1344925417_bc01f78950_z

                                                           

விசித்திர உறவு

கொழும்பிலிருந்து வடக்கே நாற்பத்தைந்து மைல் தூரத்தில் உள்ள இயற்கை வளம் நிறைந்த நிறைந்த கிராமம் பொல்ககாவலை. அக்கிராமத்தை வடக்கே போகும் ரயில் பிரயாணிகள் தெரியாதவாகள் இல்லை என்று துணிந்து சொல்லலாம். . பெயருக்கேற்ப தென்னந்தோட்டங்கள் நிறைந்த கிராமம் அது. பிரபல்யமான புகையிரதச் சந்தி அக்கிராமப் பெயரை  பலர் மனதில் பதிய வைத்து விட்டது. புகையிரத நிலையத்தில் நின்று கிழக்கே பார்த்தால் பனிபடர்ந்த மலைத்தொடர்களையும், தெயிலைத் தோட்டங்களையும், மேற்கே பார்த்தால் தென்னம் தோட்டங்களையும் வயல்வெளிகளையும்; காணலாம். கொழும்பு, கேகாலை, குருணாகலை ஆகிய நகரங்களில் இருந்து வரும் பாதைகள் ஒன்று சேரும் இடமது. கண்டிக்கும் பதுளைக்கும் யாழ்பாணத்துக்கும்; போகும் ரயில் பாதைகள் சந்திக்கும் முக்கிய புகையிரத நிலையமது. ஒரு காலத்தில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக மாடாக உழைத்த மலைநாட்டுத் தமிழர்கள், குடியுரிமையிழந்து, புலம்பெயர்ந்து தம் சொந்த மண்ணாம் தமிழ் நாட்டுக்குப் போவதற்காக  மூட்டை முடிச்சுக்களுடன் கடும் குளிரில் தலைமன்னார் போகும் இரவு மெயில் ரயிலின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இடம் பொல்ககாவலைப் புகையிரத நிலையம். பல இனக்கலவரங்களின்  போது யாழ்ப்பாணம் ரயிலில் செல்லும் தமிழ் பிரயாணிகளை வழிமறித்து அடித்து, அவர்களுடைய பொருட்களை சிங்களவர்கள் கொள்ளையடித்ததும் இந்த புகையிரத ஸ்தானத்தில் தான். பழமையில் ஊறின் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் கிராமம். அத்தகைய கிராம மண்ணில் இரு ஜீவன்களுக்கிடையே விசித்தரமான உறவு மலர்ந்து கிராமவாசிகளின் ஏளனமான பார்வைக்கு விருந்தாகுமென  எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அக்கிராமத்தில்தான் எங்கள் கதையின்; கதாநாயகி குணவதி நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்தாள். கதாநாயகி என்பதை விட கதாநாகன் என்று சொல்வதே மிகப் பொருத்தமாகும். வயதுக்கு அதிகமான வளர்ச்சி. அவளுடைய தோற்றமும் நடையும் குரல்வளமும் ஆண்களைப்  போன்றது எனக் கிராமத்தவர்கள் பலர் வர்ணித்தது உண்டு.  அவள் பேசும் போது அவளின் குரல் ஆண் குரலா அல்லது பெண் குரலா என்று வித்தியாசம் கண்டுபிடிப்பது மிகக் கடினம். இந்த மாற்றத்தை அவளுக்கு எட்டு வயதாயிருக்கும் போதே பெற்றோர்கள் அவதானித்தனர். பெண்மைக்கு வித்தியாசமான குணாதிசயங்களையுடைய அவளை ஏளனமாக அவளுடன் படித்த சக மாணவிகள் விமர்சித்ததுண்டு. பள்ளிக்கூடத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் நாடகங்கள் மேடை ஏறும் போது ஆண் வேஷத்துக்கு முதலில் தெரிந்தெடுக்கப் படுபவள் குணாவதிதான். அவளைக் “குணா” என்ற ஆண் பெயர் கொண்டு தான் அவளது தோழிகள் அழைப்பார்கள். அதைக் குணாவதி பெரிதாக எடுத்துக்கொல்வதிலலை. தன் ஆண்மைக் குணம் தனக்கு பாதுகாப்பிற்காக கடவுளால் கொடுக்கப்பட்ட வரம் என்பது அவள் கருத்து. மற்றைய பெண்களை விட தன்னிடம் பழக ஒரு வித பயமும் மரியாதையும் மாணவர்கள் வைத்திருந்ததை அவளால் அவதானிக்க முடிந்தது. மாணவர்களுடன் ஏதாவது பிரச்சனைகள் வந்தால் மாணவிகள் முதலில் குணாவைத் தான் முன்னின்று வாதாடி பிரச்சனையைத் தீர்த்து வைக்க அனுப்புவார்கள். அவளின் ஆண்மைத் தோற்றத்தினால், சில மாணவிகள் அவள் மேல் விளக்கமுடியாதளவுக்கு அன்பு வைத்திருத்தார்கள்.

