டிக் கொண்டாள்.

அன்று காலை கணபதியின் தேகநிலை மோசமடைந்துவிட்டது. பாhவையில ஒரு ஏக்கம். கணவனின் பார்வையில இருந்து அவன் எதையோ சொல்ல வருகிறான் என்று தேவகியால் உணர முடிந்தது. தேவிகாவைச் கண்களால் அருகே அழைத்தான். அவளும் எதற்காக கணவன் அழைக்கிறான் என்று தெரியாமல் அருகே போனாள்

“என்ன அத்தான், என்ன செய்கிறது என்றாள். தண்ணி தரட்டா குடிக்க”?

கணபதி மூச்சு வாங்க கஷ்டப்பட்டான். நேற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின. தேவிகாவை விறைத்தபடி பார்த்தான். அவன் கணகள் களங்கின. கஷ்டப்பட்டு தலையணைக்கு கீழ் இருந்து ஒரு கவரை எடுத்து தரும் படி சைகை காட்டினான். அவளும் அ”த தேடி எடுத்தாள்.

“அதை படி, அதை செய்”.  என்று கஷ்டப்பட்டு வார்த்தைகள் அவனிடமிருசது சிதைந்து வெளிவந்தன. அதுவே அவனது கடைசி வார்த்தைகள். அவன் கண்கள் மூடின.

                                                                             *********

ஏதோ உயில் ஒன்றை எழுதிவைத்துவிட்டு கணபதி போய் விட்டானா என்று பலர் பேசிக் கொண்டார்கள். அவன் இறந்த கலவரத்தில் தலையணிக்கு கீழ் இருந்து எடுத்த கடித உரையை தனது இடுப்புக்குள் சொருகிக் கொண்டு பிரேதத்தை கட்டிப்பிடித்தபடி அழத் தொடங்கினாள் தேவிகா. முழு குடும்பத்தினதும் உறவினர்களினதும் ஓலச் சத்தம் சந்தி வரை கேட்டது. வீட்டு நாய் கூட அதைக் கேட்டு ஊளையிட்டது.

“இனி அழுதென்ன பிரயோசனம்?. அவன் உன் புருஷன் நல்ல வாழ்வு உன்னோடை வாழ்ந்து விட்டுத்தானே போயிருக்கிறான்.. இருக்குமட்டும் உன்னிலையும் பிள்ளைகளோடையும் பாசமாக இருந்தான் என்கிறது ஊருக்குத் தெரியும். பாவம் கொள்ளி வைக்க ஓரு மகனை தராமல் போயிட்டான். ஆசைப்பட்ட  அவனுக்குஅது அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை”, இது ஊர் கிழவி ஒருத்தியின் வியாக்கியானம்.

“அது சரி அவர் கண்மூடமுன் கவர் ஒன்றை உனக்கு தந்ததை கண்டனான்.. எங்கை வைச்சாய் அதை”? கணபதியின் தாய் கேட்டாள் மருமகளை. அப்போது தான் கணபதி கடைசியில் கொடுத்த கவரை தன் மடிக்குள செருகியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே அறைக்குள் அழுதுகொண்டே போய் கவரை பிரித்து பார்த்தாள் தேவிகா.

