Sumaithangi
சுமை

பல விழுதுகளுடன் சடைத்து  வளர்ந்த ஆல மரம் பாதையோரத்தில் கம்பீரமாக காட்சியளித்தது. அதன் நிழலில் ஒரு சுமைதாங்கி. யாரோ ஒரு புண்ணயவான் சிந்தனையில் பல தசாப்தங்களுக்கு முன்னர் கற்களால் உருவாக்கப்பட்ட உபயமது. சுமைதாங்கியின் கற்களில் தமிழ் எழுதிப் பழகியிருக்கிறார்கள். பாவம் சுமைதாங்கி, ஏடாக மாறிவிட்டது போலும். எத்தனையோ வழிப்போக்கர்கள் தலையில் சுமந்து வந்த சுமைகளை அது கூலிபெறாமல் தாங்கிச் சேவை புரிந்தது. அச் சுமைதாங்கி 18ம் நூற்றாண்டில் மன்னர் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டது என அதன் வரலாறு பற்றிப் பேசினர் சிலர். சுமையை இறக்கிவைத்துவிட்டு வழிப்போக்கர்கள் ஆலமர நிழலில் இளப்பாறிச் செல்வதுண்டு . மரமும் சுமைதாங்கியும் இணைந்து செய்த சேவையை அவ்வூர் மக்கள் கவனித்ததாக இல்லை. பாதைக்கருகே இருந்த அந்த சுமைதாங்கியை பெயர்த்து எடுத்து பாதையை விரிவாக்க வழி விட வேண்டும். அப்பொழுதுதான்  கிராமத்துக்கு பஸ் போக்கு வரத்து வருவதற்கும் கிராமம் முன்னேறவும் வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்கள் ஊருக்கு ஏதோ நல்லது செய்யப் போவதாக நினைத்த சில பணம் படைத்த அரசியல் பிரமுகர்கள். முதலில் சுமைதாங்கி, அதன் பின்னர் ஆல மரமா அவர்களது இலக்கு என்ற கேள்வியை எழுப்பினான் முற்போக்குவாதியான ஒரு கிராமத்து இளைஞன். அத் திட்டத்தை முன் வைத்தவர்களுக்கு வாழ்க்கையில பணம் கைநிறைய இருந்ததால் குடும்பச் சுமை, உழைப்பாளிகளின் பாரம் , சமூக சேவை போன்றவை முக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாதை ஓரமாக, ஆல மரத்துக்கு அண்மையில் ஓலைக் கூரையுடன் சிறு தேனீர் கடை வைத்திருந்த முருகேசு சுமைதாங்கியும் ஆல மரமும் செய்த சேவை பற்றி கதையாக சொல்லக்; கூடியவன். அது தேனீர் கடை மட்டுமல்ல சைக்கில் கடையும் கூட.