“ எடியே குணா நீ மட்டும் உண்மையில் நீ ஒரு ஆணாக இருந்திருந்தால் நீதாண்டி என் வருங்காலக் கணவன் என்று” சில மாணவிகள் நகைச் சுவையாக சொல்லுவார்கள். அந்தவயதில்; ஒரு பெண்ணுக்கேற்ற மார்பக அமைப்பு, மெதுமை, மென்மையான குரல் அவளுக்கில்லாதது சகமாணவிகளுக்கு ஆச்சரியமாயிருந்தது.

                                                                                           ♣♣♣♣♣

புகையிரத நிலையத்துக்கருகே உள்ள தபாற் கந்தோரில் தபாற்காரனாக பல வருடங்களாக வேலை செய்யும் குணபாலாவின் இரு பெண்குழந்தைகளில் மூத்தவள் குணவதி.   குணாவின் தாய்  குணாவுக்கு எட்டுவயதாக இருந்த போது விஷ ஜுரத்தால் பாதிக்கப்பட்டு, இரு குழந்தைகளையும் குணபாலாவின் கையில் பாரம் கொடுத்து விட்டு இவ்வுலகையிலிருந்து  விடைபெற்றுவிட்டாள். அதன் பின் குணபாலாவின் விதவைத் தாய் சீலாவதியின் மேல் தான் இருகுழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு விழுந்தது. குணாவின் தங்கை ஞானாவதி ருதுவாகும் போது வயது பன்னிரெண்டு. அப்போது பதினைந்து வயதான குணா ருதுவாகாமல் இருந்தது சீலாவதிக்கும் குணபாலாவிற்கும் பெரும் கவலை. கிராமத்து சாஸ்திரியாரிடம் அவளது சாதகத்தை கொண்டு போய்க்காட்டிக் கேட்ட போது அவர் சொன்ன வார்த்தைகள் அவர்களை திடுக்கிட வைத்தது.

“ஆணாகப் பிறக்க வேண்டிய இச்சாதகக்காரி ஏதோ முற்பிறவியில் செய்த கர்மாவின் நிமித்தம் இப்போது பெண் பிறவி எடுத்திருக்கிறாள். இதனால் இப்பிறவியில் இவளுக்குச் சில எதிர்பாராத சம்பவங்கள் இவள் வாழ்க்கையில் நடந்து, உங்கள் குடும்பத்துக்கு அவப்பெயர் கூட வரலாம். நீங்கள் தினமும் பன்சலாவுக்குப் போய் புத்தபகவானைத் தியானித்து உங்கள் மகளைக் காப்பாற்றும் படி வேண்டுங்கள். இவளுக்குத் திருமணம் நடக்கும் ஆனால் ….” என்று முழுவதையும் விளக்கமாய் கூற விரும்பாமல் அரை குறையாகச் சொல்லிவிட்டு சாதகத்தை திருப்பி சீலாவதியின் கையில் கொடுத்து விட்டார்; சாஸ்திரியார்.  காலதாமதமாகி  பதினேலு வயதில் குணவதி ருதுவானாள்.

