Postoffice 2                                     

தலைமுறை இடைவெளி

ஓய்வுபெற்ற போஸ்ட்மாஸ்டர் சிவராசா அன்று பின்னேரம் சேர்ச் ஹோலில் நடக்க விருக்கும் அவர் அங்கத்தினராக உள்ள சங்கத்தின் இரவு போசன விருந்துக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை அவர் ஒவ்வொரு வருடமும் தவறவிடுவதில்லை.

“வெளியிலை நல்லாய் மத்தியானத்திலை இருந்து ஸ்னோ கொட்டிக்கொண்டிருக்கிறது. இன்று பின்னேரம் உங்கடை டிப்பார்ட்மெண்டிலை வேலை செய்தவர்களின் அசோசியேசன் டின்னருக்கு போக வேண்டும் என்று சின்ன பிள்ளையளைப் போல அடம்பிடிக்கிறயளே வெளியிலை நிலைமை தெரியவில்லையா உங்களுக்கு?”; சிவராசாவி;ன் மனைவி கணவனைப் பார்த்து கரிசனையுடன் கேட்;டாள். அவள் அப்படி கவலைப்படுவதற்கு காரணம் இருக்கத்தான் செய்தது. இருதய நோய் உள்ளவர்கள் குளிரில் போவதையும் டிரைவ்வேயில் ஸ்னோ தள்ளுவதையும் தவிர்க்கவேண்டும் என்று அடிக்கடி தொலைக்காட்சியில் சொல்வதை அவள் பார்த்திருக்கிறாள். சிவராசாவுக்கு “அன்ஜையினா” ( Angina) என்ற இருதய வியாதி. அதுவும் குளிர் காலத்தில் கூடுதலாக இருதய வலி வந்துவிடும். டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தின் புகையை நாக்குக்கு கீழ் இரண்டு தரம் அடித்து அவர் சற்று நேரம் ஓய்வு எடுத்த பின்னர் வலிபோய்விடும். இந்த முறையையே சிவராசா கடந்த சில மாதகாலமாக கடைப்பிடித்து வந்தார். பல பரிசோதனைகளுக்கு பின்னர், அவசியம் இருதய அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று டாக்டர் சொல்லுவார் என நினைத்தார் சிவராசா. ஆனால் டாக்டர் சொன்ன கருத்து வேறு. “ உமது இருதயக் குழாய்களின் இரண்டு தான் எழுபது விகிதம் அடைபட்டுள்ளது. ஆகையால் உடனடியாக உமக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் இல்லை. தேவைப் பட்டால் அன்ஜியோ பிளாஸ்டி செய்ய வேண்டி வரும். இந்த மருந்தை தொடர்ந்து பாவியும். இன்னும் ஆறுமாதத்திற்கு பிறகு பரிசோதித்து முடிவு எடுப்போம்” டாக்டர் சொன்னது அவருக்கு நிம்மதியைக் கொடுத்தது. ;

சிவராசா, போஸ்ட் மாஸ்டராக தமிழ் சிங்களப் பகுதிகளில் சுமார் முப்பத்தைந்து வருடங்கள் சேலை செய்து சீப் போஸ்மாஸடராக ரிட்டையரானவர். அவரது சிகரட் குடிக்கும் பழக்கம் நைட் டியூட்டி செய்யும் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. வேலை செய்து முடிந்தபின் நண்பர்களுடன் சேர்ந்து, மூன்று கிலாஸ் சாராயமும் இரண்டு சிகரட்டும் ஊதி உள்ளே தள்ளத் தொடங்கி, பின் ஒரு நாளைக்கு ஒரு பக்கட் சிகரட்டை புகைத்து வளையம் விட்டு இரசிக்கும் அளவுக்கு பழக்கம் வளர்ந்துவிட்டது. இந்த சிகரட் குடிக்கும் பழக்கமும் மது அருந்தும் பழக்கமும் அவர் கலியாணம் முடிக்குமட்டும் தான். சீதனத்தோடு வந்த அவர் மனைவி பாhர்வதியின் சக்தியானது அவரின் பழக்கத்தை முற்றாக மாற்றிவிட்டது.

அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையின் சின்னமாக ஜெயராசா பிறந்தான். அவன் பிறந்த பிறகு இரண்டு தடவை பார்வதி கருவுற்றும் குழந்தை கருவில் தங்கவில்லை. ஊர் சாஸ்திரியார் ஒருவரைக் கலந்தாலோசித்தபோது ஜெயராசாவுக்கு சகோதர பொருத்தம் இல்லை என்று கையை விரித்துவிட்டார். “ஏதோ கொள்ளி வைக்க ஒரு ஆண் குழந்தையாவது எங்களுக்கு இருக்குதே. அது கடவுள் விட்ட புண்ணியம்” என்று மனத்திருப்தியோடு சிவராசா தம்பதிகள் வாழ்ந்தார்கள். ஜெயராசாவுக்கு ஒன்றென்றால் சிவராசாவும் மனைவியும் பதை பதைச்சுப் போவார்கள். தனியாக அவனை ஒரு இடத்திற்கும் போய்வர விடுவதில்லை. செல்லப்பிள்ளையாக வளர்ந்தான் ஜெயராசா. அவன் கேட்பதெல்லாம் பெற்றோரிடமிருந்து கிடைத்தது. விதம் விதமான உடைகள் அணிந்து பள்ளிக்கு வருவதை பார்த்து அவன் நண்பர்கள் “ கொடுத்துவைத்தவன் “ என்று சொல்லிப் பொறாமைப் படுவார்கள்.

சிவராசா போஸ்மாஸ்டராக வேலை செய்தாலும் போதிய செல்வம் படைத்தவர் என்பது பலருக்குத் தெரியும். தனது உத்தியோகத்திலிருந்து வரும் சம்பளத்தை மட்டும் நம்பி அவர் வாழவில்லை. குருநாகலில் இருபது ஏக்கரில் தோட்டம் , பூனகரியில் பத்து ஏக்கர் நெல்வயல் இப்படி பல சொததுக்களுக்கு அதிபதியாக இருந்தார் அவர். அவரின் தகப்பன் விட்டுச் சென்ற முதுசத்துடன் மனைவி கொண்டு வந்த சீதனமும் சேர்ந்து அவரை அவ்வூர் பணக்காரர்களில் ஒருவராக சமுதாயத்தைக் கணிக்க வைத்தது. ஊரில் கார் வைத்து ஓடுகிற அளவுக்கு அந்தஸ்து படைத்தவர் அவர். “மொரிஸ் மைனர் சிவராசா” என்று அவரின் நண்பர்களால் அழைக்கப்பட்டார். அதற்கு காரணம் சிவராசா என்ற பெயரில் இவரைத் தவிர இரண்டு போஸ்ட்மாஸ்டர்கள் இருந்தார்கள். ஒருவர் உயரம் குறைந்தவர் அதனால் “கட்டை சிவராசா” என்ற அடைப்பெயரைப் பெற்றாhர். மற்றவர் நிறத்தில் கறுப்பாக இருந்தபடியால் “கறுவல் சிவராசா” என்ற பெயர் சூட்டப்பட்டது. இப்படிப் பட்ட பெயர் வைத்து அழைப்பது அக்காலத்தில் ஒரு வழக்கம். பார்வதியின் கணவன் சிவராசாவுக்கு மனைவி மூலம் கிடைத்த செல்வம் அவரின் அந்தஸ்த்தை சமூகத்தில் உயர்த்தியது. மாமன் தன் சொந்தச் செலவில் கட்டிய பிள்ளையார் கோயிலுக்கு சிவராசா தர்மாகர்த்தாவானார். பார்வதியின் தகப்பன் இறந்தவுடன் அவர் பாவித்த மொரிஸ்மைனர் காருக்கும் சொந்தக்காரரானார் சிவராசா. அதுவே அவருக்கு அந்த பட்டம் அவர் பெயருடன் இணையக் காரணமாக இருந்தது. ஆரம்பத்தில் வாகனம் ஒட்ட பழகுமட்டும் பார்வதியின் தகப்பனுக்கு டிரைவராக இருந்த தேவராசாவை தொடர்ந்து சாரதியாக வைத்துக்கொண்டார். தேவராசாவுக்கு பார்வதியை சிறுவயதிலேயே இருந்து தெரியுமாகையால் அவனும் சிவராசா குடும்பத்தின் நம்பிக்கைக்கு பாhத்திரமானான். ஜெயராசாவை பள்ளிக்கூடத்துக்கு காரில் கூட்டி போய் வருவது தேவராசாவின் முக்கிய கடமைகளில் ஒன்று. வெய்யிலில் ஜெயராசா நடந்து சென்றால் எங்கே அவன் நிறம் குறைந்து விடுவானோ என்று சிவராசாவும் பார்வதியம் பயந்தார்கள். சில சமயம் லீவில் சிவராசா வந்து நிற்கும் நேரங்களில் தானே மகனை பள்ளிக்கூடத்துக்கு காரில் கூட்டிப்போய்வருவார். அவ்வளவுக்கு மகனைப் பாதுகாப்புடன் வளர்த்தவர் சிவராசா. ஒரு நாள் காய்ச்சல் என்று படுத்த ஜெயராசா அன்று இரவு காய்ச்சல் கூடி பிதட்டத் தொடங்கினாhன். சிவராசாவும் மனைவியும் பயந்து, பத்து மைல் தூரத்தில் இருந்த யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு கொட்டும் மழையில் காரில் கொண்டு சென்றதை பற்றி பார்வதி அவருக்கு அடிக்கடி நினைவூட்டுவாள். இந்த பழைய சம்பவங்களை நினைக்கும் போது அவருக்கு சில சமயம் சிரிப்புத்தான் வரும். காலத்தோடு பிள்ளைகளின் குணம் எப்படி மாறுகிறது என்று நினைக்கும் போது அவருக்கு மனதுக்குள் வருத்தமாயிருந்தது.