ஒரு சமயம் கடும் வெய்யிலில் தலையில் தனது உற்பத்திப் பொருட்களைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பதற்காக வியர்க்க வியர்க்க சுமந்து வந்த விவசாயி ஒருவன் மூர்ச்சித்து கீழே விழாத நிலையில் அவனுக்கு கைகொடுத்தது அந்தச் சுமைதாங்கி. கொண்டு வந்ததை அதில் வைத்துவிட்டு மயக்கம் கண்களைச் சுழட்ட கீழ் முச்சு பெரு முச்சு வாங்கியபடி  சுமையை தாங்கி வந்தவன், தூணில் சாய்ந்தபடி மயங்கிவிட்டான். அரை உயிரோடு இருந்த அம்மனிதனைக் கண்ட முருகேசு ஓடிப்போய்; முகத்தில் தண்ணீர்; தெளித்து வரண்ட தொண்டை இதமாக இருக்க பானையில இருந்த குளிர்ந்த தண்ணீரைக் கொடுத்து சுயநிலைக்கு அவனைத் திருப்பிக் கொண்டுவந்தான். பிறகு தான் தெரிய வந்தது தன்னைப் போல் பெரும் குடும்பச்சுமையையும் கடன் சுமையையும் அவ்விவசாயி சுமக்கிறான் என்று. அது போல் எத்தனையோ வழிப்போக்கர்களை முருகேசு சந்தித்து உறவாடியிருக்கிறான். அக்கிராமத்துக்கு வந்து போகும் வழிபோக்கர்கள் பலர் முருகேசுவின் ஆட்டுப்பால் கலந்த ஆடை மிதக்கும் தேனீரையும் கண்ணாடிப் போத்தல்களுக்குள் இருந்த சுடச் சுட வடையையும்; சுவைத்துச் செல்லாதவர்கள் இல்லை. அதுவும் தன் கைப்பட தயாரித்த தேனீரும் இறால் புதைத்த கடலை வடைக்கும் ஒரு தனி இலட்சனை இருப்பது முருகேசுவுக்குத் தெரியும். அந்த வடையின் சுவையை அனுபவிக்கவே வெகுதூரத்தில் இருந்து நேரே கள்ளுத்தவறணைக்குப் போக முன் பலர் வந்து வாங்கிப் போவதுண்டு. மாலை நான்கு மணிக்குள் தயாரித்த வடைகள்முடிந்து விடும் அளவுக்கு வியாபாரம் ஓரளவுக்குச் சிறப்பாக இருந்தது.  தேனீர் கடை மட்டுமல்ல சைக்கில்கள் வாடகைவிடுவது, பஞ்சரான டியூப்புகளை சில நிமிடங்கள் தேனீர் குடித்து முடிப்பதற்குள் ஒட்டிக் கொடுப்பது, சைக்கில் சில்களை நெளிவெடுப்பது, புது டயர்கள் மாற்றுவது விற்பனைக்கு வந்த பாவித்த சைக்கில்களை நல்ல விலைக்கு விற்று கொமிஷன் பெறுவது முருகேசுவுக்கு கைதேர்ந்த கலை. ரலி , ரட்ஜ், ஹம்பர், பஜாஜி சைக்கில்களின் . தரம் , சூட்சுமங்களை முற்றாக அவன் அறிந்து வைத்திருந்தான்.

மரமும் சுமைதாங்கியும் செய்த சமூக சேவையில் தனக்கும் பங்குண்டு என்பதை அவன் அறியாமல் இல்லை. ஆனால் தான் செய்த சேவை வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது  என்பதும் அவனுக்கு தெரியும். இன்னும் சில வருடங்களில் மோட்டர் சைக்கில்களை திருத்துவதும், வாடகைக்கு விடுவதும் போன்ற தொழில் ஸ்தானத்துக்கு தான் உயர வேண்டும் என்பது அவன் தினமும் கண்டுகொண்டிருக்கும் கனவு. அவ்வியாபாரம் அவனது தந்தை விட்டுச் சென்ற முதுசம். அக்கடையில் தான் தன் தந்தையிடமிருந்து வேலை கற்றவன். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன். படித்துப் பட்டம் பெற்றவர்கள் வேலையில்லாமல் திரிவதைக் கண்ட அவன் தன் குடும்பப் பாரத்தைச் சுமக்க தனக்குக் கைகொடுப்பது அக்கடைதான் என்பதை அவன் புரிந்து கொள்ள அதிக காலம் எடுக்கவில்லை.

