Horoscope2

                                                     

செவ்வாய் தோஷம்

ஊரெலு சதாசிவம் சாஸ்திரியார் மைதிலியின் ஜாதகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். வலது கை விரல்கள் எதையோ கணக்கிட்டுககொண்டிருந்தன. அடிக்கடி பேப்பரில் குறித்து கொள்வதும் ஜாதகத்தையே முறைத்துப் பார்பபதுமாக இருந்தார். டாக்டர் ஒருவர் வைத்திய பரிசோதனை ரிபபோர்டைப் பார்த்து என்ன வியாதி என்று சொல்ல சிந்திப்பது போல் தேற்றமளித்தார் சாஸ்திரியார். அவருக்கு முன்னே கந்தையரும் பாக்கியமும் சாஸ்திரியார் உதடுகளில் இருந்து என்ன வார்த்தைகள் வெளிவரப் போகிறது என்பதை எதிர்பார்த்தபடி இருந்தனர். அடிக்கடி அவரது முகச் சுழிப்பு மைதிலியின் தந்தை கந்தையருக்கும் தாய் பாக்கியத்துக்கும் பதட்டத்தைக் கொடுத்தது. ஏதோ வைத்தியர் ஒருவர் மெடிக்கல் ரிப்போர்ட்டைப் பற்றி சொல்லப் போவது போன்ற மனப்பயம் அவர்களுக்கு. அதுவும் ஒரே மகள் முப்பத்திரண்டு வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறாள் என்றால் ஜாதகத்தில் எதோ குறை இருக்கவேண்டும். சதாசிவம் சொன்னால் தான் அவர்கள் நம்புவார்கள். அவர்களது குடும்ப வைத்தியர். வழக்கறிஞர் போல் குடும்ப சாஸ்திரி அவர். உதட்டை பிதுக்கிய சதாசிவத்தாரைப் பார்த்து:

“என்ன சொல்லுது மைதிலியின் ஜாதகம். கலியாணம் எப்ப நடக்கும். உந்த பெடியன்றை சாதகத்துக்கு பொருந்துமே “? பொறுமையை இழந்த கந்தையர் கேட்டார்.

பாவம் கந்தையா தம்பதிகள் குறைந்தது ஐம்பது பொருத்தங்களாவது மகளுக்கு பாhத்திருப்பாhகள். வயது கூடக் கூட எங்கே அவளுக்கு கலியாணம் நடக்காமல் போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு. அக்கா மகனைக் கேட்டு வந்த போது கந்தையர், ஜாதகப் பொருத்தம் பார்த்ததாலே கலியாணம் நடக்காமல் போய்விட்டது. அதை பாக்கியம் அடிக்கடி அவருக்குச் சுட்டிக்காட்டுவாள்.

“மெய்யே பாருங்கோ. உங்களுடைய அக்கா மகனுக்கு கலியாணம் நடந்து நாலு வருஷமாயிட்டுது. இப்ப இரண்டு பிள்ளைகளுக்கு அவன் அப்பா. அவனுக்கு மைதிலியை பொருத்தம் பார்க்காமல் செய்து வைத்திருந்தால் இப்ப பேரப்பிள்ளைகளையும் கண்டிருப்போம். சொந்த மச்சானுக்கு சாதகம் பார்க்க தேவையில்லை என்பினம். நீங்கள் கேட்டால் தானே”. பாக்கியம் குறைப்பட்டாள்.

“சரியான செவ்வாய் தோஷம் இருக்கு உங்கடை மகளுக்கு. லக்கனத்தில் செவ்வாய். பொருத்தமான செவ்வாய் தோஷமுள்ள மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் கெதியிலை விதவையாப்போகிற வாயப்புண்டு. அல்லது கணவனை நோயாளியாக்கிப் போடும. நான் இவ்வளவு காலமும் எத்தனையோ சாதகங்களை பார்த்திருக்கிறன் இது ஒரு சரியான பாவம் கூடிய சாதகம். பெடியன்டை சாதகம் பாவம் குறைந்தது. செய்து வைத்தால் பிறகு கெதியிலை உங்கடை மகள் விதவையாவாள்” திருவாய் மலர்ந்தருளினார் சதாசிவம்.