கனடாவுக்குத் திருமணமாகி ஜெயராசா சென்றபோது தன்மேல் அவனுக்கு இருந்த மரியாதையும் அக்கரையும்; இப்போது முற்றாகமாறிவிட்டதை அவரும் மனைவியும் அவதானிக்கக் கூடியதாயிருந்தது. அவன் தன்னோடு ஓருகாலத்தில் மகனாய் மட்டும் பழகாமல் நண்பனாகவும் சில விஷயங்களில் பழகியதை அவர் நினைத்துப் பார்த்தார். சில சமயம் இருவரும் ஒன்றாக ரீகல் தியேட்டருக்கு ஆங்கிலப்படம் பார்ப்பதற்கு பார்வதிக்கு தெரியாமல் போனதுண்டு.

ஊரில் வீடு, நிலம், வயல்களை விற்று மகன் ஜெயராசாவின் ஸ்பொன்சரில் கனடாவுக்கு புலம் பெயர்ந்தனர் சிவராசா தம்பதிகள். அவர்களுக்கு ஆரம்பத்தில் மகனின குடும்பத்துடன் வாழ்வது பெருமிதமாக இருந்தது. ரிச்மணட் ஹில்லில் நான்கு அறைகள் கொண்ட ஒரு தனி வீடு வாங்கி அதில் தன் அந்தஸ்தை தன் நண்பர்களிடையே வெளிப்படுத்துவதில் ஜெயராசாவுக்கு பெருமை. வீடு வாங்குவதற்குத் தேவையான பணத்தின் ஒரு பகுதியை சிவராசா தம்பதிகள் ஊரில் உள்ள சொத்துக்களை விற்று வந்த பணத்தில் கொடுத்துதவினர். வீட்டில் மகனுக்கும் . மருமகளுக்கும் பேரனுக்கும் பாவிப்பிற்காக தனித்தனியாக கார் வேறு. இதோடு எல்லாவித சொளகரியங்களும் இருந்தும் தங்களுக்கு எக்காரணத்தால் பேஸ்மெண்டை வாழ்வதற்கு மகனால் ஒதுக்கித் தரப்பட்டது என்று அவர்களுக்கு விளங்குவது கடினமாக இருந்தது. ஒவ்வொரு அறையின் பாவிப்பை பற்றி மருமகள் காரணம் காட்டி விளக்கி, தனது மாமன் மாமியினது பிரத்தியோக வாழ்க்கையில் தலையிடாது இருக்கவே ஒரு பெரிய பேஸ்மெண்டை ஒதுக்கியுள்ளோம்; என்று மருமகள் சொன்னபோது சிவராசா தம்பதிகள் வாயடைத்துப் போனார்கள். காற்றோட்டம் குறைந்த பேஸ்மெண்டில் சிறைக் கைதிகள் போல் வாழ்ககை நடத்தினார்கள். ஊரில் தாம் பெரிய வீட்டில் வாழ்ந்த வாழ்ககையோடு ஒப்பிட்டு பார்த்தபொழுது தமது விதியை நொந்துக்கொண்டார்கள். மூன்று