கடை அமைந்திருந்த காணி அவனுக்குச் சொந்தமில்லாவிட்டாலும் கடையின் உரிமை அவனுடையது. பாதை விரிவுத் திட்டத்தில் சுமைதாங்கியும் ஆலமரமும் மறைந்து விட்டால் தன் காணியும் கடையும் பறி போய் விடும் என்ற பயம் அவனுக்கு இருந்து வந்தது. தனது மனைவி, அவளது வயிற்றில் வளரும் குழந்தை அதோடு வளர்ந்தபிள்ளைகள் மூவர் இவர்களின் வருங்கால வாழ்க்கைச் சுமையைத் பல வருடங்கள் தானும் தன் சைக்கில் கடையும் தான் சுமக்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்கு உதவியாக சில சமையங்களில் அவனது மூத்த மகன் செல்வராசு உதவியாக இருப்பான். தன் தொழிலை, நம்பிக்கை உள்ள ஒருவனுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் தனக்குப் பின் தன்னைப் போல் கடையின் பொறுப்பை அவன் எடுக்கலாம் அல்லவா? கடையிருந்த இடம் அவனுக்கு அதிர்ஷடத்தைக் கொடுத்தது. “சுமைதாங்கி சைக்கிள் கடை” என்றால் அவ்வூரில் தெரியாதவர்கள் இல்லை. கடைக்கு வந்திருந்து முன்னே போடப்பட்டிருந்த சுண்ணாம்பு கறைகள் படர்ந்த இரு பழைய வாங்குகள். கடையில் தொங்கிக் கொண்டிருந்த சுவையான கதலி வாழைக் குலை. போத்தல்களில் அலங்கரிக்கும் உணவுப் பண்டங்கள், தேனீர் தயாரித்து வழங்க உதவியாக இருக்கும் பித்தளைப் பாத்திரம். இவை முருகேசு கடையின் அடையாளச் சின்னங்கள். வாங்குகளில் அமர்ந்து பொழுது போக்க அரசியல் பேசுவது முருகேசுக்கு பிடிக்காத விடயம். அதற்காகவே கடையில் “வம்பும் வதந்தியும் வேண்டவே வேண்டாம்” என்ற இரத்தினச் சுருக்கமான வசனத்தை பலகையில் எழுதியிருந்தான்.

“ கடன் நட்புக்கு பகை” என்ற வாசகம் கடன் கேட்பவர்களை கிட்ட நெருங்கவிடாது தடுத்தது.  அரசியல் பேசுவதால் சண்டை உருவாகி சினிமாப் படங்களில் வரும் காட்சியைப் போல் தனது கடை பாதிப்படையக் கூடிய நிலையை அவன் தவிர்த்தான். இரு சினிமா நடிகைகளின் விளம்பரப் படங்கள் மட்டும் அவனது கடை மேல் வழிபோக்கரின் கவனத்தை ஈர்த்தது. அதை இரசித்து விமர்சனங்கள் செய்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். படங்களை தன் கடையில் ஒட்டுவதற்கு முருகேசு பணம் கேட்காமல் இல்லை. “வாழ்க்கையே ஒரு வியாபாரம்” என்பது அவனது கொள்கை. வம்பு பேசி பிரச்சனை உருவாகாமல் தவிர்ப்பதற்காக தனக்குத் தெரிந்த ஒருவர் அன்பளிப்பாக கொடுத்துச் சென்ற பழைய வானொலி பெட்டி ஒன்றை அடிக்கடி தட்டிக் கொடுத்து பாட வைத்து வாடிக்கையாளர்களின் வீண் பேச்சைத் திசை திருப்பி விடுவான்.

சில சமயங்களில் முருகேசு தன் கடையை தன் பதினான்கு வயது மகனின் பொறுப்பில் விட்டு விட்டு தன் குடும்பச்சுமையை சைக்கிளில் சுமந்து செல்வான் பாடசாலைகளுக்கும் உள்ளூர் சந்தையில் பொருட்கள் வாங்குவதற்கும். அந்தப் பயணத்தை பார்த்து பலர் அதிசயித்ததுண்டு. எவ்வாறு முருகேசு தன் குடும்பத்தோடு சரிந்து விழாமல் சாதுர்யமாக சமநிலைபடுத்தி சைக்கிளில் சர்க்கஸ் வித்தை செய்பவன் போல் குடும்பத்தோடு பயணம் செய்கிறான் என்பது அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது.