                                                                                      ♣♣♣♣♣

பொல்ககாவலை அரசினர் மஹாவித்தியாலத்தில். உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது  அவளுக்கு எதிர்பாராத விதமாக ஒரு கிராமப் பள்ளிக் கூடத்திலிருந்து மேற்படிப்பிற்காக புலமைப்பரிசு பெற்று அந்தப் பாடசாலைக்கு மாற்றாலாகி வந்த  “மல்லிகா” என்ற மாணவியின் அறிமுகம் அவளுக்குக் கிடைத்தது. படிப்பில் மல்லிகா வெகு கெட்டிக்காரி. அதுவுமல்லாமல் கலையார்வம் உள்ளவள். மல்லிகாவும் குணாவும் முதற் தடவையாக சந்தித்தபோது ஏதோ பல வருடங்களாக பழகியது போன்ற ஒரு உணர்வினால் அவர்கள் இருவரும் ஈர்க்கப்பட்டனர். புதிதாக பள்ளிக்கூடத்தில் சேர்ந்த மல்லிகாவை மாணவிகள் ஒன்று சேர்ந்து பயமுறுத்தும் சமயங்களில் அவளை அவர்களின் தொல்லைகளிலிருந்து மீட்டு, பாதுகாப்பு கொடுத்தவள் குணா.

பள்ளிக்கூடத்தில் அரங்கேறிய “ரோமியோ ஜுலியட்” நாடகத்தில் முக்கிய பங்கேற்று ஜுலியட்டாக நடித்தாள் மல்லிகா. அவளுடன் முதல்முறையாக ரோமியோவாக நடிக்கும் சந்தர்ப்பம் குணாவுக்குக் கிடைத்தது. அந்த நாடக ரோமியோ ஜுலியட். காதல் ஜோடிகளைப் பற்றி பாராட்டிப் பேசாதவர்கள் இல்லை. நாடகத்தின் பி;ன் அவர்கள் உறவு மேலும் வளர்ந்தது.  கணித பாடத்தில் தனது சந்தேகங்களை மல்லிகாவிடம் கேட்டு அடிக்கடி தெரிந்து கொள்வாள் குணா. அதைக் காரணம் காட்டி இருவரும் பாடசாலை முடிந்த பின்னரும் தனியாக வகுப்பில் சந்தித்து நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தச் சந்திப்பால் அவர்கள் உறவு வளரத் தொடங்கியது. அந்த உறவு காலப்போக்கில் ஒரு இறுக்கமான பிணைப்பை அவர்களிடையே தோற்றுவித்தது. அந்த உறவு காதலா அல்லது இரு பெண்களுக்கிடையேலான நட்பா என அவர்களின் சினேகிதிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.  குணாவை சில மாணவிகள் கேலிசெய்யும் போது அவளுக்காக அவர்களுடன் வாதாடுவாள் மல்லிகா. இருவரினதும் நட்பைப்பற்றி மாணவிகள் பலர் கேலியாகப் பேசிக்கொண்டனர். இவர்கள் உறவு தலமை ஆசிரியரின் காதில் எட்டியவுடன் அவர் இருவரையும் அழைத்து எச்சரிக்கை செய்தார்.

மல்லிகாவுடைய தொடர்பை அதிக காலம் நீடிக்க குணாவுக்கு கொடுத்து வைக்கவில்லை. ஆரம்பத்தில் குணபாலாவை தலைமையாசிரியர் அழைத்து குணா மல்லிகா சினேகிதத்தை பற்றி எச்சரிக்கை செய்த போது  அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவிலலை. ஏதோ இரு மாணவிகளுக்கிடையே உள்ள நட்பு என்றே கருதினான்.  ஆனால் அதைப்பற்றி அவன்; தாய் சீலாவதி சொன்னபோது அவள் சில வருடங்களுக்கு முன் உள்ளூர்ர் சாஸ்திரி சொன்னதை நினைவு படுத்தினாள். அதன் பிறகு  குணபாலாவின் போக்கு மாறியது.