கார்கள் வீட்டில் இருந்தும் தெரிந்தவர்களை சந்தி;க்க வெகுதூரம் செல்வதற்கு பொதுசன போக்குவரத்தையே நம்பி வாழ்ந்தனர் அத்தம்பதிகள். பல தடவை வாய்விட்டு மகனிடமும் மருமகளிடமும் . பேரனிடம் தங்களை காரில் கொண்டு போய் விடும் படி கேட்டும் தக்க பதில் சாதகமாக கிடைக்காதலால் மனமுடைந்தார்கள் தம்பதிகள். ஒரு காலத்தில் மகனை தனியாக நடந்து போக விடமால் பாதுகாத்தவர் சிவராசா. ஆனால் இன்றோ கனடாவில் அவர்கள் நிலமை வேறு. எந்த கடும் வெய்யிலிலும் பஸ் ஏறி லைப்ரரிக்கும் நண்பர்களை சந்திக்கவும் போய்வந்தார். வீட்டில் சமையல் வேலையெல்லாம் பார்வதி கவனித்தாள். அவளை கனடா வந்தபின் மகனின் குடும்பத்துக்கு சமையல்காரியாகவே ஜெயராசா குடும்பம் நடத்தியது. கணவனும் மனைவியும் வேலைக்குப் போய் களைத்துப்போய் வந்தபின் சமையல் செய்வது இலகுவான காரியமா?. தன்னை; தகப்பனும் தாயும் எவ்வளவுக்கு கஷ்டப்படாமல் வளர்த்தனர் என்பதை ஜெயராசா மறந்துவிட்டானா? அல்லது தலைமுறைகள் பெற்றோர்களுக்கு கொடுக்கும் மதிப்பும் அன்பும் மாறுகிறதா என்பது சிவராசாவுக்கு புரியாத புதிராயிருந்தது. அக்காலத்தில் தினமும் அப்பா அப்பா என்று அவரை சுற்றி வந்தவன் இப்போ அவன் தன்னோடு சில வார்த்தைகள் பேசுவது கூட அருமையாக இருந்தது. வேலை வேலை என்று இராப் பகலாய் ஓடி ஓடி உளைக்கவே நேரம் அவனுக்கு சரியாயிருந்தது. தோளில் போட்டு தாலாட்டி, படுக்கைக்குப் போகும் போது கதை சொல்லி தூங்க வைத்து வளர்த்த சிவராசாவின் அருமைப் பேரன் கூட மாறிவிட்டான். My Great Grand Pa என்று அடிக்கடி அவன் சொன்ன வார்ததைகள் காலப்போக்கில் மறைந்துவிட்டன. இப்போது Grand Pa போய் ஓல்ட் மான் ( Old Man ) என்று தன்னைப்பற்றி நண்பர்களோடு பேரன் விமர்சிப்பது அவர் காதில் விழாமல் இல்லை. அதற்காக வீணாக அவனோடு வாக்குவாதப்பட அவர் விரும்பவில்லை.