மூன்று மைல் தூரத்தில் உள்ள அவனது குடிசை வீட்டுக்கும் நகரத்தில் உள்ள கடைகளுக்கும் போக அவனது நாற்பது வயசுள்ள சைக்கில் தான் வாகனம். அவன் தந்தை பாவித்த ரெலி சைக்கிள் என்ற படியால் அதைத் தன் மனைவிபோல் கவனித்து வந்தான். யாரும் அதை களவெடுத்து செல்லாத வாறு இரண்டு செயின் போட்டு பெரிய ஆமை பூட்டு போட்டு செல்வது அவன் வழக்கம். தன் மகன் செல்வராசு கூட அதைப் பாவிப்பதை அவன் விரும்பியதில்லை. அவன் குடும்பத்தோடு சைக்கிலில் போகும் காட்சியைப் பார்த்து. அதோ பார் முருகேசுவின் குடும்பச் சுமையை சைக்கில் சுமப்பதை. பாவம் டவுனில் மட்டும் இக்காட்சியை பொலீஸ் கண்டால் நான்கு பேர் ஒரு சைக்கிளில் போன குற்றத்திற்காக வழக்கு தொடர்ந்து தண்டப்பணம் கட்டவைத்து விடுவார்கள். பாவம் முருகேசுவின் ரலி சைக்கில். அதற்கு மட்டும் முறைப்பாடு செய்ய வாயிருந்தால் தன்னை சுமைதாங்கி போல்; முருகேசு குடும்பம் பாவிக்கிறது என்று மனித உரிமை மீறல் குழுவுக்கு முறையிட்டு முருகேசு மேல் நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் அப்படி செய்யாது தன் மேல் விசுவாசம் வைத்திருந்த காலம் சென்ற முருகேசுவின் தந்தை மீதும், தன்னைத் தினமும் பராமரித்து, துடைத்து அழகு படுத்தும் முருகேசுக்கும் அவமானத்தை கொண்டு வர அது விரும்பவில்லை. ஆலமரத்து சுமைதாங்கி போல் நான் இந்த பிறப்பில் இருக்குமட்டும்; சுமையை தாங்கி நல்ல கர்மாவை சேர்த்துவிட்டு அடுத்த பிறவியில மோட்டார் சைக்கிளாகவோ அல்லது வாகனமாகவோ சரி பிறக்க மாட்டேனா என்ற நப்பாசை அதற்கு. தனது நீண்ட கால சேவயின் போது ஒரு தரமாவது நடுவழியில் முருகேசு குடும்பத்தை நட்டாற்றில் விட்டுவிடவில்லை அவ் ரெலி சைக்கிள்.

                                                                                                   ♣♣♣♣♣

தனது குடும்பத்தை வீட்டில் இறக்கிவிட்டு  கடைக்கு திரும்பிய முருகேசுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு பிற நாட்டவர் அவனை சந்திப்பதற்காக காத்திருந்தார்.

“அப்பா இவர் பெயர் ஜோன். உங்களுக்காக கண நேரம் காத்திருக்கிறார்” என்றான் ஆங்கிலம் அறைகுறையாகத் தெரிந்த அவர் மூத்த பிள்ளை செல்வராசு. மகன் செல்வம் ஆங்கிலம் பேசுவதை முருகேசு பெருமையாக பேசிக் கொள்வான்.

“ வந்தவருக்கு தேனீரும் வடையும் கொடுத்தனீயா?” முருகேசு மகனை பார்த்து கேட்டார்.

“ இல்லையப்பா நீங்கள் வந்தபின் பார்ப்போம் என்று விட்டார்”

வந்தவரின் தோளில் ஒரு கமெரா தொங்கிக் கொண்டிருந்தது. அவர் தமிழ் பேசியது முருகேசுக்கு வியப்பாக இருந்தது.