“உந்த ஜாதகக்காரன் கொழும்பிலை நல்ல வேலையிலை இருக்கிறான். எஙகளுக்குத் தெரிந்தவர் ஒருவர் தான் இந்த ஜாதகத்தை அனுப்பினவர். சீதனமும் அவ்வளவு தேவை இல்லை”

“எதுக்கும் செவ்வாய் தோஷம் உஙகடை மகளுடைய கலியாணத்துக்கு குறுக்காலை நிக்குது”, என்றார் சதாசிவம்.

“ சாத்திரியாh, நீங்கள் சொல்லுகிற தோஷம் எங்களுக்கு விளங்குதில்லை. இப்பதான் செவ்வாயிலை தண்ணீh இருக்கலாம் என்று ரொபர்ட் அனுப்பி ஆராச்சி நடக்கிறது. மனிதன் செவ்வாய் கிரகத்தில் வாழக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதாகவும் சொல்லுகினம். நீங்கள் என்னடாவெண்டால் அங்கை போகிறது தோஷம் என்கிறீர்கள். கொஞ்சம் விளக்கமாகய் தான் சொல்லுங்கோவன்” விஞ்ஞான ஆசிரியையாக இருந்த பாக்கியம் தனக்கு விஞ்ஞானம் தெரியும் என்பதை மறைமுகமாக எடுத்துக்காட்டினாள்.

சாஸ்திரியார் விளக்கினார்:

“ஒவ்வொருவருக்கும் அவர் அவர்கள் முற்பிறவியில் செய்த கர்மாக்களின்படி பிறக்கும் போது தோஷங்களோடு பிறக்கினம். அனைத்து கிரகங்களுக்கும் தோஷமுண்டு. ஆனால் பிரபல்யமானது செவ்வாய் தோஷம் தான். கிரகம் சிகப்பு நிற நிலத்தை கொண்ட படியால் செவ்வாய் எனப் பெயர் பெற்றது. செவ்வாய் இரத்த ஓட்டத்துடனும் யுத்தத்துடனும் தொடர்புள்ள கிரகம். ஆகவே குருதி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் ஜாதகத்தில செவ்வாய் கிரகத்திற்கும் தொடர்புண்டு. கிரேக்கர் கூட செவ்வாயை போர்க் கடவுளாகவே கருதினர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் ஆய்வுசெய்தால் தோஷம் இல்லை என்று கூற முடியாது. தோஷம் வேறு, பாதிப்பு வேறு. பிறக்கும் போது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் வீடு இராசியாகிறது. லக்கனத்துக்கு செவ்வாய் 2,7,8,12 ல் இருந்தால் தோஷமாகும். இராசிக்கும் சுக்கிரனுக்கும் 2, 7, 8, 12ல்  செவ்வாய் இருப்பின் தோஷம் கடுமை மற்றைய இடங்களில் நிற்கும் செவ்வாய் தோஷமில்லாது சந்தோசத்தை தருவார். ஆணுக்கு 2இலும் , பெண்ணுக்கு 4-12 இலும் , ஆண் பெண் இருவருக்கும் 8ல் செவ்வாய் இருந்தால் தோஷபாதிப்பு அதிகமாகிறது. 2ல் செவ்வாய் உள்ள ஜாதகத்திற்கு 12ல் செவ்வாய் உள்ளவர் கன பொருத்தமாகும். அதே போன்று 4ல் செவ்வாய் உள்ள ஜாதகத்துக்கு 4ல் செவ்வாய் உள்ள தோஷமே சேர்க்க வேண்டும். 7, 8 ல் செவ்வாய் நிற்க இதே அமைப்பு சேர்க்க பாதிப்பில்லை. செவ்வாய் 2ல் நின்று அவ்விடம் மிதுனம் அல்லது கன்னியாகில் தோஷமில்லை. 4ல் நின்று மேஷம் விருச்சிகமாகில் தோஷமில்லை. 7ல் நின்று மகரம், கடகமாகில் தோஷமில்லை. 8ல் நின்று தனுசு, மீனமாகில் தோஷமில்லை. 12ல் நின்று கும்பம், சிம்மம் ஆகில் தோஷமில்லை”, சதாசிவத்தார் விளக்கினார்.