ஒரு நாள் ஹோம் வேர்க் என்று ஒரு ஆங்கிலக் கட்டுரையை எழுதி வந்து சிவராசவிடம் பேரன் காட்டியபோது அதில் பல இலக்கணப் பிழைகள் இருப்பதை கண்டு, சிவராசா சுட்டிக் காட்டியது அவனுக்கு பிடிக்கவில்லை. “ உங்கடை இங்கிலீஸ் ஓல்ட் இங்கிலீஸ். நான் எழுதுவது மொடர்ண் கனேடியன் இங்கிலீஸ். “ என்று தன் பிழைகளை ஏற்க மறுத்துவிட்டான். ஏன் வீண்; பிரச்சனை என்று சிவராசா ஒதுங்கி நின்றார்.

அன்று கொட்டும் ஸ்னோவில் சங்கத்தின் டின்னருக்கும் போக வேண்டும் என்று கணவன் அடம்பிடித்தது பார்வதிக்கு எரிச்சலைக் கொடுத்தது. “அப்பா, ஜெயத்திடம் அல்லது உங்கடை பேரனிடம் கேட்டுப் பாருங்கோவனஇ; காரிலை கொண்டு போய் உங்களை விடச்சொல்லி. இங்கை இருந்து வெகு தூரமில்லையே. உவையள் மூன்று பேரில் ஒராள் கொண்டு போய்விட்டால் பிறகு வரக்கை குறிப்பிட்ட நேரத்துக்கு இன்னொருத்தர் உங்களை அங்கை வந்து கூட்டிக்கொண்டு வரலாம் தானே. இந்த உதவியை கூட அவர்களாலை செய்ய முடியாதே?. நுPங்கள் அவையளுக்கு முந்தி எவ்வளவு செய்திருக்கிறியள் என்று உணர்ந்து பார்க்கினமே?” பார்வதி சற்று கோபத்துடன் கேட்டாள்.

“ இஞ்சாரும். உமக்கு நல்லாய் தெரியும் உமது மருமகளின்டை குணம். அவன் ஜெயம் கூட அவளின் கட்டளையின் படி தான் நடக்கிறவன். அவன் பேரன் ரவியை விடும். அவன் மத்தியானமே இண்டைக்குத் தன்றை பிரணட்ஸ்சோடை சினிமாவுக்கும், அதுக்குப் பிறகு டின்னருக்கும் போகிறான் எண்டு சொல்லிப்போட்டான். போகிற வழியிலை இரண்டு பேரை காரிலை ஏற்றிக் கொண்டு போகவேண்டும் என்று மத்தியானமே நான் இண்டைக்கு அசோசியேசன் டின்னருக்கு போகிற விசயத்தை சொன்ன போது எங்கே தன்னி;டம் லிப்ட் கேட்;கப்போறனோ என்ற பயத்திலை முன்கூட்டியே தனது புரோகிராமைச் சொல்லிப்போட்டான். அவன் ஜெயம் கூட மனைவியோடை பின்னேரம் பேர்த்டே பாhட்டி ஒன்றுக்கு அவசியம் மிசிசாகா போகவேண்டுமாம். மிசிசாகாவில் உள்ள அவர்கள் வீடு கன தூரம், அதாலை நேரத்தோடை வெளிக்கிட வேண்டும் எண்டு சொல்லிப்போட்டான். திரும்பி வர நேரமாகுமாம் இனி நான் எப்படி அவையளை வற்பறுத்தி கட்டாயம் என்னை டின்னருக்கு கொண்டு போய் விடுங்கோ என்று கேட்க முடியும்?”