என் தேவிகாவுக்கு

உனக்கு நல்லாய் தெரியும் எனது கடைசி ஆசை எனக்கு என் மகன் கொள்ளிவைக்கவேண்டும் என்பது. உன்னால் எனக்கு ஒரு மகனை பெற்றுத் தர முடியவில்லை. ஊரெழு சாத்திரி ஒரு நாள் சொன்னது சரியாக நடந்து விட்டது. கொழும்பில் நான் வாழ்ந்தபோது என்னோடை வேலை செய்த ராஜேஸ்வரிக்கும் இடையே ஏற்பட்ட உறவினால் எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். தனிமையில் இருந்த எனக்கு ராஜேஸ்வரியின் தொடர்பு என் தனிமையின் விரக்தியைப் போக்கியது.  அவள் கற்பிணியாக இருக்கும் போது அவளை நான் ஏமாற்றாமல் இருப்பதற்காக உங்களுக்குத் தெரியாமல் ரெஜிஸ்டர் மரேஜ் செய்தேன். அது உனக்கு நான் செய்த பெரிய துரோகம் என்று எனக்குத் தெரியும். என் மகனுக்கு என் தாத்தாவின் பெயரான ஆறுமுகம் என்று பெயர் வைச்சன். என் மகன் ஆறுமுகம் தான் எனக்கு கொள்ளி வைக்கவேண்டும். தயவு செய்து ராஜேசுக்கு நான் இறந்தவுடன் அறிவிக்கவும். அவளுக்கு என் ஆசை தெரியும். அவள் நிட்சயம் என் ஈமச்சடங்கில் பங்குகொள்ள என் மகனையும் கூட்டிக்கொண்டு வருவாள். அவள் விலாசமும் தொலை பேசி எண்ணும் எனது டயரியில் எழுதி மேசை டிராயரில் வைத்திருக்கிறன்.  உங்கள் ஒருவருக்கும் தெரியாமல் அவளோடு உறவு கொண்டு ஒரு வாரிசைப் பெற்றதிற்காக அவளையும் என் மகனையும் ஒதுக்கி வைத்துவிடாதீர்கள். ஆறுமுகத்தின் உடம்பில் ஓடுவது என் இரத்தம். ஐந்து வயதான அவனை நீ பார்த்தால் என்னை பார்த்தமாதிரி. நான் முழு விசயத்தையும் கடைசி வரை மறைத்ததிற்கு என்னை மன்னிக்கவும். அதனால் குடும்பத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகவே அப்படி செய்தேன். நான் ராஜேசுடன் வாழ்ந்த கொஞ்ச கால வாழ்க்கையை என்னால் மறக்கமுடியாது. இந்தக் கடிதம் எனக்கு முதல் ஹார்ட அட்டாக வந்து நான் உயிரோடு போராடிய எனக்கு மரணம் எந்த நேரமும் வரலாம் என்ற பயத்தில்  எழுதியது. உன் பெற்றோரை சமாதானப்படுத்துவது உன் பொறுப்பு. எனது பெற்றோரும் உனக்க எதிராக போகமாட்டார்கள என நினைக்கிறன்.

உனது அத்தான்

கணபதி

கடிதத்தில எழுதியிருந்ததை தேவிகா வாசித்து முடித்ததும் அதிர்ச்சியில் பேசாது மௌனமாக நின்றாள். அவள் கையில் இருந்து கடிதம்; கீழே நழுவி விழுந்தது கூட அவளுக்கு தெரியவில்லை. அதே சமயம் அறைக்குள் வந்த தங்கம் கீழே கிடந்த கடிதத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள்.

“பாவிப் பயலே இங்கை விதைத்தது போதாதென்று கொழும்பிலையும் போய் விதை;துவிட்டு வந்திருக்கிறியா. வாரிசாம் வாரிசு” என்றாள் கோபமாக.

“அம்மா போதும் நிறுத்துங்கோ. ஆவர் மேல் கொபப்பட்டு பிரயோசனமில்லை. அவரது கடைசி ஆசையை நான் பூர்த்தி செய்தாக வேண்டும். எனக்கும் என் ஏழு பிள்ளைகளுக்கும் அவர் ஒரு குறையும் வைக்கவில்ல. நான் தான் அவர் ஆசைப்பட்டதிற்கு ஒரு வாரிசைப் பெற்றுக்கொடுக்காமல் குறைவைத்துவிட்டு விட்டேன். இனி அவர் எழுதிய படி நடக்கவேணடியதை கவனியுங்கள்” என்றாள் அழுதபடி தேவிகா. எங்கிருந்து அவளுக்கு அந்த தைரியம் வந்ததோ தெரியாது.

 v                                                                      ♣♣♣♣♣

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book