“ Are you Mr Murugesu?” என்று முதலில் ஆங்கிலத்தில் கேட்டார்.

“ தன் பெயரை கேட்டவுடன் உடனே “ ஓம் சேர்” என்றான் பணிவுடன் முருகேசு அவரது வெள்ளை றிறத் தோலுக்கு மதிப்பு கொடுத்து.  அது பிரித்தானியர் ஆட்சியின் போது உருவாக்கப்படட் அடிமைத்தனத்தின் பிரதிபலிப்பு.

“ யோசிக்காதையும் நான் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் பேசுவன். நீர் உமது ரெலி சைக்கிள் நாலு பேரை சுமந்து செல்வதை என் நண்பர் எடுத்த ஒரு புகைப்படத்தில் பார்த்தேன். பிரமாதமான படம். எப்படி அப்படி பலன்ஸ் செய்து கொண்டு குடும்பத்தோடு டிரவல் செய்கிறீர். ஏதும் அக்சிடென்ட் நடக்கும் என்ற பயமில்லையா உமக்கு?”

“எல்லாம் அனுபவம் தான் சேர். இது உறதியான சைக்கிள் பல வருடங்களாக பாவிக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு என் தந்தைiயார் இதை புதுசாக வாங்கி பாவித்தவர். அவர் இறந்த போது இது என் கையுக்;கு வந்துவிட்டது அவர் நினைவாக.”

“ இப்போ இதன் வயது நாற்பது வருடம் இருக்குமா ”

“ கூட இருக்கலாம். என் அப்பா எப்போ வாங்கினார் என்று எனக்குத் தெரியாது”

“சைக்கிலைப் பார்த்தால் அப்படி நாற்பது வருடத்துக்கு முன்பு வாங்கினதாக தெரியவில்லை. ஏதோ புதிய சைக்கிள் போல் அதை கவனித்து வருகிறீர் போல் தெரிகிறது”

“ ஓம் சார். இதை நம்பித்தான் என் குடும்பம் இருக்கிறது. குடும்பத்தின போக்கு வரத்துக்கு இது தான் சேர் உதவுகிறது”

“புரிகிறது அந்தப்படத்தைப் பார்த்தபொது. ரலி சைக்கிள் கொம்பெனிக் காரர்களுக்கும், சஞ்சிகை ஒன்றுக்கும், உமது ரெலி சைக்கிலை சுமையோடு படம் எடுத்து கட்டுரையொன்று எழுதித் தங்களுக்கு அனுப்பும்படி கேட்டிருந்தார்கள். அது தான் உம்மை சந்தித்துப் பேசலாம் என வந்தேன்””

அவர் சொன்னதைக் கேட்டது முருகேசுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“என்ன சேர் சொல்லுகிறீhகள். இந்த பழைய சைக்கிளுக்கு அவ்வளவு மதிப்பா”?

“மதிப்பு அதன் தரத்திலும், உத்திரவாதத்திலும,; வயதிலும் தங்கியுள்ளது. பழைய பொருட்களுக்கு வெளி நாடுகளில நல்லமதிப்பு அதை Antique Products என்பாகள் ஆங்கிலத்தில்;. உமது சைக்கிள் கடை நான்; எழுதப் போகும் கட்டுரைக்கு துணை போகப் போகிறது. பின்னடைந்த நாடுகளில் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிலைப் போல் சைக்கில் தான் முக்கிய வாகனம். எல்லோராலும் காரும் . மோட்டார் சைக்கிலும் வாங்கும் வசதிகள் இல்லை. அதோடு பெற்றோல் விலை அதிகம”.