“நீ படித்தது போதும் உன் ஆச்சுpக்கு வீட்டில் உதவியாக இரு” என  பாடசாலைக்கு போகாமல் குணாவை நிறுத்திவிட்டான். குணாவுக்கு அந்தத் தடை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் தந்தைக்கும் ஆச்சிக்கும் தெரியாமல் மல்லிகாவை வயல் வெளிகளில் சந்திக்க அவள் தவறவில்லை. விசித்திரமான அவர்கள் உறவு வேறு பரிணாமம் எடுத்தது. கணவன் மனைவி போல் மறைவாக பழகத் தொடங்கினர். குணாவின் மென்மை கலந்த வேறுபட்ட ஆண்மையினால் மல்லிகா கவரப்பட்டாள். சமூகத்தின் எதிர்ப்பு மேலும் அவ்விரு ஆத்மாக்களின் உறவை வலுப்படுத்தியதே தவிர பாதிக்கச்செய்யவில்லை.  ரோமியோ ஜுலியட் காதலை போல் எதிர்ப்பில் மேலும் கிளை விட்டு வளர்ந்தது.

சாஸ்திரியார் சொன்னது போல் தன் குடும்ப மானத்துக்கு மகள் பங்கம் ஏற்படுத்தி விடுவாளோ என்ற பயம் குணபாலாவை பீடித்துக் கொண்டது. குணவதியின் நடத்தையால் தனது இரண்டாவது மகளின் மண வாழ்க்கை பாதிக்கப்படுமோ எனப் பயந்தான் அவன்;. தாயின் ஆலொசனைப்படி கண்டியிலிருந்த  தனது சகோதரியின் மகன் சோமசிரிக்கு குணாவைத் திருமணம் செய்து கொடுக்க தீர்மானித்தான். சோமசிரி இராணுவத்தில் ஒரு படைவீரன், கைநிறையச் சம்பளம். சலுகைகள் வேறு. தந்தையினதும் ஆச்சிசீலாவதியினதும் திட்டம் குணாவுக்கு மறைக்கப்பட்டது. திடீரென ஒரு நாள் குணபாலா குடும்பம் கண்டிக்குப் பயணமாக வெளிக்கிட்ட போது குணா ஆச்சியிடம் அங்கு போவதன் காரணத்தைக் கேட்டாள். “ உன் கண்டி மாமியும் மச்சானும் எங்களைப் பார்த்து பலமாதங்கள் என்று கடிதம் போட்டிருக்கிறார்கள் அதுதான் போய் ஒரு கிழமை இருந்திட்டு வருவோம்”  என மழுப்பினாள் ஆச்சி சீலாவதி. குணபாலா மௌனமாயிருந்தான்.

கண்டியில் தனக்கும் சோமசிரிக்கும்  திடீர்த் திருமணம் நடக்கும் எனக் குணாவதி எதிர்பார்க்க வில்லை. சோமசிரியை அவள் கண்டு பல வருடங்கள். பொல்ககாவலைக்கு இரு தடவைதான் அவன் தாயுடன் வந்திருந்தான். இப்போது அவன் தோற்றத்தில் தான் எவ்வளவு மாற்றம். அவன் நடையில் கூட பெண்களைப் போல் ஒரு வகை நளினம். திருமணத்துக்கு பின் இரண்டாவது மகளுடனும் தாயுடனும்; ஊருக்குத்  திரும்பினான் குணபாலா. குணாவை சோமசிரிக்கு திருமணம் செய்து கொடுத்து கண்டியில் வாழவைத்து, அதன் மூலம் குணா – மல்லிகா உறவைக் கத்தரித்து விட்ட சாதனையால் அவன் மனம் நிம்மதியடைந்து. குடும்ப கொளரவம் சீரழியாமல்  காப்பாற்றி விட்டேனே என்ற ஒரு திருப்தி அவனுக்கு.