“அப்ப டின்னருக்குப் போகாமல் நில்லுங்கோவன்”

“ அதெப்படி முடியும்?. பதினைந்து டொலர் குடுத்து டின்னருக்கு டிக்கட் வாங்கிட்டன். அதோடை இந்த சந்தர்பத்திலை தான் என்னோடை வேலை செய்த பழைய பிரண்ட்;ஸ் மாரையும் சந்தித்து கதைக்கலாம். “

“ சரியப்பா. நான் சொல்லுறதை சொல்லிப்போட்டன். இனி உங்கள் இஸ்டம். போகக்கை குளிர் தாங்கிற மாதரி உடுத்துக்கொண்டு போங்கோ. இங்கை இருந்து பஸ் ஸ்டொப் வேற கிட்டயில்லை. ஸ்னோவிலை நடந்து போகிறது கவனம். வழுக்கப் பார்க்கும். போகக்கை உங்கடை ஸ்பிறே மருந்தையும் கொண்டு போங்கோ. தேவைப்பட்டால் பாவியுங்கோ” பாhர்வதி கணவனுக்கு பாதுகாப்புக்கான சில கட்டளைகளையிட்டாள்.

“ அப்ப நீரும் வாருமேன டின்னருக்கு. உமக்கு என்றை பிரண்ட்ஸ் கன பேரைத் தெரியும்”

“ உங்களுக்கு விசரே. நான் உந்த குளிரிலை போய்வந்தால் பிறகு படுத்தபடுக்கையாய் படுக்க வேண்டும். பிறகு யார் உங்களைக் கவனிக்கிறது? போய் சேர்ந்ததும் ஆரிடமாவது செல் போன் இருக்கும்,; போன் செய்து சொல்ல மறந்திடாதையுங்கோ”

சிவராசா தலையாட்டிவிட்டு டின்னருக்குப் புறப்பட ஆயித்தமானார்.

                                                                                         ♣♣♣♣♣

கனடா வாழ் இளப்பாறிய போஸ்ட் மாஸ்டர் சங்கத்தி;ன் டின்னர் நடக்கும் சேர்ச் மண்டபத்தில்; அந்த குளிரிலும் கூட்டத்துக்கு குறைவில்லை. வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு பின் அங்கத்தினர்கள் ஒன்று கூடி குலாவும் விழா அது. இரவுபோசனத்தோடு சேர்த்து நடனம், பாடல், நாடகம், பிங்கோ, ஏலம் போன்ற நிகழ்ச்சி நிரல்கள். அங்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருத்தரும் தமது கடந்த கால வாழக்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆரம்பத்தில் சங்கம் இருந்த நிலையை விட இப்போது அதன் தரம் உயர்ந்து பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாம் அடிக்கடி சந்தித்து பேசி குலாவக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது என்று பலர் சொன்ன கருத்தை சிவராசா ஆமோதித்தார். “சிலர் கூட்டத்தில் வந்து பேச வேண்டும் என்பதற்காக நடந்த விஷயங்களிலை குற்றம் குறை சொல்லி பேசுவார்கள் ஆனால் அவர்களைச் செயல்பட விட்டால் அவர்களின் செயல்பாடு பூஜ்யம்தான். தாங்களும் செய்யமாட்டினம் மற்றவர்களையும் செய்ய விடாது ரூல்ஸ் கதைப்பதில் கெட்டிக்காரரர்” என்றார் சிவராசா. சிலருக்கு, சிவராசா யாரைத் தாக்கிப் பேசுகிறார் என்று விளங்கவில்லை.

சிவராசாவுக்கு தெரிந்தவர்கள் பலர் அங்கிருந்தனர். அவருக்கு உதவியாளராக இருந்த எமானுவல் அவரைக் கண்டதும்; ஓடி வந்து. “ மாஸ்டர் எப்படி இருக்கிறியள்?. இந்தக் குளிருக்கு சூடாக ஒரு பிளக் லேபல் விஸ்கி எடுக்கிறியளா?. எண்டை கார் பூட்சுக்குள் இரண்டு போத்தில் இருக்கு.” என்றான். இமானுவல் தன் குடிப்பழக்கத்தை விட்ட பாடாகயில்லை. ஒரு முறை அவரோடு தபால் பங்கிடும் பகுதியில் குடி போதையில் இருந்த இமானுவல், சக ஊழியர் ஒருவரை பேசத்தகாத வார்த்தையால் பேசியதால் தற்காலிகமாக வேலையில் இருந்து நிறுத்தப்பட்டபோது சிவராசா கொடுத்த வாக்குமூலமே அவனை காப்பாற்றியது என்பது இமானுவேலுக்குத் தெரியும். அதனால் அவர் மேல் அவனுக்கு ஒரு தனி மரியாதை. ஆனால் அவன் குடிப்பழக்கம் மட்டும் மாறியதாயில்லை.