“உண்மைதான் சேர். இப்போ என்னிடம் ரிப்பெயருக்கு வரும் சைக்கில்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சைக்கிலை தான் பலர் விலை குறைவு என்ற காரணத்தால் வாங்குகிறார்கள். ஆனால் அவை ரெலி சைக்கிலின் தரத்துக்கு ஈடாகாது என்பது பலருக்கத் தெரியும்.. ரலி சைக்கிள்கள் இன்னும் பழைய ஒஸ்டீன் ஏ போர்டி கார்களைப் போல் ஓடுகிறது பிரித்தானிய ஆட்சி நினைவாக.  பள்ளிக்கூட மாணவர்கள் , விவாசாயிகள் , மீன் வியாபாரம் செய்பவர்கள் , பல தொழிலாளிகள் எல்லோரினதும் சுமையைத் தாங்குவது இது போன்ற சைக்கிள்கள் தான். அதோ தெரிகிறதே சுமைதாங்கி, அது போல என்று சொல்லுங்ககோவன்.

“நல்லது உம்மையும் உமது மகனையும் வைத்து கடைப் பின்ணணியில் சில படங்கள் “எடுக்கப் போகிறேன். அதற்கு உமது சம்மதம் வேண்டும்”

“படமா?. எதாவது உள்ளூர் பத்திரிகைக்கு அனுப்பப் போகிறீர்களா”?

“இல்லை. இது ஒரு பிரபல்யமான வெளிநாட்டு ஆங்கில சஞ்சிகையில் கட்டுரையுடன் வரப்போகிறது. பல நாடுகளில் இந்தக் கட்டுரையை வாசிப்பார்கள். அதோடு உமக்கு சஞ்சிகையில் இருந்தும், ரெலி சைக்கிள் உற்பத்தி செய்யும் ஸ்தாபனத்தில இருந்தும் தகுந்த வெகுமதியும்  டொலரில் கிடைக்கும்”.

டொலரில் வெகுமதி என்றவுடன் முருகேசுவுக்கு தான் பட்ட கடன் தான் நினைவுக்கு வந்தது. அதை தீர்த்தால் தனது கடன் சுமையை குறைக்கலாம் என்று யோசித்தான்.

“ என்ன யோசிக்கிறீர்.  இப்படி ஒரு சந்தர்ப்பம் உமக்கு கிடைக்காது”.

“ சரிசேர் உங்கள் இஸ்டம் போலச் செய்யுங்கள். இதனால் எனக்குப் பிரச்சனை வராமல் இருந்தால் சரி. இந்த பணம் எனக்குத் தரும் விஷயத்தை மட்டும் மற்றவர்களுக்கு சொல்லவேண்டாம” என்று முருகேசு வேண்டிக்கெர்டான்.

“சரி சரி. பயப்படாதையும். உமக்கு அதனால் பிரச்சனை ஒன்றும் வராது. உமது மகன் அந்த அழுக்கான உடுப்போடையே காட்சிதரட்டும். நீரும் அப்படித்தான். படம் இயல்பாக இருக்கட்டும். அந்த சுமைதாங்கியையும்; ஆலமரத்தையும் சேர்த்து அதற்கு கீழ் உம்மையும் சைக்கிளையும் வைத்து ஒரு படம் எடுப்பேன்.

“அது நல்லது அவைகளின் சேவையை ஒருவரும் கவனித்துக் கௌரவிப்பது கிடையாது. உங்கள் கட்டுரையும் படமும் இந்த சுமைதாஙகிகளை கௌரவிப்பதாக இருக்கட்டும. படம் எடுப்பதற்கு முன் எங்கள் கடையின தேனீரையும் வடையையும் சுவைத்துப் பாருங்கள். அவற்றின் தரம் அப்போது புரியும் என்று வந்தவருக்கு சொல்லிவிட்டு கடைக்குள் போனான் முருகேசு. கடைக்கு முன்னே போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்தபடி தனது கமெராவை எடுத்து தயார் செய்தார் வந்தவர். அதை ஆவலுடன் வேடிக்கை பார்த்தபடியே நின்றான் செல்வம்.

;

                                                                            ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book