                                                                                          ♣♣♣♣♣

குணபாலா நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது வேறு. மகளின் திருமண வாழ்க்கை எதிர்பார்த்தது போல் சந்தோஷமாக இருக்கவில்லை. திருமணமாகி ஒரு மாதத்துக்குள் தன்னால் கணவனுடன் வாழ முடியாது, தன்னை திரும்பவும் ஊருக்கு அழைக்கும் படி மன்றாடி தகப்பனுக்கு கடிதம் போட்டிருந்தாள் குணாவதி. கடிதத்தில், தன் கணவனும் மாமியும் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும். அவர்களுக்கு மல்லிகாவுடன் தான் வைத்திருந்த உறவு எப்படியோ தெரியவந்து விட்டதாகவும் அதன் பிறகு அவர்கள் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் குறை கூறி தந்தைக்குக் கடிதம் எழுதியிருந்தாள். அதுவுமல்லாமல் தனக்கும் கணவனுக்கும் இடையே தாம்பத்திய உறவு தான் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியானதல்ல எனவும். உறவின் போது அவரின் சுயநலப் போக்கு தனக்கு அவர் மேல் வெறுப்பை வளர்த்திருக்கிறதே தவிர கணவன் மனைவி என்ற உறவை வளர்க்க வில்லை எனர் பச்சையாக நீண்ட கடிதம் எழுதியிருந்தாள்.

சோமசிரி பலாலிக்கு மாற்றலாகி போனது குணாவுக்கு ஒரளவுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அவளுக்கு ஒரு பிரச்சனை தீர்ந்த மாதிரி இருந்தது. இனி தான் ஊருக்குப் போகலாம், மல்லிகாவைத் திரும்பவும் சந்திக்கலாம் என மனதுக்குள் சந்தோஷப்பட்டாள்.

                                                                                        ♣♣♣♣♣

“பேராதனை  பல்கலைகழகத்தில் இடம் கிடைத்து விஞ்ஞான பட்டப்படிப்புக்கு பேராதனைக்கு வருகிறேன்” என்ற மல்லிகாவின் கடிதம் கிடைத்தவுடன் குணாவுக்கு மகிழ்ச்;சி தாங்கமுடியவில்லை. எவ்வளவு காலம் தான் அவளை விட்டு பிரிந்து இருப்பது?. அவள் தன் மிருதுவான கரங்களால் என் கரங்களை அழுத்தும் போது ஏற்படும் மனச் சந்தோஷத்திற்கு ஈடுதான் எது? குணவதியின் மனம் மல்லிகாவின் ஸ்பரிசத்தை தேடி ஏங்கியது. நாங்கள் இருவரும் பெண்கள் என்பதற்காக கணவன் மனைவியாக வாழ சமூகம் இடம் கொடுக்காதா? எங்கள் உரிமை மறுக்கப்படுமா?. சில வெளி நாடுகளில் இந்த உறவைச் சட்டம் ஏற்கும் போது இங்கு மட்டும் ஏன் இந்த உறவுக்குத் தடை? சோமசிரியுடன் என் மனத்துக்குப் பிடிக்காத சுகமற்ற தாம்பத்திய வாழக்கையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத் தானா சமூகம் எதிர்பார்க்கிறது? என் வாழ் நாள் முழுவதும் நான் என் கணவனிடம் சித்திரவதை அனுபவிக்க வேண்டுமா? இதற்கு ஒரு முடிவு வேண்டும் என மனதுக்குள் தீர்மானித்தாள் குணா,

“என்னை ஒருவரும் தேடவேண்டாம் எனக்கு சோமசிரியுடன் வாழப் பிடிக்கவில்லை” என சுருக்கமாக  கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மாமியாருக்கும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டாள் குணாவதி. கடிதத்தை கண்ட குணாவதியின் மாமியார்; பதறிப்போய் தன் தம்பிக்கு தந்தி அடித்து வரவழைத்தாள். குணாவதி எங்கே போனாள் என்பது எல்லோருக்கும் புதிராயிருந்தது. அவள் பொல்ககாவலைக்கு வந்திருக்கமாட்டாள் என்பது குணபாலாவுக்குத் தெரியும். வரமுன் மல்லிகா எங்கே என்பதை மல்லிகா படித்த பாடசாலையில் விசாரித்து அறிந்த பின்னரே கண்டிக்கு சென்றான் குணபாலா. திருமணத்துக்கு முன் குணவதிக்கும் மல்லிகாவுக்கும் இடையே இருந்த விசித்திரமான உறவைப் பற்றி தனக்கு ஏன் மூடி மறைத்தாய் என குணபாலாவிடம் கோபப்பட்டாள் அவன் தங்கை.