“அடேயப்பா தலைசுத்துது இதைக் கேட்டக. செவ்வாய் இருக்கிற வீட்டைப் பொறுத்துத்தானா  பலன் கிடைக்கும்”?

“ஆமாம். 2 இல் செவ்வாய் என்றால்- நெருப்பு, திருடர் பயம் ஏற்படும். 4 இல் செவ்வாய் – தாயால் திருமணம் தடைப்படும். 7 இல் செவ்வாய் காதலில் தோல்வி ஏற்படும். 8ல் செவ்வாய் மர்மஸ்தான நோய் ஏறபடும். 12 இல் செவ்வாய் பொருந்தாத முதலீடு செய்து இழப்பு”.

“அப்ப செவ்வாய் நல்லது செய்யாதா”?, கந்தையர் கேட்டார்.

“ஏன் செய்யாது?. செவ்வாயின் கேந்திர, கோணத்தில் குரு சுக்கிரன் நின்று வலுக்க பேரிகை யோகம” உண்டாகும். செவ்வாய் 3, 6, 10,11ல் நின்று குரு பார்க்க அதன் தசகாலம் அனைத்தும் நலமும் கூடும். மகரச்செவ்வாய் யோகம். அதோடு சந்திரன் சேர்ந்திருப்பின் சசிமங்கள யோகம். பிறக்கும் பிள்ளைகள் கீர்த்தியுடன் வாழ்வார்கள். செவ்வாயுடன் குரு கூட குருமங்கள யோகம் கிடைக்கும். செவ்வாய் சுக்கிரனோடு கூடியிருப்பின் சுக்கிர மங்கள யோகம். பெண்ணுக்கு கூடாது ஆனால் ஆணுக்கு தொழில் செய்யும் மனைவி கிடைக்கும். மீனத்தில் செவ்வாய் சுக்கிரன் கூட எதிர்பாராது தன வரவு கிடைக்கும்”

“அப்ப வெள்ளையர்கள் திருமணத்துக்கு முன் செய்கிற இரத்தப் பரிசோதனை (Blood Test)  என்று சொல்லுங்கோவன். அது அவையள் பிள்ளைகள் குறையில்லாமல் பிறக்கவும், கருச்சிதைவு நடைபெறாமல் இருக்கவும் பரிசோதிக்கினம” பாக்கியம் மேலும் விளக்கம் கேட்டாள்.

“இருக்கலாம். எனது அனுபவப் படி சரியாக செவ்வாய் தோஷப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யாவிடில் பெண்ணுக்கு தோஷப்பாவம் கூடுமாகில் ஆணை வருத்தக்காரனாக்கிவிடும். அதே போன்று ஆணுக்கு தோஷ பாவம் கூடுதலாகின் பெண்ணைப்பாதிக்கும். கருச்சிதைவும் ஏற்படலாம்”, சதாசிவம் விளக்கினார்.

“சாஸ்திரியார் நீங்கள் செவ்வாய் தோஷத்தைப் பற்றி சொன்னது இவ்வளவும் தானா? கந்தையர் கேட்டார்.

“இல்லை இன்னும் பல விஷயஙகள் இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்லி உங்களை குழப்ப விருப்பமில்லை. என்னிடம் உங்கடை மகளுடைய சாதகத்துக்கு பொருத்தமான ஒரு சாதகம் இருக்கு. உங்களுக்கு விருப்பம்மெண்டால் பார்க்கட்டே. முற்றானால் எனக்கு தரகர் கொமிஷன் தந்தால் போதும” சதாசிவம் மன் ஜாதகக் கட்டுக்குள் இருந்த ஒரு சாதகத்தை தேடி எடுத்தார். செவ்வாய் தோஷத்தை அடிப்படையாக வைத்து உழைக்கலாம் என்ற நப்பாசை அவருக்கு.

“அதுக்கென்ன பார்ப்போமே. மாப்பிள்ளை எப்படி? வடிவானவனே? படித்தவனே?. சாதி சனம் எப்படி? என்ன வேலை? எந்த ஊர்? பாக்கியம பேள்விகளட மேல கேள்விகள்; கேட்டாள்.