“ கேட்டதுக்கு நன்றி இமானுவல். நான் இப்ப குடிப்பதில்லை. நீர் இன்னும் குடியை விடவில்லையா” என்றார் சிவராசா.

“ அதையெப்படி விட முடியும் மாஸ்டர்.” என்று சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து இமானுவேல் நகர்ந்தான். தன் தோளில் ஒரு கை பட்டதும் திரும்பிபப் பார்த்தார் சிவராசா. சிரித்தபடி நின்றது வேறு ஒருவருமில்லை. அவரோடு நுவரேலியாவில் ஒன்றாக தபாற்கந்தோரில் மூன்று வருடம் வேலை செய்த சண்முகம்தான்.

“மாஸ்டர் எப்படி சுகம் உமக்கு அன்ஜயினா என்று கேள்விப்பட்டேன். உண்மையா. சுகர் லெவல் எப்படி?. கொலஸ்டிரோல் உமக்கு இருக்கே?. சிவராசாவின் உடல் நலத்தைப் பற்றி; விசாரித்தார் சண்முகம். தனக்கு உள்ள நோயைபற்றிய விபரம் எவ்வளவுக்கு நண்பர்களிடையே பரவியிருக்கிறது என்று நினைக்கும் போது சிவராசாவுக்கு சிரிப்புத் தான் வந்தது. சந்திக்கும் போது நோய்பற்றி விசாரிக்கும் பழக்கம் ஊரில் இருந்து கனடாவுக்கும் வந்துவிட்டது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார். நல்லகாலம் நான் இந்த பெயருள்ள மருந்தை டாக்டர் சொல்லி சுகருக்கு பாவிக்கிறன். நீரும் உமக்கு சுகர் இருந்தால் அதை பாவியும் சுகம் வரும் என ஊரில் சொல்வது போல், சண்முகம் மருத்துவராக மாறவில்லை.

போஸ்ட் மாஸ்டர் வேலை செய்;தவர்கள் தம்மோடு திணைக்களத்தில் ஒன்றாக போஸ்ட்மாஸ்டராக வேலை செய்தவர்களோடு உரையாடும் போது “ மாஸ்டர்” என்று அன்பாக அழைப்பது வழக்கம். அதே தொனியில் சண்முகம் அக்கரையாக சிவராசாவை கண்டபோது கேட்டார்.

“ உண்மைதான் . ஆனால் இப்ப பைபாஸ் தேவையில்லை என்று டாக்டர் பரிசோதித்து சொல்லிப்போட்டாh. நல்லகாலம் எனக்கு சுகர் கொலஸ்டிரோல் எல்லாம் நோமல்”

“ அன்ஜையினா இருக்கும் போது. இந்த குளிரிலை அப்ப எப்படி வந்தனீர். பஸ்சிலா?”

“ இல்லை என்மகன் காரிலை கொண்டு வந்துவிட்டவர். பத்துமணிக்கு பேரன் வந்து காரிலை கூட்டிப்போவான்” என்று முழு பூசணிக்காயை சோற்றுக்கள் மறைத்த மாதிரி பொய் சொன்னார் சிவராசா. தன் மகனையும் பேரனையும் விட்டுக்கொடுக்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. அதுவும் தன் மகனின் அந்தஸ்தை விட்டுக்கொடுக்கமுடியுமா?

“ அது தானே பார்த்தேன். அந்தக் காலத்தில் மொரிஸ்மைனர் கார் நீர் வைத்திருந்தவராச்சே. அது மட்டுமா உமது மகன் நல்ல உத்தியோகத்திலை இருக்கிறாராம். ரிச்மண்ட் ஹில்லில் டபிள் கராஜ் உள்ள ஒரு பெரிய தனி வீடாம். உண்மையா?