“திருமணத்துக்குப் பின் அவள் திருந்திவிடுவாள் என நாhன் நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு. இதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை” எனச் சொல்லி கவலைப்பட்டான் குணபாலா.  “இப்போது மல்லிகா பேராதனை பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள் என விசாரித்ததில் தெரியவந்தது. எதற்கும் நாங்கள் பேராதனைக்குப் போய் மல்லிகாவை சந்தித்து குணா அங்கு வந்தாளா எனக் கேட்போம். நீ அதுவரை பதட்டப்படாமல் என்னோடை புறப்பட்டு வா” எனத் தங்கையை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு பேராதனைக்கு புறப்பட்டான் குணபாலா

                                                                                           ♣♣♣♣♣

பேராதனைப் பல்கலைக் கழக வளாகத்தினூடாக அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது மஹாவலி நதி. இரு நாட்கள் தொடர்ந்து பெய்த மழையில் நதியின் ஓட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அந்த நதியில் தான் எத்தனையோ காதலில் தோழ்வியுற்ற பல்கலைக் கழக மாணவ மாணவிகள் தம்முயிர்களை மாய்த்துக்கொண்டார். மகாவலி நதிக்; கரை ஓரத்தில் ஒரே மாணவர் கூட்டம். ஏதாவது படகுப் போட்டி நடக்கிறதா என மாணவர்களிடம் விசாரித்தான் குணபாலா.

“அப்படிஒன்றுமில்லை. இருகாதலர்கள் நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்களின் பிரேதங்கள் கரையில் ஒதுங்கியிருக்கிறது. பொலீசும் விசாரணை நடத்துகிறது. இறந்தவர்களில் ஒருத்தி பல்கலைக்கழக முதல்வருடமாணவி அதுதான் அங்கு கூட்டம்” என்றுஒருமாணவனிடம்இரு;நதுபதில்வந்தது. அதைக் கேட்டவுடன் குணபாலாவுக்கு தலைசுற்றியது. அதுகுணவதியும்மல்லிகாவுமாகஇருக்குமோ? என்று அவன் மனம்படபடத்தது. அவன்நிலை தடுமாறுவதைக் கண்ட அவன் தங்கை

“ஏன் அண்ணே பதறுகிறாய். வா போய் யார் என்று பார்ப்போம் என் தமையனையும் அழைத்துக் கொண்டு அங்கு நின்ற மாணவர்களின் உதவியுடன் நதிக்கரைக்குச் சென்றாள்.

ஒருவரை ஒருவர் அணைத்தபடி கணவன் மனைவி போல் நதிக் கரையில் ஒதுங்கியிருந்த இரண்டு பிரேதங்களும் குணவதியுடையதும்   மல்லிகாவினதும என்பதை அடையாளம் கண்டு பிடிக்க இருவருக்கும் அதிக நேரம் எடுக்கவில்லை. பிரேதங்களின் உடல்கள் ஊதியிருந்தன. இருவர் கழுத்துகளையும் காட்டுப் பூக்களினாலான மாலைகள் அலங்கரித்தன, ஏதோ இறப்பதற்கு முன் கணவன் மனைவியாகி மாலை மாற்றிக்கொண்டார்களோ எனப் பார்பவர்களுக்கு எண்ணத் தோன்றும்.. இறந்த ஒரு பெண்ணின் தகப்பனும் மாமியும் வந்திருப்பதை அறிந்த பொலீஸ் சப் இன்ஸ்பெக்டா, உடனே அவர்களை ஒரு ஓரத்துக்கு அழைத்துச் சென்று