“முதலிலை ஜாதகத்தையும் படத்தையும் பாருங்கோ. பெடியன் பெயர் இரமணன். கொழும்பிலை இன்ஜினியராக வேலை செய்கிறான். தகப்பனும் இன்ஜினியராக இருந்து இரண்டு வருஷத்துக்கு முந்தி தான் இறந்தவர். பொறுப்பில்லாத பையன். ஆனால் வயது வித்தியாசம் தான் குறைவு. படத்தைப் பாருங்கோவன் என்று படத்தை நீட்டினார் சாஸ்திரியார்.

படத்தை வாங்கிப பார்த்தார் கந்தையர். “எங்கேயோ பெடியனைப் பார்த்தமாதிரி இருக்கு” என்றார்.

“ எங்க தாருங்கோ பார்ப்பம்”, என்று  கந்தையரிடம் இருந்து படத்தை வாங்கினாள் பாக்கியம்.

“என்ன உங்களுக்கு ஆளைத் தெரியவில்லையே.? உங்களோடை வேலை செய்த சங்கரப்பிள்ளையர் கொழும்பிலை இருந்து அனுப்பின மாப்பிள்ளை தான் உது:”, எதையோ கண்டுபடித்தவள் மாதிரி பாக்கியம சொன்னாள்.

“அட அதே பெடியன். அது பொருத்தமில்ல என்று முடிமாவடி சாஸ்திரி சொல்லிப் போட்டார். பிறகு என்னத்துக்கு திரும்பவும் இதை எடுப்பான்” கநதையர் சொன்னார்.

சதாசிவம் சாஸ்திரியாhருக்கு முடமாவடி சாஸ்திரியார் பொறுத்தமில்லை என்று சொன்னது அவர் பிழைப்பை கெடுபடபது போல் இருந்தது. நல்லகாலம் முடமாவடி சாஸ்திரியார் இறந்து ஆறுமாதமாகிவிட்டது. அவர் பாhத்த பொருத்தம் சரியில்லை என்று சொன்னால் திரும்பவும் அவரைப் போய் கேட்கவே போகினம் ? சதாசிவம் சிந்தித்தார்.

“அவர் சாதகத்தை சரியாக பார்க்கவில்லை போல இருக்கு. இரண்டு பெருக்கும் ஒரே இராசி, ஒரே இலக்கனம். அதோடை செவ்வாய் தோஷப் பாவமும் சமனாக இருக்குது. தாலிப் பொருத்தம் கூட உண்டு”.

“எதுக்கும் வேண்டாம் என்று தள்ளி வைத்த கலியாணப் பேச்சை திரும்பவும் எடுக்கிறது  எனக்கு நல்லதாகத் தெரியவில்லை” என்றார் கந்தையர்.

“நீங்கள் உதையெல்லாம நுணுக்கமாய் பார்க்கப் போனால் மைதிலுக்கு கலியாணம் நடந்தமாதிரிதான். நான் வாறன் எனக்கு வேலை இருக்கு” சதாசிவம் புறப்பட்டார். கந்தையரும் பாக்கியமும் ஒருவர் முகத்தைப் ஒருவர் பார்த்தபடியே திகைத்து நின்றனர்.

                                                                                      ♣♣♣♣♣

மாதங்கள்  பல சென்றன.. ஒரு நாள் சதாசிவம் சாஸ்திரியார் கந்தையரை சந்திக்க  நேர்ந்தது.

“ என்ன கந்தையர் மகளுக்கு ஏதும் கலியாணம் ஒழுஙகாகி விட்டதே”?

“இல்லை” என்றார் சுருக்கமாக கந்தையர்.

“ அப்ப என்னிடம் ஒரு நல்ல சாதகம் இருக்குது மகளுக்குப்பொருத்தம் பார்ப்போமா,”?

“ தேலையில்லை” பதில சொன்னார் கந்தையர்.

“ ஏன’ தேவையில்லை:?.சாஸ்திரியார் கேட்டார்.

“ அவள் தனக்கு கலியாணம் வேண்டாம் என்று சொல்லி மதம் மாறி கன்யியாஸ்திரியாகி விட்டாள்” என்றார் கவலையொடு கநதையர்.

சாஸ்தரியார் ஒன்றுமே பேசாமல் அந்த இடத்தை விட்டு நழுவினார்.

                                                                                   ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book