“ ஓம்.” என்று சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். எங்கே மனுசன் மகனின் உத்தியோகம் . சம்பளம் போன்ற விபரங்களை கேட்கத்தொடங்கிவிடுவாரோ என்ற பயம் அவருக்கு. பாவம் சிவராசா மகனின் மரியாதையை காக்க தான் சொன்னது பொய் என்பதை நினைத்து அவர் மனம் குறுகுறுத்தது. என்ன செய்வது?. அவர் நிலமை அப்படி.; அவருக்குத் தெரியாமல் சிவராசா பயணம் செய்த அதே பஸ்சில் பயணம் செய்த ஒருவர் அவர் அருகே நின்றதை சிவராசா கவனிக்கவில்லை.

நிகழ்ச்சிகளும் டின்னரும் முடிய இரவு பத்தாகிவிட்டது. சிவராசா யாரும் தான் பஸ்சில் திரும்பிப் போவதை பார்க்காதிருக்க சாப்பாட்டை அவசரம் அவசரமாக முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.

                                                                                               ♣♣♣♣♣

வீடு திரும்பும் தனக்கு இப்படி நடக்கும் என்று சிவராசா எதிர்பார்க்கவில்லை. பக்கத்து வீட்டு சீன நண்பர் வைசாங், அவரை ஆஸ்பத்திரிக்கு அவசர சிகிச்சைக்காக கூட்டி செல்ல வேண்டிய நிலை அவர் சங்கத்தின் டின்னர் முடிந்து வீடு திரும்பும் போது ஏற்பட்டது. நல்லகாலம் வீட்டு டிரைவ் வேயில் வழுக்கி விழுந்ததால் ஓரளவுக்கு வைசாங்கின்;. உதவியோடு; ஆஸ்பத்திரிக்கு அவருக்குப் போகக்கிடைத்தது. வீட்டில் மகனோ பேரனோ அவரை அழைத்துப் போக இருக்கவில்லை. இவரது கால் முறி;ந்துவிட்டதாக எக்ஸ்ரே எடுத்து பார்த்துச் சொன்னார்கள். காலில் பெரிய கட்டுடன் வீடு பக்கத்துவிட்டுக்காரன் காரில் வீடு திரும்பும் வழியில்

“ஏன் இந்த வயதில் ஸ்னோவில் வெளியே போனீர்கள் என்று வைசாங்; ஆங்கிலத்தில் கேட்டார்.”
தான் டின்னருக்குப் போக வேண்டிய காரணத்தைச் சொன்னார் சிவராசா.

“ஏன் உமது மகன் அல்லது மருமகள் அல்லது பேரன் காரில் கூட்டிப்போயிருக்கலாமே “ என்றார் வைசாங்.

“அவர்களுக்கு வேறு அவசர வேலை இருந்தது. இல்லாவிட்டால் அவசியம் கூட்டிப்போயிருப்பார்கள்” மகனினின் குடும்பத்தின் மேல்; மேல் பக்கத்து வீட்டு சீனக்காரன் வைத்திருந்த மதிப்பு குறைந்து விடுமோ என்ற எண்ணம் சிவராசாவுக்கு.

“ அப்போ நீர் என்னைக் கேட்டிருந்தால் நான் கூட்டிப்போயிருப்பேனே” என்றாhர் வைசாங

சிவராசாவால் பதில் சொல்ல முடியவில்லை. இந்தச் சீன மனுசனுக்கு உள்ள நல்ல இதயம் என் மகன் குடும்பத்துக்கு இல்லையே என நினைத்தபோது அவர் கண்கள் கலங்கின. என்ன செய்வது இளம் தலைமுறைகளின் போக்குகள் காலத்தோடு மாறுகின்றன. அவர்களுக்கும் என்னைப் போன்ற நிலை ஒரு காலம் வராமலா போகப்போகுது என்று தனக்குள் ஆறுதல் சொல்லிக்கொண்டார்.

                                                                            ♣♣♣♣♣

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book