“இந்தக் கடிதம் இறந்து கிடக்கும் இரு பெண்களின் ஒருத்தியான மல்லிகா எனபவளின் அறையில் இருந்து அவளுடைய சினேகிதி ஒருத்தியால் கண்டெடுக்கப்பட்ட கடிதம். இதை வாசியுங்கள். அதன் பிறகு விசாரணையைத் தொடருவோம்” என்று  குணபாலாவின் கையில் கடிதத்தைக் சப் இன்ஸ்பெக்டர் கொடுத்தார். அவர் கொடுத்த கடிதத்தை நடுங்கும் கைகளால் வாங்கித் தங்கைக்கு சீலாவதிக்கும் கேட்கும் விதத்தில் மெதுவாக, அழுகை நிறைந்த குரலில் வாசிக்கத் தொடங்கினான் குணபாலா.

எங்கள் பெற்றோர், இனத்தவர், நண்பர்கள், சுமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு..

எங்கள் இருவருக்கும் இடையேலான உறவு விசித்திரமான உறவானாலும் ஒரு புனித உறவு. நாங்கள் ஒருவரை ஒருவர் மனமாறக் காதலித்தோம். எங்கள் உறவின் நோக்கம் உடலுறவல்ல. சமூகமும் நீங்களும் அதை தப்பாகக் கணக்கு போட்டீர்கள். பௌத்தர்களாகிய நீங்கள் போன பிறவியில் நம்பிக்கை வைத்திருப்பீர்களானால் எங்கள் உறவு போன பிறவியின் தொடர்கதை இப்பிறவி. முதல் முறை நாங்கள் பாடசாலையில் சந்தித்த போது ஏதோ எங்களுக்கிடையே புரியாத ஒரு ஈர்ப்பை நாம் உணர முடிந்தது. அதுவே காதலாக மலர்ந்தது. எங்களின் உறவை துண்டிப்பதற்காக எங்களில் ஒருத்தியான குணாவுக்கு கட்டாயத் திருமணத்தை நடத்தி வைத்தீர்கள். அவளது சொற்ப கால மணவாழ்க்கை சோகம் நிறைந்தது. நாம் இருவரும் பெண்கள் என்ற காரணத்தால் கணவன் மனைவியாகச் சட்டப்படி திருமணம்  செய்து கொண்டு வாழமுடியாது என எஙகளுக்குத் தெரியும் என எமக்குத் தெரியும். உங்களை விட்டு எங்கு சென்று நாம் வாழ்ந்தாலும் சமூகம் ஏளனமாகப் பேசி எம்மை ஒதுக்கி வைக்கும். அந்த துன்பம் நிறைந்த நிம்மதி அற்ற வாழ்வை இப்பிறவியில் அனுபவிப்பதை விட அடுத்த பிறவியிலாவது நாம் கணவன் மனைவியாகப் பிறந்து காதலராக ஒன்று சேர இறைவன் அருள் புரியட்டும். எங்கள் தற்கொலைக்கு நாங்களே பொறுப்பு. கடைசியாக ஒரு வேண்டுகோள். எங்கள் இருவரையும் தயவு செய்து நதிக்கரை ஓரத்தில் அருகருகே புதைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் புனித நதியின் அரவைணைப்பில் சமுதாயத்தின் தொந்தரவின்றி, நாஙகள் இருவரமு;; நீண்ட நித்திரை செய்ய விரும்புகிறோம். இந்த ஆசையையாவது சமுதாயம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கிறோம். தயவுசெய்து, பொளத்தர்களான எங்கள் உடல்களை தகனம் செய்யவேண்டாம்

இப்படிக்கு

என்றும் சமுதாயத்தால் பிரிக்கமுடியாத

குணாமல்லிகா

                                                                                                 ♣♣♣♣♣

(குறிப்பு- 2002ம் ஆண்டு, சிறிலங்காவின் தென்பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தை கருவாகக் கொண்டு கற்பனையும் கலந்து யதார்தமான இச்சிறுகதை எழுதப்பட்டது. பாத்திரங்களின் பெயர்களும், ஊர் பெயர்களும், சம்பவங்களும் கற்பனையே )

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book